ஆண்டாண்டுகளாக சொல்லப்படும் அனைவரும் அறிந்த கதை தான் என்றாலும், கற்பனை வளத்துடன் சுவாரஸ்யமாக கதை சொல்லும் பாட்டிகள் இருக்கும் வரை "பாட்டி வடை சுட்ட கதை" பல்வேறு பரிமாணங்களுடன் கேட்பவர்களை ஈர்த்துக்கொண்டுதான் இருக்கும் !
அப்படியான ஒரு படம் தான் ஆக்சன் த்ரில்லர் வகையைச் சார்ந்த விக்ரம்... போலீஸ் திருடன் பழிக்குப் பழி கதை தான் !
ஆனால்...
பிரசாந்த் நீல் எனும் தேர்ந்த கதைசொல்லி தன் "KGF" படத்தின் மூலம் சினிமாவின் ஆதி முதல் வழக்கத்திலிருக்கும் "மீட்பர்" கதையை பான் இந்தியா படமாகத் தெரிக்கவிட்டது போல லோகேஷ் கனகராஜ் எனும் திறமையான, புத்திசாலி கதைசொல்லியின் மூலம் ஒரு போலீஸ் திருடன் கதை தமிழ் சினிமாவையே வேறொரு பரிமாணத்துக்கு நகர்த்தியிருக்கிறது. (KGF படத்தை லாஜிக் பார்க்காமல் கொண்டாடியவர்கள் அனைவரும் விக்ரம் படத்தின் லாஜிக் பற்றி கேள்வி எழுப்பும் தகுதியை இழந்து விடுகிறார்கள் !)

இயக்குநரின் மீது முழு நம்பிக்கை வைக்கும் தேர்ந்த நடிகனும், அந்த நம்பிக்கைக்குத் தகுதியான திறமையை கொண்ட இயக்குநரும் சேர்ந்தால் நிகழும் பரவச திரை ரசவாதத்துக்கான உதாரணம் விக்ரம்..காரை அக்பர்
நீதி கண் மூடிய ஒரு இரவில், காவலர்களின் உயிர் காக்க வந்த "கைதியின்" மூலமாக "விக்ரம்" உலகத்துக்கான கதவுகள் திறக்கப்பட்டால் ?...
பிரமாண்ட போதை சாம்ராஜ்யத்தை நிர்மாணிக்க முயற்சி செய்யும் கூட்டத்துக்கும் அந்த கூட்டத்தை அழிக்கத் துரத்தும் இந்நாள் மற்றும் முன்னாள் நேர்மை அதிகாரிகளுக்கும் நடக்கும் போர் விக்ரம். விக்ரம் படத்தையும் கைதியையும் கச்சிதமாக இணைத்துத் தொடங்கியிருக்கும் இந்த படம் இயக்குநர் "லோகியின்" யுனிவர்ஸுக்கான தொடக்கம் !
நான்கு ஆண்டுகள் கடந்தாலும் நச்சென்ற இடியாய் திரும்பியிருக்கிறார் கமலஹாசன். திரையுலகில் தான் நினைத்ததை நடத்திக்காட்டும் வல்லமை பெற்றிருந்தும், ஒற்றையாய் களமாடும் வாய்ப்புகள் இருந்த ஒரு கதையில் தன் கலைப்பிள்ளைகளுக்கும் பெரும் பங்களித்த இந்த "கலைத்தந்தையின்" பரிவு பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டது.
முதல் பாதியில் கமலுக்கான காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும் கூட அவரது நிழலைப் பல காட்சிகளில் உணர முடிகிறது. எத்தனையோ வேடங்களுக்காக அத்தனை அரிதாரம் பூசியிருந்தாலும், இந்த நடிப்பு சிங்கத்தின் சீற்றம் சிறிதளவும் குறையவில்லை.
பேரன் மீதான பாசத்தில் கண்கள் பனித்து, மரண வீட்டில் மௌன பாசப்போராட்டம் நடத்தி, விக்ரமாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சியில் புருவம் உயர்த்தி அசுர வதம் புரிந்து, நடிப்பில் தான் என்றும் பதினாறு என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கமல் !

தான் மறுபடியும் துப்பாக்கி தூக்கியதற்கான காரணத்தை விளக்கும் காட்சியில்,
"சொல்லுங்க சார்..."
எனும் கமலின் தொனியிலும், தழுதழுப்பிலும் நடிகர் திலகத்தின் சாயல் தெரிவதை எத்தனை பேர் கவனித்தார்கள் எனத் தெரியவில்லை.
காட்சிக்கு வராமலேயே படம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் மற்றொரு பாத்திரம் ரோலெக்ஸ்.
முதல்பாதி முழுவதும் திரையை ஆளுவது விரல்களை உடைக்கும் விசாரனை அதிகாரி பகத் பாசில்தான்.
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்ற வேக நடை. கோபம், ஆச்சரியம், சிரிப்பு, அதிர்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் அலட்சியமாகக் கொண்டுவரும் முகபாவம் என நடிப்பு நர்த்தனம் ஆடியிருக்கிறார் மனிதர்.
மேசையிலிருந்து விழும் கப்பை பிடிக்கும் வேகத்திலிருக்கும் அசாதாரணத்தை கண்டுகொள்ளும் காட்சி, "டன் பாய்ஸ் ?" எனக் கேட்டுத் தான் ஏற்ற கடமையை முடித்துக்கொண்டு கான்பரன்ஸ் ஹாலிலிருந்து வெளியேறும் காட்சி, அடுக்குமாடி கட்டிடத்தில் தொங்கி தாவும் காட்சி, நெடுஞ்சாலையில் வெறுங்கால்களுடன் ஓடும் காட்சி என முத்திரை பதிக்க வாய்ப்பு கிடைத்த இண்டு இடுக்குகளில்கூட பகத் முத்திரைகள்.
முஷ்டியால் அடித்தே கொல்லும் மாஸ்டர் படத்தின் வில்லன் கதாபாத்திர தொடர்ச்சி போல அமைந்த போதைமருந்து டான் விஜய் சேதுபதி...
தங்கப்பல், புதிய ஹேர் ஸ்டைல், கிரிஸ்டல் போதைப் பொருளுக்கு அடிமையானவனின் உடல் மொழி என எக்கச்சக்க வீட்டுப்பாட பயிற்சியுடன் நடித்திருக்கிறார். அவரது இயல்புக்கு மீறிய மெனக்கெடலே "ஓவர் டோஸ்" ஆகி, அவரது கதாபாத்திரத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிடுகிறது. இதற்குப் படத்தின் இயல்பை மீறி அந்நியமாய் தெரியும் விஜய் சேதுபதியின் எக்கச்சக்கமான உறவினர்கள் கூட்டமும், அவரது இண்ட்ரோ காமெடி பட வில்லன் அறிமுகம் போல அமைந்ததும் கூட காரணங்களாக இருக்கலாம்.
"என் குடும்பமே அழிஞ்சிடும்" எனும் விஜய் சேதுபதியின் புலம்பலை தவிர, குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் பாசமும் ஈர்ப்பும் காட்சிப்படுத்தப்படவில்லை. அதற்கு வாய்ப்பிருந்த ரமேஷ் திலக்கின் மரண காட்சியும் ஒரு அலறலுடன் முடிந்து விடுகிறது !
இதையெல்லாம் மீறி, செம்பன் ஜோஸ் வினோத்திடம் கத்தும் காட்சியிலும், கமலுடனான சண்டையிலும் ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி..

தமிழ் சினிமா காலங்காலமாகக் கட்டமைத்த பெண்கள் பற்றிய பொது புத்திகள் இன்றைய புது அலை இயக்குநர்களால் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பெண் ரகசிய போலீஸ் பொதுப்புத்தியைத் தவிடுபொடியாக்கும் பாத்திரம் ஏஜென்ட் டீனா.
தன் அடையாளத்தை வெளிப்படுத்திய தருணத்திலிருந்து மின்னலாய் சுழன்று சண்டையிட்டு, குழந்தையைக் காப்பாற்றி கண் மூடும் "வொண்டர் வுமன்" வசந்திக்கு ஹேட்ஸ் அப் !
முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடிந்த பாத்திரம் என்றாலும், நிறைவாக நடித்திருக்கிறார் காயத்ரி !
செம்பன் ஜோஸ் வினோத், அருள்தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல் என அனைவருமே விக்ரம் உலகத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள். "கால் நரம்பு வெட்டி" கதாபாத்திரம் பகிர் ரகம் !
ஆக்சன் அளவுக்கு எமோசன் காட்சிகள் இல்லை எனத் தோன்றினாலும்,
"மகனின், மகளின் கொலைக்குப் பழி வாங்குவதை விட மனிதர்களைக் குரங்குகளாக மாற்றும் போதை மாபியா மிருகங்களை ஒழிப்பது முக்கியம்" என விக்ரம் கதாபாத்திரமே வாக்குமூலம் கொடுத்துவிடும் படத்தில், Raw Drugக்கு எதிரான Hardcore warல் எமோசனை எதிர்பார்ப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது !
டீ அட்டை தொங்கும் கோப்பையில் விஸ்கி, பாலியல் தொழில் விசிடிங் கார்டு, "வித் ஜிஎஸ்டி" வசனம் எனப் படத்தில் ஆங்காங்கு வரும் லோகேஷ் கனகராஜ் பாணி நகைச்சுவை நச் !
"என் கூட சேர்ந்தீட்டீங்கள்ல... இனிமே நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கனும்" எனச் சண்டைக்கு மத்தியிலும் ஆண்டவரின் அரசியல் பன்ச் !
ஏஜென்ட் டீனாவில் தொடங்கி படபடவென வெளிப்படும் விக்ரத்தின் Kollywood Expendables கமாண்டோக்களுக்கு போடப்படும் இண்ட்ரோ கார்டுகள் அதகள ரகம் !
அன்பறிவ், கிரிஷ் கங்காதரன், பிலோமின் ராஜ் எனத் தொழில்நுட்ப குழுவின் திறமையான உழைப்பு இல்லாமல் விக்ரம் சாத்தியப்பட்டிருக்காது !
படத்தில் முகம் காட்டாத மற்றொரு கதாநாயகன் அனிருத் ! அதிகம் "எடிட்டிங் கத்திரி" விழாத படத்தைக் களைப்படையாமல் கொண்டு செல்வதில் பின்னணி இசை பக்கபலம் ! "கன்சர்வேட்டிவ்களை" முகம் சுளிக்க வைக்கும் அந்த சிகப்பு விடுதியின் கை விலங்கு முக்கல் முனங்கலையும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வைக்கிறது அனிருத்தின் இசை !

இறுதியில், ஆறே நிமிட திரை ஆளுமையின் மூலம் அடுத்த கவுண்ட் டவுனை ஆரம்பித்து வைத்து, அத்தனை கிரெடிட்டுகளை அள்ளிக்கொள்ளும் சூர்யா, நல்ல நடிகர்கள் கதாநாயக பிம்பத்திலிருந்து வெளியே வந்தால் என்ன விதமான மாயாஜாலங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கான மற்றொரு உதாரணம் !
"இந்த காட்டில யாரு எப்ப எங்க விடியல பார்க்க போறான்னு முடிவுபண்றது நான்" எனும் கமலின் வசனத்தின் பொருள் என்ன ?
நியாயம் தர்மம், ஈவு இரக்கம் எதுவுமற்ற அந்த கான்க்கிரீட் காட்டின் கமாண்டர் விக்ரம் எனில், கைதியின் விடுதலையே விக்ரத்தின் திருவிளையாடல்களில் ஒன்றா ?
இனி வரப்போகும் லோகி உலகத்தின் இருண்ட இரவுகளில் தான் பதில்களைத் தேட வேண்டும் !
கமலஹாசனுக்கு ஒரு வெற்றி படத்தை இயக்கியதையும் தாண்டி, அடுத்த பாகத்திற்கான முன்னுரை, ஸ்பின் ஆஃப் பட வாய்ப்புகளின் மூலம் கமலின் வருங்கால சினிமா கால்ஷீட்டையும் நிரப்பிவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் …
ரசிகன் தன் ஆதர்சத்துக்காற்றிய உதவி !
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.