`சினிமா உலக திரும்பி பார்க்க வெச்ச அதிசய மனுஷன்யா நீ..! - சிலாகிக்கும் புரூஸ் லீ ரசிகர் #MyVikatan

மனித மனம் ஏன் சண்டையை விரும்புகிறது? மனிதன் சண்டையை ஏன் கண்டுகளிக்கிறான் ?
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
புரூஸ் லீ - இன்றும் இந்தப் பெயரை கேட்டால் முறுக்கேறிய உடல்வாகும் கூரிய பார்வையும்கொண்ட அந்த இளைஞனின் முகம் எல்லோரின் மனக் கண்ணிலும் வந்துபோகும். வெறும் 32 வயதில் இந்த உலகத்தைவிட்டு மாண்டுபோய், ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகிறது. ஆனால், இன்றும் அவர் பெயர் பல தளங்களில் பல வகைகளில் விவாதிக்கப்படும் பேசப்பட்டும் வருகிறது.
இவ்வளவு ஏன், நம்மூர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தே தன் ஆரம்பகாலப் படங்களின் சண்டைக் காட்சிகளை மேற்கொள்ளும்போது புரூஸ் லீ-யின் நகர்வுகளை மனதில் வைத்துதான் அந்தப் பட சண்டைக் காட்சிக்கு ஆயத்தமாவேன் என்று சொல்லியிருக்கிறார்.

'Popular Culture' என்று சொல்லப்படுகின்ற பிரசித்தி பெற்ற கலாசாரங்களில் ஒன்று புரூஸ் லீ-யினுடையது.
இத்தனைக்கும் அவர் நடித்தது மொத்தமே ஐந்து முழுநீள படங்கள்தாம். இன்றைக்கும் அவர் சண்டைக்காட்சிகளை சமூக வலைதளங்களிலோ தொலைக்காட்சிகளிலோ பார்க்க நேர்ந்தால், அவருடைய அந்த ஊடுருவும் பார்வையிலும் கால்களையும் கைகளையும் அசைக்கும் வேகத்திலும் காற்றோடு காற்றாக கலக்கும் உடல்வாகிலும் வெற்று உடம்பில் இடும் அந்த கறுப்புப் பேண்டிலும் மயங்காதவர்கள் இல்லை எனலாம்.
புரூஸ் லீ தன் படங்களில் மேற்கொண்ட அந்த தத்ரூப சண்டை காட்சிகள்தாம் அவரை மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடம்பிடிக்க வைத்திருக்கிறது.
மனித மனம் ஏன் சண்டையை விரும்புகிறது? மனிதன் சண்டையை ஏன் கண்டுகளிக்கிறான் ?
மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன். காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தவன். உணவுக்காகவும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவும் விலங்குகளிடம் சண்டையிட வேண்டிவந்தது. பின் நாகரிகம் பெற்ற மனிதன், போர் என்ற பெயரில் சண்டையிட்டான். சண்டை என்பது ஒரு உயிர் போராட்டம். தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான எத்தனம். தன் ஆளுகையை உடல் வலிமை கொண்டு நிரூபிக்க மேற்கொள்ளப்படும் ஒரு பெருமுயற்சி.

நாளடைவில், போரையும் நிறுத்தி அமைதி பேண விழைந்த நவ நாகரிக மனிதனுக்கு சண்டையிடும் அவசியம் இல்லாமல் போனது. புஜ பலத்தைக்காட்டும் அடியாட்களும் ரவுடிகளும் ஒரு வகை என்றாலும் அவர்கள் மக்கள் தொகையில் ஒரு சிறு கூட்டமே.
நவநாகரிக உலகில் இந்தச் சண்டையிடும் பழக்கம் வழக்கொழிந்தாலும், சண்டை குறித்தான மனித ஆழ்மன படிமங்கள் அப்படியேதான் உள்ளது. இதனாலேயே, தான் பங்கேற்றகாத சண்டையானாலும் மனிதன் சண்டையை வேடிக்கை பார்க்க விரும்புகிறான். சண்டையின் அடுத்த நிகழ்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறான். யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறான். ஒரு சண்டையை ஆர்வத்துடன் நோக்குகிறான்.
இந்தக் குணாதிசய வெளிப்பாடே இன்றும் தொடர்கிறது. அதனால்தான் இன்றும் குத்துச்சண்டை வீரர்களே அதிகப் பந்தய பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்களாக உலகத்தில் இருக்கிறார்கள். இன்றும், ஒரு குத்துச்சண்டை போட்டி குறித்தான எதிர்பார்ப்பை ஒரு வருடத்திற்கு முன்பே தூண்டுகிறார்கள். மக்களை அதைப்பற்றியே பேச வைக்கிறார்கள். 'ஸ்பானிஷ் புல் ஃபைட்டிங்' போன்ற விளையாட்டும் இது போன்றதே.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சண்டையை திரைப்படங்களில் முதன்முதலில் மிகத் தத்ரூபமாக யதார்த்தத் தன்மையுடன் காட்சிப்படுத்தியவர் புரூஸ்லீ.

Raymond Chow என்ற சீன திரைப்பட தயாரிப்பாளர் புரூஸ் லீ பற்றி இவ்வாறு கூறுகிறார்,
"புரூஸ்லீயின் வருகைக்கு முன் சீன 'குங்ஃபூ' படங்கள் ஒரு போலியான தோற்றத்தை கொண்டிருந்தன. 'குங்ஃபூ' சண்டை என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களை வைத்து படங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். கேமராவில் நாங்கள் பல 'ட்ரிக்ஸ்' செய்து ஒரு காட்சியை உருவாக்குவோம். ஆனாலும் அந்த காட்சி போலியானது என்பது பார்க்கும் மக்களுக்கு சட்டென்று தெரிந்துவிடும். பின் மக்கள் ஒரு உண்மையான சண்டைக்காரனை புரூஸ் லீ-யின் வாயிலாக கண்டுகொண்டனர். அதனால்தான் அவர் சடாரென்று உலகப் புகழ் அடைந்தார். அவர் சண்டைகாரர்களின் சண்டைக்காரன். "
புரூஸ் லீ என்ற இந்த அதிசய மனிதனே ஹாலிவுட் சினிமாவையும் மேற்கத்திய சினிமாவையும் ஆசிய சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவர். ஆசிய சினிமாக்களின் கலைப்படங்கள், அதன் கலை நேர்த்திக்காகக் கொண்டாடப் பட்டவையேயன்றி அதற்கு உலகளவில் பெரிய சந்தை அமையவில்லை. புரூஸ் லீயே அதை முதன்முதலில் சாத்தியப்படுத்தியவர்.
'ஸ்டண்ட்' என்ற வார்த்தைக்கு புது இலக்கணம் புகுத்தியவர். அதை திரைப்படங்களில் ஒரு தத்ரூப ஆக்ரோஷ கலையாகவே மாற்றியவர். 'Martial Arts' என்கிற தற்காப்புக் கலைகளை பலரும் அறியும் வண்ணம் செய்தவர். இளைஞர்களை அன்றும், இன்றும்,என்றும் தன் யதார்த்த ஆக்ரோஷ மொழியில் கவர்ந்தவர், கவர்பவர்.

சீனத் தத்துவத்தில் ஆழ்ந்த வாசிப்பை கொண்டிருந்தவர், பல தற்காப்பு கலைகளை குழைத்து தன் அனுபவங்களையும் சேர்த்து ஒரு ரசவாத குவியலாக 'Jeet Kune Do' என்ற ஒரு புது வடிவத்தை உருவாக்கினார். திரைமொழி பேச மேலும் பல புதிய கனவுகளை கொண்டிருந்தார்.
ஒரு அமெரிக்க தொலைக்காட்சி பேட்டியில் அவரிடம், 'Martial Arts' என்றால் என்ன என்று கேட்கப்பட்டது, " மார்ஷல் ஆர்ட்ஸ் என்பது ஒன்றும் அல்ல, உங்களை மிக மிக நேர்மையாக வெளிப்படுத்துவதே", என்று அந்தக் கேள்வியைக் கேட்ட வேகத்தில் பதிலளித்தார்.
ஆனால், புரூஸ் லீ கனவுகண்ட பல விஷயங்களைச் செயல்படுத்த, காலம் அவருக்குத் துணையில்லாமல் போனது வேதனை. ஆனால் அவருடைய வழித்தோன்றலாகப் பார்க்கப்படும் ஜாக்கிசான், அதை அவர் படங்களின் மூலம் வேறு உயரங்களுக்குக் கொண்டு சென்றார். புரூஸ் லீ கையாண்ட ஆக்ரோஷ திரைமொழி அவருக்கே உரியது.
அதை மிக விவரமாக தன் ஆரம்பகால திரைப்படங்களிலேயே ஜாக்கிசான் கைக்கொள்ளவில்லை. சண்டைப் படங்களில் அவர் கையாண்டது நகைச்சுவை பாணி கதையாடலை. உலக சினிமாக்களில் இன்று 'யதார்த்த ஸ்டண்ட்' கலையில் ஒரு பெரும் சகாப்தமாக ஜாக்கிசான் திகழ்கிறார்.
ஜாக்கி சான் புரூஸ்லீயை அவரது 'Fist of Fury' திரைப்படத்தில் 'ஸ்டண்ட் மேனாக' முதன்முதலில் சந்தித்தார். அதைப்பற்றி ஜாக்கிசானே விவரமாக சொல்கிறார்.

"புரூஸ் லீ என்னுடைய ஆதர்ச நாயகன். அவரைப் பார்ப்பதற்கு நான் பலவாறு பிரயத்தனப்பட்வேன். இறுதியில் அந்த சந்தர்ப்பம் 'ஸ்டண்ட் மேனாக' நான் நடித்த அந்தப்படத்தில் நிகழ்ந்தது.
அன்று சண்டைக்காட்சியில் அவருடைய கட்டுப்பாட்டையும் மீறி என்னை வேகமாகத் தாக்கிவிட்டார். ஆனாலும் டைரக்டர் 'கட்' என்று சொல்லும்வரை அந்தக் காட்சியிலேயே லயித்திருந்தார். காட்சி முடிந்ததும் ஓடோடி வந்தவர், என்னைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார். நான் மிக மோசமாக அடிவாங்கியதுபோல் நடித்தேன். அப்போதுதான் புரூஸ்லீயின் அணைப்பில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கமுடியும் என்பதே அதற்குக் காரணம். பின் அந்த படப்பிடிப்பில் நாங்கள் நன்றாக பரிச்சயமானோம். புரூஸ்லீயின் சண்டையிடும் விதத்தைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் கண் சிமிட்டக்கூடாது. கண் சிமிட்டினால் அவரின் வேகமான அசைவுகளைக் கோட்டைவிட்டு விடுவீர்கள்".
ஜாக்கிசானின் வேலைத் திறனைப் பார்த்து வியந்த புரூஸ் லீ அவரைத் தன்னுடைய அடுத்த படமான "என்டர் த டிராகன்"-னிலும் ஸ்டண்ட் செய்ய வைத்தார். புரூஸ்லீயின் மிகச்சிறந்த படமாக கொண்டாடப்பட்ட அந்தப்படம் புரூஸ்லீ-யின் இறப்பிற்கு பின்புதான் வெளியானது.
காலத்தை வென்ற இந்த ஆக்ரோஷ சண்டைக்காரனின் வெண்கல சிலையை ஹாங்காங் அரசாங்கம் 2005-ல் திறந்து வைத்தது. அந்த சிலையை பார்க்கும்போது நமக்குள்ளும் ஒரு உத்வேகமும் ஒரு புத்துணர்ச்சியும் எதையும் சாதிக்கும் ஒரு தன்னம்பிக்கையும் தானாகவே மிளிரும்.மணிசங்கரன். பா.ந.
புரூஸ்லீயின் காலத்துக்குப்பின், 100 படங்களுக்கு மேல் நடித்து பல புகழ் மாலைகளை சூடினார் ஜாக்கிசான். தன் ஆதர்ச நாயகன் புரூஸ் லீ உடனான அந்த சந்திப்பை இன்றும் தன் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்கிறார்.
TIME பத்திரிக்கை புரூஸ்லீயை கடந்த நூற்றாண்டின் 100 முக்கியமான மனிதர்களின் பட்டியலில் இணைத்து, பின் தொடர்வதற்கு ஏற்ற நாயகன் மற்றும் சிறந்த ஆளுமை என்று விளித்து, "சுய முன்னேற்றத்தை உடற்தகுதி வாயிலாக வளர்த்தெடுத்த 20 ஆம் நூற்றாண்டின் தற்காப்பு கலைகளின் மிக முக்கிய ஆளுமை" என்று கௌரவப்படுத்தி உள்ளது.

காலத்தை வென்ற இந்த ஆக்ரோஷ சண்டைக்காரனின் வெண்கல சிலையை ஹாங்காங் அரசாங்கம் 2005-ல் திறந்து வைத்தது. அந்த சிலையை பார்க்கும்போது நமக்குள்ளும் ஒரு உத்வேகமும் ஒரு புத்துணர்ச்சியும் எதையும் சாதிக்கும் ஒரு தன்னம்பிக்கையும் தானாகவே மிளிரும்.
'என்டர் த டிராகன்' படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்சி வரும். அன்றைய தின பயிற்சியை முடிக்கும் அவருடைய மாணவன், அவரிடம் வணக்கம் கூறி விடைபெறுவார்.
அவர் கண்ணசைவில் உள்ள கோளாறுகளை நோட்டமிடும் புரூஸ்லீ அவரைத் தலையில் குட்டியவாறு, ``வடிவம் இல்லாது இரு. எதில் இட்டாலும் அந்த வடிவத்திற்கேற்ப மாறும் நீரைப்போல் இரு" என்பார்.
அதுதான் புரூஸ் லீ !
- மணிசங்கரன். பா.ந.
நெல்லிக்குப்பம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.