Published:Updated:

ளா...ளா...கேரளா!

Kerala ( Image by Ginu C Plathottam from Pixabay )

மிருதங்கம் பயன்படுத்தப்படும் திரையிசைப் பாடல்கள் அனைத்தும் என்றும் நிலைத்து நிற்கும். இந்த மிருதங்கத்தை பாலக்காட்டுக்கு அருகே உள்ள பெருவெம்பா கிராமத்தை சேர்ந்த திரு.காசுமணி அவர்களின் குடும்பம்தான் தயாரித்து வருகிறது.

ளா...ளா...கேரளா!

மிருதங்கம் பயன்படுத்தப்படும் திரையிசைப் பாடல்கள் அனைத்தும் என்றும் நிலைத்து நிற்கும். இந்த மிருதங்கத்தை பாலக்காட்டுக்கு அருகே உள்ள பெருவெம்பா கிராமத்தை சேர்ந்த திரு.காசுமணி அவர்களின் குடும்பம்தான் தயாரித்து வருகிறது.

Published:Updated:
Kerala ( Image by Ginu C Plathottam from Pixabay )

ஒரு வட்டத்துக்குள் பயணித்துக்கொண்டு இருக்காமல் கொஞ்சம் தமிழ்நாடு எல்லைத் தாண்டி பயணிக்கலாம் என்று மனசுக்குள் தோன்றியதும் காதுக்குள்ளே ஒரு இனிய கீதம் வேறு மாதிரி ளா..ளா.. என்று ஒலித்தது.

ஆராய்ந்து பார்த்தால் அது `கேரளா’ என்ற விடை கிடைத்தது. அதிகம் பயணிக்காத ஒரு மாநிலத்தைப் பற்றி என்ன எழுதுவது...? அறிந்தது தெரிந்தது வைத்துக்கொண்டு முயற்சிக்கலாம்... எனக்கு நானே பதில் சொல்லிக்கொண்டு எழுத முடிவு செய்தேன்.

கேரளா என்ற சொல் சேரளம், சேரநாடு என்பதிலிருந்து தோன்றியது என்பார்கள் தமிழறிஞர்கள். 'சேரநன்னாட்டிளம் பெண்களுடனே...' பாரதி படியது நினைவுக்கு வருகிறதா...

Kerala
Kerala

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ந் தேதி கேரளா மாநிலம் உருவானது. 1957 ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. E.M.S நம்பூதிரிபாட் முதல்வரானார். பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கருணாகரன், ஏ.கே. அந்தோணி போன்ற பிரபல தலைவர்கள் முதல்வராக பணியாற்றினார்கள்.

கேரளா நோக்கி பயணிக்கும் போது நம்முடன் கூடவே வருவது மேற்குத் தொடர்ச்சி மலை. 1600 கி.மீ. நீளமுள்ள இம்மலைத்தொடர் கண்ணுக்கு விருந்தளிக்கும். பொள்ளாச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கேரளா எல்லை ஆரம்பமாகும். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பொள்ளாச்சியிலிருந்து திருச்சூர் வரை NTP என்ற தனியார் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

நான் பொள்ளாச்சியில் 6 ஆம் வகுப்பு படிக்கிற காலத்தில் அடிக்கடி கண்ணில் பட்டது இந்த பேருந்து தான். திருச்சூர் என்ற உடன் NTP பேருந்துதான் நினைவுக்கு வரும். அதில் பயணம் செய்தால் கோவிந்தாபுரம் தாண்டியதும் கேரளா எல்லை ஆரம்பமாகும். சுமார் 2-15 மணி நேரத்தில் திருச்சூர் சென்று விடலாம். பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்ல ரயில் வசதியும் இருக்கிறது.

mridangam
mridangam
iStock

'கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்குப் பதிலேதையா..' அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற அற்புதமான பாடல். ஒரு மிருதங்க வித்வானின் இனிமையான தாளத்தோடு ஆரம்பமாகும் அப்பாடல். அதன் ஆதிக்கம் பாடல் முழுவதும் இருக்கும். படத்தின் பல இடங்களில் பின்னணியில் மிருதங்கம் ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு பின்னணி இசையை தந்தார் திரு. எம்.எஸ்.வி. அவர்கள்.1980 களில் அன்றைய இளைஞர்களுக்கு காதல் கீதமாய் ஒலித்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடல் ஆரம்பமாவதும் மிருதங்க ஓசையோடுதான்.

மிருதங்கம் பயன்படுத்தப்படும் திரையிசைப் பாடல்கள் அனைத்தும் என்றும் நிலைத்து நிற்கும். இந்த மிருதங்கத்தை பாலக்காட்டுக்கு அருகே உள்ள பெருவெம்பா கிராமத்தை சேர்ந்த திரு.காசுமணி அவர்களின் குடும்பம்தான் தயாரித்து வருகிறது. இவர் மகன் நான்காவது தலைமுறையாக மிருதங்கம் தயாரிக்கும் பணியில் உள்ளார். நம்ம பண்ருட்டியிலிருந்து பலாமரக் கட்டைகளை வாங்கி தயாரிப்பு பணிகளை தொடங்குகின்றனர். 200 ஆண்டுகளுக்கு மேலாக இதை அவர்கள் செய்து வருகிறார்கள்.

பாலக்காடு மணி ஐயர்
பாலக்காடு மணி ஐயர்

மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர்:

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர். மிகவும் இளம்பருவத்திலே..ஏழு வயதாக இருக்கும்போதே மிருதங்கம் கற்க ஆரம்பித்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கர்நாடகா இசையில் கோலோச்சிய பல ஜாம்பவான்களுக்கு இவர் பக்கவாத்தியம் வாசித்துள்ளார். கச்சேரிகளில் பக்கவாத்தியமாக இருக்கும் மிருதங்கத்திற்கு இவரால் கதாநாயக அந்தஸ்து கிடைத்தது.

இவர் வாசிப்பை கேட்பதெற்கென்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. மூத்த எழுத்தாளரும் இசை விமர்சகருமாகிய 'சாருகேசி' என்கிற எஸ்.விஸ்வநாதன் மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பாபநாசம் சிவனின் பேரன் பாபநாசம் அசோக் ரமணி அவர்கள் THE HINDU ஆங்கில நாளிதழில் பாலக்காடு மணி ஐயர் பற்றி 'HUMILITY, HIS MIDDLE NAME' என்ற கட்டுரையில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

அவரது பெயரில் நடுநாயகமா இருப்பது 'பணிவு' தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கச்சேரிக்காக தனது தாத்தா பாபநாசம் சிவன் அவர்களையோ அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அவர்களையோ யார் அணுகினாலும் முதலில் அவர்கள் சொல்வது குறிப்பிட்ட தேதியில் மணி ஐயர் மிருதங்கம் வாசிக்க வருவாரா என்று தெரிந்து கொண்டுதான் சம்மதம் சொல்வார்களாம். மிருதங்கம் வாசிப்பில் புதிய ட்ரெண்ட் அறிமுகம் செய்தவர் திரு.மணி ஐயர் என்று பாபநாசம் சிவன் குறிப்பிட்டு சொல்லி உள்ளதாக அதில் எழுதியுள்ளார். பக்கவாத்தியகாரர் எங்கே எப்போது வாசிக்கக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் சொல்வாராம். தொடர்ந்து 40 அல்லது 50 ஆண்டுகள் அனைவரையும் ஈர்க்கக்கூடிய இசையை தருபவரே சிறந்தவர் என்பது அவரது கருத்து என்றும் அக்கட்டுரையில் திரு.அசோக் ரமணி குறிப்பிட்டுள்ளார்.

பாலக்காடு மணி ஐயர்
பாலக்காடு மணி ஐயர்

சென்னை மியூசிக் அகடமி இவருக்கு 'சங்கீத கலாநிதி விருது கொடுத்து கவுரவித்தது. உயர்ந்த விருதான பத்மபூஷன்' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை வாங்கிய முதல் மிருதங்க வித்வான் இவர்தான். 1979 ஆம் ஆண்டில் சித்தூர் ரிஷி வாலி பள்ளியில் இசை ஆசிரியராக சேர்ந்தார். இவரது பிரதான சிஷ்யர்கள் உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு ரகு பாலக்காடு சுரேஷ் ஆவார்கள்.

செம்பை வைத்தியநாத பாகவதர் :

பிரபலமான கர்நாடக இசை கலைஞர்கள் தாங்கள் பிறந்த ஊரின் பெயராலே அறியப்படுவார்கள். அதுபோல செம்பை என்றாலே செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்களை மட்டுமே குறிக்கும். இவர் பாலக்காடு அருகிலுள்ள செம்பை என்ற கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். மிகவும் பரம்பரியமான இசைக்குடும்பம் இவரது குடும்பம்.மிக மிக இளம் வயதிலேயே தனது தந்தையிடம் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். எட்டு வயதிலேயே இவரின் இசை அரங்கேற்றம் ஒட்டப்பாலம் கிருஷ்ணன் கோயிலில் நடந்தது. தனது சகோதரர் சுப்ரமணிய பாகவதருடன் இணைந்து 'செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் என்ற இசைவிழாவை 1914 ஆம் ஆண்டு துவங்கினார். சென்னையில் நடக்கும் டிசம்பர் இசைவிழாவைப்போல அதுவும் இன்றுவரையில் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாப்போல இதுவும் சிறப்பாக நடைபெறும். பிரபல பாடகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்துவார்கள் அனைவரும் இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடுவார்கள்.

செம்பை வைத்தியநாத பாகவதர்
செம்பை வைத்தியநாத பாகவதர்

குருவாயூரப்பன் மீது தீவிர பக்தி கொண்டவர். இடையில் குரலில் பிரச்சனை ஏற்பட்டு பாட முடியாத சூழ்நிலை உருவாக குருவாயூரப்பனிடம் நம்பிக்கையோடு பிரார்த்திக்க கிருஷ்ணன் அருளால் மீண்டும் முன்னை விட கம்பீரமாக பாட ஆர்ம்பித்தார். அதன் பிறகு தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பான்மையை அக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கத் தொடங்கினார். கேரள அரசு இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக 'CHEMBAI MEMORIAL GOVT MUSIC COLLEGE - என்று அரசு இசைக்கல்லூரியின் பெயரை மாற்றி அமைத்தது. 1996 ஆம் ஆண்டு இவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

K.J.ஜேசுதாஸ் :

கேரளா தந்த இன்னொரு சங்கீத கலைஞர் திரு.ஜேசுதாஸ் அவர்கள். செம்பை அவர்களின் பிரதான சீடர்களில் இவரும் ஒருவர். தனது திரையுலக வாழ்க்கையை 1962 ஆம் ஆண்டு துவங்கினார். அக்கால முன்னணி ஹீரோவான பிரேம்நசீர் நடித்த 'காலப்பாடுகள்' படத்தில் முதன்முதலாக பின்னணி பாடினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் முன்னனிப்பாடகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழில் எஸ்.பாலசந்தர் இயக்கிய 'பொம்மை' படத்தில் இவர் பாடிய 'நீயும் பொம்மை நானும் பொம்மை' பாடல் முதல் பாடல். எம்.ஜி.ஆர். படங்களில் தொடர்ந்து பாடும் வாய்ப்புகள் கிடைக்க புகழின் உச்சிக்கு சென்றார். 'தங்கத்தோணியிலே, விழியே கதை எழுது, அழகெனும் ஓவியம் இங்கே, தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்...ஆகிய மிகவும் இனிமையான காதல் பாடல்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட பாடல்கள்.

 Yesudas
Yesudas

எம்.ஜி.ஆர். அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த 'பல்லாண்டு வாழ்க' படத்தில் 'ஒன்றே குலம் என்று பாடுவோம்' என்ற புலமைப்பித்தன் அவர்களின் கருத்தாழமிக்க பாடல் இவர் குரலில் ஒலிக்கும் போது எவ்வளவு பெரிய கொடியவன் என்று அழைக்கப்படுபவன்கூட மனம் திருந்தி வாழ முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.

இன்னொன்று 'இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப்பூவினில்' இதுவும் புலமைப்பித்தன் அவர்கள் எழுதியதுதான். இந்தப் பாடலில் ஒவ்வொரு வரிகளும் வைரவரிகள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களில் சாகாவரம் பெற்ற பாடல்கள் இவை இரண்டும்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் இவரின் பாடல்கள் அடைமழையாய் பெய்யும். அப்படி அமைந்த ஒரு படம் 'அபூர்வ ராகங்கள்' . பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் உருவாக்கிய 'மஹதி' ராகத்தில் 'அதிசய ராகம் ஆனந்த ராகம்' என்று ஒரு பாடலை பாடியிருப்பார்.

பாமரனை கூட சுண்டியிழுக்கும் வண்ணம் கம்பீரமாக பாடியிருப்பார். அதேப்போல சிந்து பைரவி படத்திலும் சொல்லலாம். மஹா கணபதி தொடங்கி மரி மரி நின்னே, பூமாலை வாங்கி வந்தால், கலைவாணியே... என்று அத்தனை பாடல்களும் அற்புதமாக இருக்கும். சங்கீதம் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்கும் பைரவி போல சில ஜடங்களையும் தாளம் போட வைக்கும் மந்திர சக்தி வாய்ந்த குரல் திரு.ஜேசுதாஸ் அவர்களுடைய குரல். பல விருதுகளை வாங்கிக் குவித்து இருக்கிறார்.

 Yesudas
Yesudas

அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர். மாற்று மதத்தை சேர்ந்தவர் என்றாலும் அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அக்கோயில் நடை சாத்தும் முன்பு இவர் பாடிய 'ஹரிவராசனம்' பாடல் தினமும் ஒலிக்கும். விரதம், பக்தி ஒருவரை ஒரு உயர்ந்த இடத்தில் கொண்டு போய் அமர வைக்கும் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும். அந்தப் பாடலை கேட்கும் போது அனைவரும் மெய் மறந்து பக்தியில் திளைப்போம். அதுதான் தியான நிலை...தெய்வீக நிலை.

இசை மனிதனை மேம்படுத்தும். அதுவும் இனிமையான இசை எங்கும் அமைதியை நிலவச் செய்யும். அந்த இசையே தெய்வீக இசை. அதற்கு பங்களித்த சிலரைப்பற்றி இந்த கட்டுரையில் எனக்குத் தெரிந்த படித்த விஷயங்களை தந்துள்ளேன். இது ஒரு ஆரம்பம்தான். கேரளா பற்றிய தகவல்கள் படிக்க படிக்க முடிவில்லாமல் சென்று கொண்டே .... ஆகவே அழகான "ளா...ளா...கேரளா..."

-தொடரும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.