Published:Updated:

கடலிலும் நீர்... குளத்திலும் நீர்... நீச்சல் தெரிந்தால் இரண்டும் ஒன்றே..! தேர்வு பயம்போக்கும் உளவியல் கதை #MotivationStory

கடலும் தண்ணிதான், குளமும் தண்ணிதான். நீச்சல் தெரியுமாங்கிறதுதான் முக்கியம். உனக்கு நீச்சல் தெரியும். ஆனா பயம். இதுவரைக்கும் நீ எழுதின எல்லாத் தேர்வுபோலதான்

கடலிலும் நீர்... குளத்திலும் நீர்... நீச்சல் தெரிந்தால் இரண்டும் ஒன்றே..! தேர்வு பயம்போக்கும் உளவியல் கதை #MotivationStory
கடலிலும் நீர்... குளத்திலும் நீர்... நீச்சல் தெரிந்தால் இரண்டும் ஒன்றே..! தேர்வு பயம்போக்கும் உளவியல் கதை #MotivationStory

தேவி வாசலிலேயே காத்திருப்பதை கணேஷ் பார்த்தான். பள்ளியிலிருந்து வரும் வழியில் மகன் ரமேஷ் எதுவும் பேசாமல் அமைதியாகவே நடந்து வந்தான். 
வண்டியை நிறுத்தி வீட்டுக்குள் நுழையும்போதே கணேஷ் தன் கண் ஜாடையால் எதுவும் கேட்கவேண்டாம் என்று செய்கை செய்தான். தேவி அதைப் புரிந்துகொண்டாள். ரமேஷ் சுமந்துகொண்டிருந்த புத்தகப் பையை வாங்கிக்கொண்டாள். 
ரமேஷ் இருவருக்கும் காத்திராமல் நேரே அவன் அறைக்குப் போனான். தேர்வு நேரம் வேறு, தேவிக்குள் ஆயிரம் கேள்விகள். 


ஏன் ரமேஷின் பள்ளியிலிருந்து திடீரெனக் கிளம்பிவரச் சொன்னார்கள். அதுவும், `அம்மா வேண்டாம், அப்பாதான் வரவேண்டும்' என்று ஏன் சொன்னார்கள், பிள்ளை ஏதாவது தவறு செய்துவிட்டானா, கொஞ்ச நாள்களாகவே அவன் சரியில்லை. அறைக்குள் அடைந்தே கிடக்கிறான். எப்போதும் புத்தகத்தோடுதான் இருக்கிறான். ஆனாலும் மதிப்பெண் சரிந்துகொண்டே போகிறது. அதுவும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு. இப்படியே போனால் அவன் எதிர்காலம் என்னதான் ஆகும். பிள்ளையின் முகத்தில் சிரிப்புப் போய் பலகாலம் ஆகிவிட்டது.
தேவிக்கு இப்படி நினைத்ததும் அழுகை வந்தது. அடக்கிக்கொண்டாள். 
கணேஷ் மூடியிருந்த டி.வியின் கவரை எடுத்துவிட்டு அதைத் துடைத்தான். பின்பு ரிமோட் எடுத்து ஆன் செய்தான். 
என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள நான் பதற்றத்தில் இருக்கிறேன். இவர் என்னடாவென்றால் டி.வியை ஆன் செய்துகொண்டிருக்கிறார். 
``ரொம்ப நாளா பயன்படுத்தாததால ரொம்ப தூசி...” என்று சொல்லிவிட்டு பாடல்கள் ஓடும் ஒரு சேனலை வைத்தான். அதில் ரமேஷுக்குப் பிடித்த கதாநாயகன் நளினமாய் ஆடிக்கொண்டிருந்தான். கணேஷ் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சத்தத்தைக் கூட்டினான். அறைக்குள் இருக்கும் ரமேஷுக்குக் கேட்கும் அளவுக்கு. 

``ஏங்க, என்னதான் ஆச்சு? பள்ளிக்கூடத்துல என்ன சொன்னாங்க? இவன் ஏன் இப்படி இருக்கான்?"

கணேஷ் பதில் சொல்லாமல் இருந்தான். ரமேஷ் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தான். அவன் பார்வை டி.வியின் மேல் விழுந்தது. கணேஷ் அவனிடம் ரிமோட்டை நீட்டினான். 
``டி.வி பாத்துக்கிட்டிரு கண்ணா, அப்பா இப்போ வர்றேன்” 
கணேஷ் தேவியை அழைத்துக்கொண்டு கிணற்றடிக்கு வந்தான்.
``நீங்கதான் ரமேஷோட அப்பாவா?” கேட்கும்போதே அவள் முகம் அத்தனை கடுகடுப்பாக இருந்தது.
“ஆமாம்”
“உட்காருங்க. `டென்த் பி’ ரமேஷை வரச் சொல்லுங்க” பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் சொன்னாள் அந்த ஆசிரியை.
``மேடம், எதுவாயிருந்தாலும் அவன் வர்றதுக்குள்ள வெளிப்படையா சொல்லுங்க. அவன் முன்னாடி வேண்டாம்.”
``என்ன சொல்றது சார் , இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம். போனவருஷமே இந்த போர்ஷன் எல்லாம் முடிச்சாச்சு. இதே பாடத்துக்கு போனவருஷம் வச்ச தேர்வுல எல்லாம் உங்க பையன் நல்ல மார்க் வாங்கினான். ஆனா இந்த வருஷம் வரவர ரொம்ப மோசம். எது கேட்டாலும் திருதிருன்னு முழிக்கிறான். உங்க பையன் பாஸ் பண்ணுவான்னு நினைச்சுத்தான் போன வருஷம் பாஸ்பண்ணிவிட்டோம். ஆனா இப்படிச் சொதப்புவான்னு நாங்க நினைக்கல. ஒரு அப்பாவா நீங்க என்ன சொல்றீங்க...”
கணேசுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ரமேஷ் வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறான். போனில் கூட நண்பர்களிடம் பேசுவதில்லை. டி.வியை மூடி வைத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. 
ரமேஷ் வந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. கால்கள் லேசாக ஆடியது. கணேஷுக்கு மனம் பதறியது.
அடடா6, இவன் என் பிள்ளை. ஏன் நடுங்குகிறான், கொடிய மிருகத்தின் எதிரில் நிற்கும் சிறு மான் போல அச்சத்தோடு நிற்கிறான். எப்படி இத்தனை நாள் இதைக் கவனிக்காமல் விட்டோம், பொதுத்தேர்வு பூச்சாண்டி காட்டி நாளெல்லாம் மிரட்டி வைத்திருக்கிறார்களோ, அவன் நடுங்குவதைக் காணச் சகியாமல் எழுந்து கட்டிக்கொண்டான்.


அப்படி அவன் செய்வான் என்று அந்த ஆசிரியை எதிர்பார்க்கவில்லை, ரமேஷும்தான்.
``ஒண்ணும் இல்லடா கண்ணா, நாம ரெண்டு நாள் ஊருக்குப் போறோம். எக்ஸாம் டைம் ஆச்சா அதான் நானே வந்து லீவு சொன்னேன். அவ்வளவுதான். நீ போய் உன் பையை எடுத்துட்டு வந்திடு. நான் வெயிட் பண்றேன்”
ரமேஷ் பதில் சொல்லாமல் நகர்ந்தான்.
``மேடம், நடக்கப் போறது வெறும் தேர்வுதான். இதுல கிடைக்கிற வெற்றியோ தோல்வியோ வாழ்க்கையைத் தீர்மானிக்காதுன்னு சொல்லவேண்டிய நீங்களே இப்படி பயம் காட்டலாமா? எப்படியோ விஷயத்தை கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி. பையன் படிப்பை இனி நான் கவனிச்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

``இப்ப என்ன சொல்றீங்க? நிஜமாகவே நாம டூர் போறோமா ” - தேவி  சுரத்தில்லாமல் கேட்டாள்
 ``போறோம். கண்டிப்பா போறோம்.” 
தேவிக்கு கணேஷைத் தெரியும். ஒரு தகப்பனாகத் தன் மகனைச் சோர்விலிருந்து மீட்க விரும்புகிறான். அதுசரிதான் என்று தோன்றியது.
பக்கத்தில் இருக்கும் கடற்கரை நகருக்குப் பயணமானார்கள். ரமேஷ் வெளியே கிளம்பியதும் குதூகலமாகி விட்டான். கடற்கரைக்குப் பக்கத்திலேயே ஒரு அறை எடுத்துத் தங்கினார்கள். 


“ரமேஷ் நாம பீச்சுல ஸ்விம் பண்ணலாமா?” 
“அய்யோ அப்பா வேண்டாம்,”
“ஏன் ரமேஷ் உனக்கு நீச்சல் தெரியுமே, அப்புறம் ஏன் பயம்?”
“இல்லப்பா, நாம் குளத்தில் தான் ஸ்விம் பண்ணியிருக்கேன். இது கடல்பா. அலையெல்லாம் இருக்கு. அதான் பயம்”
கணேஷ் அவன் தோளில் கைப்போட்டுக்கொண்டே நடந்தான். தேவி பின்னால் வந்தாள்.
“ரமேஷ்,,இந்தக் கடல்ல நான் நிறைய நீந்தியிருக்கேன். பாதுகாப்பான பகுதிதான். அதுவும்போக நீச்சல் தெரிஞ்சவனுக்கு கடல் என்ன, குளம் என்ன? கடல்ல நீந்தனும்னா கொஞ்ச தூரம் உள்ள போய்ட்டாப் போதும். அலைத் தொல்லை இருக்காது. அப்புறம் நம்ம ஜாலியா நீந்தலாம். என்ன சொல்ற?”
“புரியுதுப்பா... ஆனா, பயமாயிருக்கு”
கணேஷ் ரமேஷின் தோள்களை இறுக்கினான்.
“அப்பா இருக்கேன். அதுக்குமேல என்ன ”
ரமேஷ் ஒரு முறை அப்பாவைப் பார்த்தான்.
”அதுதானே நீங்க இருக்கிறப்போ எனக்கென்ன பயம்?”
வேகவேகமாக உடை மாற்றிக்கொண்டு கடலை நோக்கி ஓடினான். 
இருவரும் ரொம்ப நேரம் நீந்திக் கிடந்தார்கள். தேவி இருவரையும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக இருவரும் ஆசை தீர்ந்து கரையேறினார்கள். உடை மாற்றிக்கொண்டார்கள். 


கணேஷ், ரமேஷ் அருகில் போனான்.
கொஞ்ச நேரம் கழித்து கணேஷ் ரமேஷிடம் பேசினான்.
“ரமேஷ், பப்ளிக் எக்ஸாம நினைச்சு பயப்படுறியா?”
ரமேஷ் மௌனமாயிருந்தான்.
“அது தேவையில்லைன்னு நினைக்கிறேன். கடலும் தண்ணிதான், குளமும் தண்ணிதான். நமக்கு நீச்சல் தெரியுமாங்கிறதுதான் முக்கியம் ரமேஷ். உனக்கு நீச்சல் தெரியும். ஆனா பயம். இதுவரைக்கும் நீ எழுதின எல்லாத் தேர்வுபோலவேதான் இந்த பொதுத்தேர்வும். இதுல பயப்பட என்ன இருக்கு? தேர்வுங்கிறது ஒண்ணும் கடல் இல்லை. ஆனா தேர்வுபயம்தான் மூழ்கடிக்கும் கடல். நாம தைரியமா இருந்தா அந்தக் கடல் நம் காலடிக்குக் கீழ்தான். எப்பவும் அப்பா உன் கூடவே துணைக்கு இருப்பேன். அப்புறம் என்ன பயம்? 
ரமேஷுக்கு அப்பா பேசுவது முழுவதும் புரிந்ததோ இல்லையோ ஆனால் அவர் கடைசியாகப் பேசின வார்த்தைகள் நன்கு புரிந்தது. 
‘எப்போதும் அப்பா உடன் இருப்பார்’ என்ற நினைப்பே அவனுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது.