Published:Updated:

``நாங்க மருத்துவர்கள் இல்லை மக்களே.. ஆனா அத்தனையும் உண்மை!’’- யூ டியூபில் அசத்தும் இளைஞர் படை

`சேனல் ஆரம்பித்த புதிதில் நல்ல விஷயங்களை, நல்ல கருத்துகளை மட்டும் சொல்லிவந்தோம். அதுக்கு ரெஸ்பான்ஸ் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் பதிவிட்ட முதல் நூறு வீடியோ வரைக்கும் எந்த ரீச்சும் கிடைக்கவில்லை'.

ஃபேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் தனி நபர்களின் சேனல்கள் நிறைய இருந்தாலும் அதில் பெயர் சொல்லும் அளவுக்குச் சில சேனல்களே உள்ளன. அதிலும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை கான்செப்ட்டாக எடுத்துச் செய்யும் சேனல்கள் மக்களிடம் பிரபலம் ஆவது எண்ணிக்கையில் குறைவே. சமீபகாலமாக `தேநீர் இடைவேளை' என்ற சேனல் நம்மில் பலர் கண்ணிலும் பட்டிருக்கும். ``பழங்கள், காய்கறிகள், தமிழர்களின் உணவு முறை, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்'' எனப் பலவற்றின் நல்லது கெட்டது என அனைத்தையும் குறித்து இளைஞர் ஒருவர் வந்து எடுத்துரைப்பார். மதுரை தமிழில் கலாயாக அதேநேரம் கருத்தாகவும் வீடியோவை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லுவார். இந்த இளைஞர்கள் பேசும் வீடியோவுக்கு வலைதளங்களில் சூப்பர் டூப்பர் ரீச். இதன் பின்னணியில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டோம்.

தேநீர் இடைவேளை டீம்
தேநீர் இடைவேளை டீம்

என் பெயர் பிரகதீஷ். எனக்கு சொந்த ஊர் சிவகங்கை. கோவையில் இன்ஜீனியரிங் படித்த பிறகு தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால், எனக்கு சின்ன வயதிலிருந்தே மீடியாதான் கனவு என்பதால் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இந்தத் துறைக்கு வந்தேன். நான், நவீன்குமார், ஷியாம் குமார், குலோத்துங்கன், சுகன்யா என்று எங்கள் `தேநீர் இடைவேளை' டீமில் மொத்தம் 5 பேர்.

நாங்கள் எல்லோரும் இன்ஜீனியரிங் படித்தவர்கள் என்றாலும் எங்களுக்கு மீடியா கனவு என்பதால் எல்லோருமே சென்னையில் இயங்கிய தி சோஷியல் மீடியா கம்பெனியில் கன்டென்ட் கிரியேஷன் டீமில் வேலை பார்த்தோம். அந்த கம்பெனி மூலம்தான் நாங்கள் ஒன்றுசேர்ந்தோம்.

அங்கு வேலை பார்க்கும்போது சோஷியல் மீடியாவில் இருக்கின்ற நிறைய வீடியோக்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு எங்களின் டீமுக்குக் கிடைத்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் ஒரே மாதிரியான ஜானரில், ஒரே மாதிரியான காமெடியில் நிறைய வீடியோக்கள் வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதேபோல் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்கள் குறித்து கன்டென்ட்டுகள் வலைதளங்களில் இல்லை. அந்த மாதிரியான விஷயங்களைப் பெரிய மனிதர்கள் மேடைகளில் மட்டும் பேசிவந்தனர்.

ஆனால், அது எந்த அளவுக்கு மக்களிடம் இணக்கமாக சென்றுசேர்ந்தது என்பதற்கான பதில் இல்லை. வெறுமனே அறிவுரையாக மட்டுமே அதை மக்கள் எடுத்துக்கொண்டனர். இது மாதிரியான விஷயங்களை யோசிக்கும்போதுதான் எங்களுக்கு ஐடியா தோன்றியது.

பிரகதீஷ்
பிரகதீஷ்

மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களை அவர்களுக்கு நெருங்கிய விதத்தில் எப்படி சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து ஷார்ட் & ஸ்வீட்டாகச் சொல்லலாம் என்று பிளான் செய்து `தேநீர் இடைவேளை' சேனல் உருவாக்கப்பட்டது. சேனல் தொடங்கியதிலிருந்து மக்களுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் கான்செப்ட்டாக எடுத்துக் கொடுத்து வருகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் பலன்கள் தெரியாமலே அதைச் சாப்பிடுகிறோம்.

சில நேரம் சில உணவுகளை ஒதுக்கிவிடுகிறோம். இது மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யோசித்துதான் அதுதொடர்பாக நிறைய வீடியோக்களை வெளியிடுகிறோம். குறிப்பாக எந்த உணவையும் சாப்பிட வேண்டாம் என்று நாங்கள் எங்கும் சொன்னதில்லை. அதேநேரம் இந்த உணவையும் சாப்பிடுங்கள் என்றுதான் இதுவரை சொல்லியுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தேநீர் இடைவேளை' பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?!

எங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் 4 - 5 நிமிடங்கள் வரையில்தான் இருக்கும். டீ குடிக்க ஆகின்ற நேரம் இதே 4 - 5 நிமிடங்கள்தான் ஆகும். இந்த நேரத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லிவிட வேண்டும் என்பதற்காக `தேநீர் இடைவேளை' என்று பெயர் வைத்தோம்.

வீடியோக்கான கான்செப்ட் எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

மருத்துவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை ரெஃபரென்ஸ்களாக எடுத்துக்கொள்வோம். அதேபோல் மருத்துவர்கள் சில ஆராய்ச்சி பேப்பர்களைக் குறிப்பிட்டு இருப்பார்கள். அதைத் தேடி அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மை என்பதை உறுதிசெய்த பிறகே அதை கான்செப்ட்டாக மாற்ற முன்வருவோம். மருத்துவர்கள் சொல்லியுள்ள குறிப்புகளில் 100 சதவிகிதம் நம்பகத்தன்மை இருந்தால்தான் அதை நாங்கள் எடுப்போம். எங்கள் செயலுக்கு இதுவரை பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. சில நேரம் எங்களை மருத்துவர்கள் என்று நினைத்துக்கொண்டு `எனக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது; தீர்வு சொல்ல முடியுமா' என்று மக்கள் கேட்பார்கள்.

விழிப்புணர்வுக்காகவே இந்த வீடியோக்கள் செய்கிறோம் என்று அவர்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிவிடுவோம். ஒரு வெறுப்புணர்வு வலைதளங்கள் மூலமாக மக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது என்று எங்களுக்குள் ஒரு தோன்றல் இருந்துகொண்டே இருந்தது. அதை மாற்றி வலைதளத்தை பாசிட்டிவாக, மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்கிற இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை வைத்தே `தேநீர் இடைவேளை' சேனல்.

தேநீர் இடைவேளை டீம்
தேநீர் இடைவேளை டீம்

வியாபாரி கான்செப்ட்டுக்கு நல்ல ரீச் இருக்கிறதே?

சேனல் ஆரம்பித்த புதிதில் நல்ல விஷயங்களை, நல்ல கருத்துகளை மட்டும் சொல்லிவந்தோம். அதுக்கு, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. நாங்கள் பதிவிட்ட முதல் நூறு வீடியோ வரைக்கும் எந்த ரீச்சும் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் சோர்ந்துவிடவில்லை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்ற கொள்கையில் நாங்கள் ஐந்து பேருமே உறுதியாக இருந்தோம். நிச்சயம் எங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். காரணம் பதிவிட்ட நூறு வீடியோக்களில் ஒரு வீடியோகூட மோசமானதாக எதையுமே பதிவிட்டதில்லை. நம்மளுடய நோக்கம் சரியாக இருந்தால் வெற்றி காலதாமதம் ஆகும். ஆனால் நிச்சயம் வந்துசேரும். இதை புரிந்துகொண்ட நாங்கள் எங்கள் பாணியை மாற்றினோம்.

மக்களுக்கு இணக்கமாக இருக்கின்ற வகையில் கான்செப்ட் வைத்து வீடியோக்களைப் பதிவிட்டோம். வியாபாரிகள் நேரிடையாக மக்களிடம் பேசுவது, சொல்வதுபோல் புதிய கான்செப்ட் பண்ண ஆரம்பித்தோம். வெறும் கருத்துகளை மட்டும் சொல்லாமல் முழுமையான தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திவருகிறோம். எதிர்காலத்தில் தமிழ் இலக்கியங்கள், இந்தியச் சட்டம் குறித்த தெளிவினை சாதாரண மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் இன்னும் சில சேனல்கள் ஆரம்பிக்க இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு