இன்றைய நாட்களில் மல்டி ஸ்கிரீன் (Multi-screen (2 to 4 screens)), மல்டிபிளக்ஸ்(Multiplex (6 screens and more)) எனப் பல வகையான திரையரங்குகள் வந்துவிட்டன. ஆனால் 1980-களுக்கு முன்னால் ஒரே ஒரு திரைகொண்ட 'சிங்கள் ஸ்கிரீன் சினிமா (Single-screen cinema)' திரையரங்குகள் மட்டுமே இருந்தன. அதில் 6-70 மில்லி மீட்டர் கொண்ட பிலிம் மூலம் இயங்கும் புரொஜெக்டர்கள் வழியாக படம் திரையில் திரையிடப்படும். புதுப்படங்கள் வெளியாகும் நாட்களில் படத்தின் பிலிம் ரீல் பெரும் கொண்டாட்டங்களுடன் எடுத்துவரப்படும். அந்த பிலிம்களில் தோன்றும் சிறிய கரும்புள்ளிகள் மற்றும் அசைவுகளுடன் படம் பார்ப்பதென்பது ஒரு அனுபவம். அந்த நாட்களில் படம் பார்த்தவர்கள் மனதில் அது அழியாது நினைவில் இருக்கும்.
ஆனால் இன்றைய நாட்களில் பில்ம்களும் பழைய காலங்களில் பயன்படுத்திய புரொஜெக்டர்கள் போன்றவை அழிவின் விளிம்பில் உள்ளன. அதை வருங்கால தலைமுறைகள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் பாதுகாத்து வைக்க வேண்டும். இதை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தற்போது செய்துவருகிறார்.

மத்திய பிரதேசத்தில் இந்தூர்(Indore) நகரைச் சேர்ந்த வினோத் ஜோஷி என்பவர் 80 களில் திரையரங்குகளில் பயன்படுத்திய புரொஜெக்டர்கள், பிலிம்கள் மற்றும் அன்றை காலங்களில் திரைத்துறையில் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை சேகரித்து அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்தப் பொருட்களை 1983 முதல் சேகரிக்கத் தொடங்கிய இவர், சுமார் 1980 முதல் 2015 வரை இதுதொடர்பான பொருள்களை சேகரித்து வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் ஒரு வீட்டின் அறையை வாடகைக்கு எடுத்து அதில் அவர் சேகரித்து வைத்த பில்ம்கள், புரொஜெக்டர்கள், போஸ்டர்கள் போன்ற பல பொருட்களை பார்வைக்கு வைத்து ஒரு 'சிங்கள் ஸ்கிரீன் சினிமா' ஒன்றை அதில் அமைத்துள்ளார். இதற்கு 'இந்தூர் சினிமா சங்கரஹாலயா (Indore Cinema Sangrahalaya)’ என்று பெயரிட்டுள்ளார். இது பார்வையாளர்களுக்குத் திரைத்துறையின் பயணத்தை கண்முன் கொண்டுவரும் என்கிறார் இதை அமைத்த வினோத் ஜோஷி. 1970 -80 காலங்களின் திரை அனுபவங்களைக் காண விரும்பவர்கள் பலர் இதை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் இதற்கு ரூ.1.60 பைசா கட்டணமாக வசூலிக்கும் இவர் அன்றைய காலங்களில திரையரங்கில் கொடுக்கப்படும் அதே பழைய டிக்கெட்களை அதே முறையில் கொடுத்து அன்றைய காலங்களின் அனுபவத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இது பற்றிக் கூறிய அவர் “ஒற்றைத்திரை சினிமா(Single-screen cinema) இன்று அழிந்து கொண்டிருக்கிறது, இது நடக்கக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு நான் ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளேன். இதன் மூலம் சினிமாவின் பயணத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார்.