Published:Updated:

``செய்திகள் வாசிப்பது... சரோஜ் நாராயணசாமி..!’’ - வானொலி தலைமுறையின் ஜில் நினைவுகள் #MyVikatan

வானொலி செய்தி வாசிப்பாளர்களில் முக்கியமான இருவரைப் பற்றி இங்கே கட்டாயமாக நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவருமே மிகத் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நம்முடைய தொழில்நுட்ப பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும், பழைமை குறித்த நினைவுகளில் மூழ்கினால் அதனூடாக இழையோடும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்க முடியாது. 

technology
technology

செல்போன் வருகைக்குப் பின்னர், உலகமே கைக்குள் சுருங்கிப் போய்விட்டது. ஆனாலும்கூட பழங்காலத்தில் எங்கோ ஒரு வீட்டின் ரேடியோவில் இருந்து ஒலிக்கும் இசையைக் கேட்டு அந்த வழியாகச் செல்பவர்கள் நின்று ரசிப்பதுண்டு. அத்தகைய சுவையான நினைவூட்டங்களை விகடன் வாசகர் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்பது விளையாட்டைத் தவிர்த்து வானொலி (Radio) கேட்பதாகவே இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தவர்களின் வாழ்வோடும் வானொலி நேரடித் தொடர்பில் இருந்தது.

வானொலி
வானொலி

அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்ற நிலைமை அப்போது இருந்தது. திருச்சி மற்றும் விவிதபாரதி என இரு அலை வரிசைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வானொலி மூலமாகச் செய்திகளை விரைவாகத் தெரிந்துகொள்ள முடியும். அது தவிர, ‘இன்று ஒரு தகவல்’, ’உழவர் உலகம்’, ’விவசாயச் செய்திகள்’, ’மருத்துவ நேரம்’, ’பக்திப் பாடல்கள்’ எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகி நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். 

மண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்!

விவித பாரதியில் திரைப் பாடல்கள், நாடகங்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டும். காலையில் தூங்கி எழும்போது அன்றைய செய்திகள் (ஆங்கிலச் செய்திகள் என்று நினைக்கிறேன்) முடிந்ததும் பக்திப் பாடல்கள் ஒளிபரப்பாகும். அதில், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமியப் பாடல்கள் இடம் பிடித்திருக்கும்.

பெரும்பாலும் என் தூக்கம் முற்றிலும் கலையும்போது நாகூர் ஹனிபா தன் தனித்துவமான காந்தக்குரலில், ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டாவா... உன்னை மனதில் நினைத்து நாளும் வேண்டாவா...’ என இறைவனையே தன் பாடல் மூலம் உருக வைத்துக்கொண்டிருப்பார். 

நாகூர் ஹனீபா
நாகூர் ஹனீபா

இந்தப் பாடல் அவருடைய மதம் சார்ந்த பாடலானாலும் அந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான அனைவரும் விரும்பும் பாடலாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. பின்னர், வரிசையாகத் தமிழ் செய்திகளும் பிற நிகழ்ச்சிகளும் தொடங்கும்.

வானொலி நிகழ்ச்சியில் முக்கியமானது, மறைந்த தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ’இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சி. வானொலிக்கென ஒரு தனிப்பட்ட பேச்சு வழக்கு மொழி பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எளிய தமிழில் பக்கத்து வீட்டுக்காரரின் பாவனையுடன் வட்டார வழக்கில் தினமும் ஒரு தகவலை மிக சுவாரஸ்யமாக சொல்லுவார். 

தென்கச்சி கோ.சுவாமிநாதன்
தென்கச்சி கோ.சுவாமிநாதன்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொல்லும் பயனுள்ள தகவல்கள் பெரும்பாலும் விவசாய குறிப்புகளாக இருக்கும். எந்த விதமான நோய்கள் பயிர்களை எந்தப் பருவத்தில் தாக்கும் அதற்கான கட்டுப்படுத்தும் முறைகளை அவர் சொல்வதைக் கேட்பதற்கே மிக அழகாக இருக்கும்.

நம்முடைய பக்கத்து வீட்டு விவசாயி பேசுவது போலவே தென்கச்சி கோ.சுவாமிநாதனின் பேச்சு அமைந்திருக்கும். "ஒரு அரை பக்கெட் தண்ணி எடுத்துக்கங்க... அதில் 100 மிலி மருந்தை ஊத்தி நல்லா கலக்குங்க... அப்பறமா அத பயிர் மேல தெளிச்சு விட்ருங்க... அப்படிச் செஞ்சீங்கன்னா பூச்சியெல்லாம் ஒரே நாள்ல செத்துடும்" என்று எளிமையாகச் சொல்வார். 

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்!

விவசாயத் தகவல்கள் முடியும்போது, ’இப்படித்தான்... ஒரு ஊர்ல...’ என்று ஒரு குட்டி கதையைச் சொல்லத் தொடங்கி சுவாரஸ்யமாகக் கதையை முடிப்பார். 10 அல்லது 15 நிமிடத்தில் இவை அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு ’நாளைக்கு பாக்கலாம்’ என்று சொல்லும்போது, விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அந்த வயதில் ஏதும் புரியா விட்டாலும்கூட அவர் கதை சொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு தினமும் தவறாமல் கேட்பேன்.

செய்தி வாசிப்பாளர்களில் முக்கியமான இருவரைப் பற்றி இங்கே கட்டாயமாக நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவருமே மிகத் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் டெல்லி வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயணசாமி. வெகுநாள்கள் அவர் ஆணா பெண்ணா என்பதுகூட எனக்குத் தெரியாது. 

சரோஜ் நாராயணசாமி
சரோஜ் நாராயணசாமி

அவருடையது ஒரு தனித்துவமான குரல் என்பதால் அந்த கணீர் குரலில் செய்திகளைச் சொல்லும்போது மிகவும் பிடிக்கும். மிகத் தெளிவாக அனைத்துச் செய்திகளையும் வாசிப்பார். ’செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி...’ என்று கணீரென அவர் தொடங்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அதே போன்று ஈரோடு தமிழன்பன், இலக்கணச் சுத்தமாக செய்தி வாசிப்பார். கோயில் மணி ஓசை போன்ற அவருடைய பளிச்சென்ற குரல் கேட்பதற்கே சுகமாக இருக்கும். அதன் பிறகு பலருடைய குரலில் செய்திகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த இருவருடைய வசீகர குரலை யாராலும் விஞ்ச முடியவில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இளையராஜா
இளையராஜா

செய்திகள் முடிந்த பிறகு, அலைவரிசை விவித பாரதிக்கு மாற்றப்படும். திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்து வரும் பாடலைப் பற்றி, "அடுத்து வருவது 'முள்ளும் மலரும்' படத்திலிருந்து இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் இன்னிசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்...” என்பார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர், அடுத்து ஒரு இனிமையான பாடல், 'முள்ளும் மலரும்' திரைப்படத்திலிருந்து.... என்று அறிவித்தவுடனேயே மனம் முழுவதும் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா... பூவாசம் மேடை போடுதம்மா பெண் போலே ஜாடை பேசுதம்மா..." என்று  மனதுக்குள் யேசுதாஸ் சுகமாகத் தாலாட்டுவார்.

கே.ஜே.யேசுதாஸ்
கே.ஜே.யேசுதாஸ்

பாடல் முடிந்த பின்பு, "நீங்கள் கேட்ட அந்த இனிமையான பாடலை பாடியவர் கே.ஜே.யேசுதாஸ், பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன், இசை இளையராஜா" என்று அறிவிப்பார். பாடல் ஒலிபரப்பாகும் இடைவெளியில் அது என்ன பாடல் என்றோ பின்னணி பாடியவர் யார் என்றோ, இசையமைத்தது யார் என்றோ கண்டுபிடிக்க ஒரு போட்டியே நடக்கும். இது ஒரு விளையாட்டு எங்களுக்கு.

அதன் பிறகு என்னை ஈர்த்த இரு முக்கியமான குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களான கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது. நிகழ்ச்சி அறிவிப்பாளர்களான அவர்கள் இருவரின் அழகான தமிழ் பேச்சுநடை மிக இனிமையாக இருக்கும். பெரும்பாலும் ’திரைப் பாடல்’ மற்றும் ’பாட்டுக்குப் பாட்டு’ என்ற நிகழ்ச்சிகளின் மூலம் இருவரும் பிரபலமாக அறியப்பட்டிருந்தார்கள்.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா
இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா

இன்றைய பல அறிவிப்பாளர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் ஒரு முன்மாதிரி (inspirational) அவர்கள் இருவரும் என்பது நிதர்சனம். விவித பாரதியில் இரவு 9.30 மணிக்கு (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என்று நினைக்கிறேன் ) ஒலிபரப்பாகும். 15 அல்லது 30 நிமிடங்கள் நடக்கும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நாங்கள் தவறாமல் கேட்போம்.

இரு போட்டியாளர்கள் பங்குபெறும் ’பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில், முதல் எழுத்தை மட்டும் அறிவிப்பாளர் கூறுவார். அவர் கூறிய 10 நொடிகளுக்குள் அந்த எழுத்து வரிசையில், பாடலைப் பாடத் தொடங்க வேண்டும். பத்து நொடிக்குள் பாடலைப் பாடத் தொடங்கா விட்டாலோ, மணி ஒலிப்பதற்கு முன்பு பாடலை மறந்து விட்டாலோ, போட்டியில் முன்னதாக பாடிய பாடலை மீண்டும் பாடினாலோ அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

அப்துல் ஹமீது
அப்துல் ஹமீது

போட்டியாளர் பாடலை பாடிக்கொண்டிருக்கும்போது மணி ஒலிக்கும் இடத்தில் வரும் எழுத்து வரிசையில் அடுத்த போட்டியாளர் பாடலைத் தொடங்க வேண்டும். அது எந்த எழுத்து என்று அறிவிப்பாளர்கள் நெறிப்படுத்துவார்கள். "நீங்கள் தொடங்க வேண்டிய எழுத்து ...க குறில் அல்ல கா நெடில்..." என்று அப்துல் ஹமீது சொல்வதைக் கேட்கும்போதே மனதில் ’கா’ வில் தொடங்கும் பாடல்களைத் தேடத் தொடங்குவோம்.

போட்டியில் நாமே பங்கேற்பது போன்ற நினைவு இந்த நிகழ்ச்சியின்போது ஏற்படும். நாம் நினைத்த பாடலை போட்டியாளர் பாடிவிட்டால் போதும் ஒரே குதூகலமாகிவிடும். அந்த நிகழ்ச்சி ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டு பல வாரங்களுக்கு ஒலிபரப்பப்படும் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. போட்டியாளர்கள் பல வாரங்கள் தொடர்ந்து பாடுவதாக எண்ணி வியப்படைவோம், அந்தப் போட்டியாளர் வெளியேற நேர்கையில், "ச்சே நல்லா பாடினாருல்ல..." என்று வருத்தப்படுவோம். 

Vikatan

வானொலி நேயர்களுக்கான மற்றொரு முக்கிய நிகழ்ச்சி கிரிக்கெட் வர்ணனை. அழகிய தமிழில் வர்ணிப்பார்கள். "இந்தப் பந்து வீச்சாளருக்கான வியூகம்... இரண்டு ஸ்லிப், ஒரு கல்லி ஒரு ஷார்ட் லெக்... இது அளவு சற்று வேகமாக வந்த பந்து, அதை லாவகமாக மிட் ஆன் திசையில் தட்டிவிட்டார். அதற்கு அவருக்குக் கிடைத்த ஓட்டங்கள் இரண்டு..." என்று சொல்லும்போது மனம் விளையாட்டு மைதானத்துக்குள் சென்றுவிடும்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

கிரிக்கெட் வர்ணனையாளர், "பந்து எல்லைக் கோட்டை நெருங்குகிறது எல்லைக் கோட்டை தாண்டிவிட்டது. அற்புதமான நான்கு ரன்கள்..." என்று பந்துடன் சேர்ந்து நம்மையும் ஓடவைப்பார். ஒரு விக்கெட் விழுந்தாலோ, ஒரு பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினாலோ சிறப்பு வர்ணனையாளர் சி.ஆர். ரங்காச்சாரியிடம் கருத்துக் கேட்கப்படும். அவரும் அவுட் ஆன பந்தை எவ்வாறு விளையாடியிருக்க வேண்டும் என்றோ, பந்தை லாவகமாக அடித்து ரன் எடுத்ததைப் பற்றியோ சிலாகிப்பர். இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி ’வண்ணச்சுடர்’. வார நாள்களில் விவித பாரதியில் இரவு 9.15 முதல் 9.30 வரை ஒலிபரப்பப்படும் நாடகம் அது. சில நாடகங்கள் ஒரு மாதம் வரையிலும், சில சமயம் இருவாரங்களும் ஒலிபரப்பாகும். ஒவ்வொரு நாளும் நாடகம் முடியும் போது ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடிப்பார்கள். அடுத்த நாள் நிச்சயம் அடுத்த பகுதியை தவற விட யாரும் விரும்ப மாட்டார்கள்.

எனக்குத் தெரிந்து என் அண்ணாவுடைய நண்பருடைய தாத்தா ஒருவர் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் ஒரு சிறிய வானொலி பெட்டியை (Transistor Radio) காதில் வைத்து கேட்டுக்கொண்டே இருப்பார். "சிக்ஸ் அடிச்சுட்டான்... பௌண்டரி..." என்று உற்சாகத்துடன் சொல்லுவார். 

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

யாராவது முக்கியமான ஆட்டக்காரர் அவுட் ஆகிவிட்டால் "போச்சு ஸ்ரீகாந்த் அவுட் ஆயிட்டான்..." (என் அண்ணாவுடைய நண்பனின் பெயரும் ஸ்ரீகாந்த் என்பது இங்கே கொசுறு தகவல். நாங்கள் சிறுகாம்பூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம்) என்று எதோ அவர் பேரக்குழந்தை விளையாடி அவுட் ஆனது போல் வருத்தப்படுவார்.

இந்த இரண்டு வானொலி நிலையங்கள் தவிர சிலோன் வானொலியும் அவ்வப்பொழுது கிடைக்கும். அதில் வரும் தமிழ் நிகழ்ச்சிகளையும் விட்டு வைக்க மாட்டோம். "இத்தனை மணிக்கு சிலோன் ரேடியோல பாட்டு போடுவான்..." என்று சொல்பவர்களை பார்த்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியோ துக்கமோ வானொலி வாயிலாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். 

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை மகிழ்ச்சியடனும் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் மறைந்த செய்திகளை எங்களுக்கு வருத்தத்துடன் அறிவித்தது அன்றைய தொலைத்தொடர்பு ஊடகமான வானொலி.

அளவாகக் கிடைக்கும்போது இருக்கும் முக்கியத்துவம் மிதமிஞ்சிக் கிடைக்கும்போது இருப்பதில்லை என்பார்கள். அது எல்லாவற்றிற்கும் பொருந்தும். உண்ணும் உணவு, உடுத்தும் உடை முதல் கேட்கும் வானொலி வரை அன்று சுகமான அனுபவமாக இருந்தது. 

மகிழ்வான தருணம்..
மகிழ்வான தருணம்..

அன்றைய வானொலி கொடுத்த குறைவான நிகழ்ச்சிகளைக் காத்திருந்து ரசித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, இன்றைய இணைய உலகில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற சூழலில் அதைக் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மனம் விரும்பவில்லை. ஏனென்றால் இது எப்போது வேண்டுமானாலும் கிடைக்குமல்லவா...

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு