Published:Updated:

சித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி! ஹலோ... ப்ளூடிக் நண்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி! ஹலோ... ப்ளூடிக் நண்பா
சித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி! ஹலோ... ப்ளூடிக் நண்பா

சித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி! ஹலோ... ப்ளூடிக் நண்பா

முந்தைய பாகங்கள்

மொத்தம் எட்டுக் குண்டு வெடிப்புகள். சுமார் 300 பேர் சாவு; 500 பேர் காயம். இலங்கைத் தீவு ஈஸ்டர் அன்று ரத்தக்களறியாகி நிற்கிறது. புலிகளுடனான இறுதி யுத்தம் நிகழ்ந்து பத்தாண்டுகளாய் இலங்கையில் பெரிதாய் குருதி வாடை ஏதுமில்லை என்ற குறை தீர்த்திருக்கிறார்கள். ரத்தத் திட்டுகள் தோய்ந்த இயேசுநாதர் சிலையும், உயிரற்று இருக்கும் மனிதர்களின் உடல்களும் நம்முடைய‌ மனசாட்சியை அசைத்துப் பார்க்கின்றன.

குண்டுவெடிப்புகளில் பல‌ தற்கொலைப்படைத் தாக்குதல் எனத் தெரிய வந்துள்ளது. செய்தவர்கள் இலங்கைக் குடிமக்கள் என்றும் உறுதி செய்திருக்கிறார்கள். 

இன்று இணையத்தில் பொதுவாய்க் கிடைக்கும் தகவல்களையும், சில தனிப்பட்ட இணையக் குழுக்களில் பகிரப்படும் தகவல்களையும் கொண்டே மிகச் சக்தி வாய்ந்த குண்டுகள் செய்துவிட முடிகிறது. ('உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமல் சொல்லும் வசனம் நினைவிருக்கலாம்.) டைம் பாம் மற்றும் ரிமோட் கன்ட்ரோலில் வெடிக்கச் செய்யும் நுட்பம் ஏதும் அவர்களிடம் இல்லாததாலேயே மனித வெடிகுண்டு என்ற‌ வழியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் எனக் கணிக்க முடிகிறது. 

இன்னொரு விஷயம் பத்து தினங்களுக்கு முன்பே இத்தாக்குதல் தொடர்பாய் வந்த துல்லியமான‌ உளவுத் தகவலை அரசு கவனிக்காமல் உதாசினம் செய்திருக்கிறது! அதையொட்டி ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளும் அடித்துக்கொள்கிறார்கள்.

நிலைமையைக் கையாள அவசர நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது இலங்கை அரசு. ஏற்கெனவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என‌ சமூக வலைதளங்கள் அங்கே முடக்கப்பட்டுள்ளன. இரண்டு டஜன் ஆள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 300 பேரைப் பலி கொள்ளுமளவு அங்கு இஸ்லாமியர்களுக்கு என்ன கோபம், அதுவும் கிறிஸ்துவர்களின் மீது? இதன் மூலம் அவர்கள் விடுக்கும் செய்தி என்ன?

***

தேர்தல் நாளன்று சிதம்பரம் தொகுதியிலுள்ள‌ பொன்பரப்பி என்ற கிராமத்தில் தலித் குடியிருப்புகள் சாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தாக்குதலின் பின்னணியில் பா.ம.க‌-வும் ஆர்.எஸ்.எஸும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இச்சம்பவத்தையொட்டி கமல்ஹாசன் தான் 'மருதநாயகம்' படத்துக்கு இளையராஜாவுடன் இணைந்து எழுதிய பாடலின் வரிகளைச் சுட்டி மூன்று நூற்றாண்டுகளாக நிலைமையில் மாற்றமில்லை என்று ட்வீட் செய்துள்ளார். “மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி” என்பவை அவ்வரிகள். மக்கள் நீதி மய்யம் தலைவர் சொல்வது சரியே.

இது சாதியத்தைப் பதிந்த சினிமா பாடல். கமல் சொல்ல மறந்த கதை ஒன்றுண்டு. அது சினிமா பாடலால் அதிகரித்த சாதியம் பற்றியது. இதே இளையராஜா இசையில் கமல் திரைக்கதை எழுதி நடிக்க, வாலி எழுதிய ''போற்றிப் பாடடி பெண்ணே'' என்ற 'தேவர் மகன்' படத்தின் பாடல்தான் அது. தென் மாவட்டங்களில் ஓர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த‌ இளைஞர்கள், குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட இனத்தவர்களைக் கேலி பேச‌ ஏதுவாய் அமைந்த பாடல் அது. என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் தாங்களே நேரடியாகக் கண்ட அத்தகைய சம்பவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

பிற்பாடு 'சண்டியர்' என்ற படத்தைத் தொடங்குவதாகக் கமல் அறிவிக்க, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் தலைப்பை 'விருமாண்டி' என்று மாற்றினார். எப்போதெல்லாம் தன் சினிமா வாழ்வில் வீழ்ச்சியைச் சந்திக்கிறாரோ அப்போது சாதியை வைத்துப் படமெடுத்து தன்னை மீட்டுக்கொள்வார் என்ற குற்றச்சாட்டும் கமல் மீது உண்டு.

நான் தனிப்பட்ட முறையில் கமல் சாதி வெறியைத் தூண்டும் உள்நோக்குடன் 'தேவர் மகன்', 'விருமாண்டி' படங்களை எடுத்ததாக நம்பவில்லை. அவரது நேர்மையின் மீது இன்றளவும் நம்பிக்கை உண்டு. அவர் பகுத்தறிவாளர்; சாதிப் பற்றில்லாதவர்; மத உணர்வற்றவர் என்றே நம்புகிறேன். 'தேவர் மகன்' படத்தில் வரும் பஞ்சாயத்துக் காட்சிகூட முதுகுளத்தூர் கலவரத்தின்போதான‌ முத்துராமலிங்கம் மற்றும் இம்மானுவேல் சேகரன் பஞ்சாயத்து நிகழ்வின் பாதிப்பில் எழுதப்பட்டது என்ற செவி வழிச்செய்தி உண்டு. படத்தில் சாதி வெறி விடுத்து கல்வியைக் கையிலெடுங்கள், அதுதான் முன்னேற வழி என்ற செய்தியைத்தான் சொல்லியிருப்பார் (மெட்ராஸ் படத்தில் பா.இரஞ்சித் சொல்லும் செய்தியும் அதுவே!) அவ்வகையில் ''போற்றிப் பாடடி பெண்ணே'' பாடல் சாதிப் பெருமிதத்தை பகடி  செய்வதே ஆகும்.

ஆனால், ஒரு செயலுக்கான நம் நோக்கமும் இறுதி விளைவும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை என்பார்களே, அது போல் போற்றிப் பாடடி பெண்ணே பாடலின் விளைவு வேறு மாதிரி அமைந்துவிட்டது. அதன் விளைவைப் பார்த்து கமல் அதிலிருந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும். சமூகப் பொறுப்பு மிக்க கலைஞனாக அது முக்கியமானது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக‌க் கமல் அப்படிச் செய்யவில்லை. 2017-ல் முத்துராமலிங்கம் என்ற படத்தில் (கௌதம் கார்த்திக் நடித்தது) அதே இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய ''தெக்கத்திச் சிங்கமடா'' என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். 'போற்றிப் பாடடி' போலவே இதுவும் குறிப்பிட்ட சாதியைத் துதி பாடுகின்ற‌ பாடல்.

கமலின் ஐடியாதான் என்ன? அதுவும் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் பங்கேற்கிற‌வர் தனது முந்தைய பிழைகளை நேர்மையாய் ஒப்புக்கொள்வதே அறம்.

***
பா. இரஞ்சித்தின் நீலம் அமைப்பு கடந்த வாரங்களில் இரு 2 நிமிட‌ குறும்படங்களை வெளியிட்டிருக்கிறது. Share Auto மற்றும் Lovers in the Afternoon. இதில் ஷேர் ஆட்டோ தீண்டாமை எப்படி நமக்கே கேடாய் முடியும் என்று சொல்லும் ஓர் எளிய‌ நீதிக்கதை.

இக்குறும்படம் செழியனின் 'டுலெட்' படத்தை நினைவூட்டியது (தற்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது). அதில் ஷேர் ஆட்டோ, இதில் வாடகை வீடு. நகரச் சாதியம்!

'டுலெட்' சொல்லும் முக்கிய விஷயம் கடந்த பத்தாண்டுகளில் ஐ.டி துறையால் வீட்டு வாடகை பெருநகரங்களில் பெருகிவிட்டது என்பது. உண்மை. ஆனால், இது இப்போது நிகழ்ந்ததல்ல; 2000-க்கும் முன்பிருந்தே நடந்து வருவதுதான். மற்றபடி, சாதி, மதம், உணவுப் பழக்கம், தொழில், திருமணம், தோற்றம் காரணமாக வாடகைக்கு வீடு மறுக்கப்படுவதென்பது நூற்றாண்டுக் காலமாக நிலவி வரும் சமூக அக்கிரமம்தான்.

படத்தில் ஓரிடத்தில் காட்டப்படுவதுபோல் தன் சாதிக்காரனைவிட ஐ.டி-காரனுக்கு முன்னுரிமை அளிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மிக‌ அரிதான ஜீவன்கள். இதற்கு செஞ்சட்டைக்காரர் கோபிக்கலாம்; நீலச்சட்டைக்காரர் சந்தோஷிக்கவே செய்வார்!

***

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு