Published:Updated:

`சாண்டில்யன் கதைகளுக்கும் Money Heist-க்கும் இருக்கும் ஒற்றுமை!' - வாசகர் பகிர்வு #MyVikatan

`Money Heist' எனும் மயக்கும் வெப் சீரிஸ் பற்றிய என் பார்வை...

மணி ஹெய்ஸ்ட் (Money Heist) எனும் ஸ்பானிஷ் வெப் சீரிஸ் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங் ஆக உள்ளது.

ஸ்பானிஷ் மொழியில் La casa de papel (The House of Paper) எனும் பெயரில் வெளிவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வாங்கிய Netflix நிறுவனம், அதை மேம்படுத்தி `மணி ஹெய்ஸ்ட்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெப் சீரிஸாக வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் அனைத்துவிதமான கற்பனைகளும் கற்பிதங்களும் (Imaginations & Assumptions) அவ்வப்போது உடைபட்டுக்கொண்டே போவது இந்தக் கதையின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். சாண்டில்யன் கதைகளில் வருவது போன்று ஒவ்வொரு எபிசோடும் சஸ்பென்சாகவே முடியும். அதைவிட அடுத்த எபிசோடின் தொடக்கம் 'அட இப்படிக்கூட நடக்குமா?' எனும் வியப்பை லாஜிக் எதையும் மீறாமலே உண்டாக்கும்!

Money Heist 4
Money Heist 4

பாக்யராஜ் நடித்த `ருத்ரா' திரைப்படத்தில் ஒரு வங்கிக் கொள்ளை காட்சி வரும்.

அதைப் பார்க்காத தமிழ் ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மில் பலர் அதைப் பலமுறை பார்த்திருப்போம். அதில் கோமாளி வேடமிட்ட பாக்கியராஜ் மிகத் திறமையாக வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வருவதை நாம் பலமுறை வியப்புடன் ரசித்திருப்போம்.

அந்தக் காட்சியைப் போன்று கதை முழுக்கவே ரசிகனுக்கு சுவாரஸ்யமூட்டும் காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதுதான் இந்த Money Heist வெப் சீரிஸின் மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

மணி ஹெய்ஸ்டின் கதை:

இரண்டு சீஸன்களாக வந்திருக்கும் இதன் முதல் சீஸனில் ஸ்பெயினின் பணம் அச்சடிக்கும் 'The Royal Mint' எனுமிடத்தில் நடக்கும் கொள்ளையும் இரண்டாவது சீஸனில் 'The Bank of Spain' -ல் நடக்கும் கொள்ளையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்க வேண்டி மிகப் பிரபலமான குற்றவாளிகள் 8 பேரை ஒரு புரொபஸர் ஒன்று சேர்க்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பட்ட சிறந்த திறன் உடையவர்கள்.

அவர்களுக்குக் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்து புதுமையான முறையில் பாடம் நடத்துகிறார் புரொபஸர்.

கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரத்தின் பெயரைத் தங்களுக்கு புதிய பெயராக சூட்டிக் கொள்கின்றனர். கதை முழுக்கவே டோக்கியோ (Ursula Corbero) என்னும் பெயருடைய கொள்ளைக்காரியின் கோணத்தில் விரிகிறது.

Money Heist
Money Heist

பிரபல ஸ்பானிய ஓவியரான சல்வடோர் டாலியின் முகத்தினை முகமூடியாக அணிந்துகொண்டு வங்கிக்குள் நுழைகின்றனர் கொள்ளையர்கள்.

கொள்ளையடித்துவிட்டு உடனே வெளியே வராமல் உள்ளே உள்ள ஊழியர்கள் மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தைக் காணவந்த பார்வையாளர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு பதுங்கிக் கொள்கின்றனர். அவர்கள் வெளியே வர முடியாத வகையில் உள்ளே சிக்கிக் கொண்டதாக அரசாங்கம் நினைக்கின்றது.

ஆனால், கொள்ளையர்கள் திட்டமே வெளியே வராமல் உள்ளே பதுங்கிக்கொள்வது என்பதுதான்.

கொள்ளையர்கள் பணம் அச்சடிக்கும் இடத்தில் இருக்கும் பணத்தை மட்டுமே எடுத்துச் செல்ல விரும்பவில்லை. இதுபோன்ற கொள்ளை இதுவரை நடந்ததில்லை என்னும் அளவுக்கு அங்கேயே தங்கி இருந்து, அங்கிருந்து தப்பிக்கும் முன் 2.4 பில்லியன் யூரோக்களை அச்சடித்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது புரொபஸரின் திட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

8 கொள்ளையர்களும் வங்கியின் உள்ளே இருக்க வெளியே ஒரு மர்மமான இடத்திலிருந்து அவர்களுக்கு உதவுகிறார் புப்ரொபஸர். கொள்ளைக்கு முன்பு 5 மாத காலம் கொள்ளையர்களை ஒரு பெரிய பங்களாவில் தங்க வைத்து ஒவ்வொரு கட்டமாகப் பயிற்சியளிக்கிறார் புரொபஸர். இந்தப் பயிற்சி பற்றிய காட்சிகள் வங்கியினுள் நடக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட் நிகழ்வுக்கும் பின்னணியில் சொல்லப்படுகிறது.

கொள்ளையர்களுடன் உள்ளே செல்லாமல் வெளியிலிருந்து அவர்களுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருக்கும் வகையில் பேராசிரியர் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் கொள்ளையர்களுடன் காவல்துறை தொடர்புகொள்ளும்போது அவர்களுக்கு வெளியில் இருக்கும் பேராசிரியரே பதில் அளிக்கிறார். ஆனால், அவர் உள்ளே இருப்பதாக அனைவரையும் நம்ப வைக்கிறார்.

Money Heist 4
Money Heist 4

காவல்துறையின் ஒவ்வொரு மூவினையும் அவர் ரகசியமாகக் கண்காணிப்பதும், அவர்களின் ஒவ்வொரு இன் கேமரா ஆபரேஷனையும் அவர் திட்டமிட்டு சிதைப்பதும் சிறப்பு. பிணையக் கைதிகளுக்கு பணம் முக்கியமா, விடுதலை முக்கியமா? என அவர்களை உளவியல் ரீதியாகக் கொள்ளைக்கு தயார்படுத்துவது எதிர்பாராத ஒன்று.

இரண்டாவது சீஸனில் போலீஸிடம் மாட்டிக்கொண்ட தங்களுள் ஒருவரைக் காப்பாற்ற வேண்டி தங்கக்கட்டிகள் மற்றும் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர்.

பேராசிரியர் ரோலில் ஆல்வரோ மார்ட்டே (Alvaro Morte) காவல்துறை உயர் அதிகாரிகளாகக் கதாபாத்திரம் ஏற்றுள்ள Itziar Ituno மற்றும் Najwa Nimri ஆகியோரின் நடிப்பு ரசிக்கக்கூடியதாய் உள்ளது.

நகரங்களின் பெயர்களைக் கொண்டுள்ள எட்டுக் கொள்ளைக்காரர்கள் மற்றும் பிணையக் கைதிகளாக நடித்துள்ள ஸ்பானிஷ் நடிகர்கள் மேம்பட்ட இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு சீஸன்களின் கதையின் முடிவும் நாம் எதிர்பாராத ஒன்றாகவே இருக்கிறது.

`மணி ஹெய்ஸ்ட்' ரசிகர்களைக் கவர்ந்ததற்கான சில முக்கியமான காரணங்கள்:

# கதையில் தொடர்ந்து திருப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவை வலியத் திணிக்கப்படாமல் இயல்பாக வருவது கதையினை சுவாரஸ்யப்படுத்துகிறது!

# அடுத்ததாக என்ன நடக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ கதையில் அது நடக்காது! நம்முடைய கற்பனைகள் மற்றும் கற்பிதங்கள் அனைத்தும் உடைக்கப்படும்போது ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகனுக்கு இயல்பாகவே ரசிப்புத் தன்மை மேலும் கூடுகிறது.

# கதையில் இரண்டு அல்லது மூன்றுவிதமான வெவ்வேறு காட்சிகள் தொடர்ந்து மாறிமாறி வருகின்றன. ஒரு காட்சியின் சுவாரஸ்யம் கூடும்போது அந்தக் காட்சி நிறுத்தப்பட்டு, டக்கென்று கதை இரண்டாவது காட்சிக்குத் தாவிவிடுகிறது.

Money Heist 4
Money Heist 4

அந்தக் காட்சியின் சுவாரஸ்யம் கூடும்போது டக்கென்று மூன்றாம் கட்சிக்கு நகர்ந்துவிடுகிறது. கதை முழுக்கவே இவ்வாறு சுவாரஸ்யப்படுத்தும் காட்சிகள் தாவிக்கொண்டே இருப்பது ரசிகனைப் பரவசப்படுத்துகிறது.

# கொள்ளையர்களுக்கு இடையேயான காதல், கொள்ளையருக்கும் பிணையக் கைதிகளுக்கும் இடையிலான காதல், கொள்ளையைத் திட்டமிட்டு நிறைவேற்றும் பேராசிரியருக்கும் அதைக் கண்டுபிடிக்கும் அதிகரிக்குமான காதல் எனப் பல்வேறு காதல் காட்சிகள் கதையின் போக்கை மேம்படுத்துகின்றன.

# பணத்தைத் திருடுவதைவிட நேரத்தைத் திருடுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான சிறுசிறு ஸ்மார்ட்டான யோசனைகள் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஊட்டுவதாக இருக்கின்றன.

# புதுமைகளைக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் வகையில் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் அவ்வப்போது வந்துபோகின்றன.

# அவ்வப்போது வரும் கொள்ளையர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பின்னணிக் காட்சிகள் கதையை மேலும் வலுப்படுத்துகின்றன. அவர்கள் கொள்ளை அடிப்பதற்கான காரணங்களையும் நியாயங்களையும் இந்த காட்சிகள் வழங்குவது சிறப்பு.

# காவல்துறை எந்தெந்தச் சூழ்நிலைக்கு எப்படி எப்படி நடந்துகொள்ளும் என்று பேராசிரியர் முன்கூட்டியே யோசித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அறிவுரைகள் வழங்கி இருப்பது போன்று காட்சிகள் வருகின்றன. கதையில் வரக்கூடிய இதுபோன்ற காட்சிகள் கதையை மேலும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

# ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை நாம் யூகிக்க முடியாமல் போவது கதையின் சிறப்பம்சங்களில் ஒன்று.

Money Heist
Money Heist
Season 4

# அவ்வப்போது கதையில் வரும் வியப்பூட்டும் ஸ்மார்ட்டான ஐடியாக்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு, அதையும் தாண்டி சில ஸ்மார்ட் ஐடியாக்கள் தோன்றுவது கதையின் வெற்றி.

# வழக்கமாக இதுபோன்ற வங்கிக் கொள்ளைக் கதைகளுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும். திட்டமிடுவது (Planning) செயல்படுவது (Execution) தப்பிப்பது ( Getaway) என்ற மூன்று கட்டங்கள் பொதுவாக இவற்றில் இருக்கும். இந்தக் கதையில் இந்த மூன்று கட்டங்களும் நாம் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவை ரசிகரது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.

# கொள்ளையர்கள் பேசும் வசனங்கள் அடக்குமுறைகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிரான சாமான்யனின் மனநிலையைப் பிரதிபலிப்பதால் கதையுடன் ரசிகர்கள் எளிதில் ஒன்றிப் போகின்றனர்.

# கொள்ளை தவறு என்பது ரசிகர்களுக்குப் புரிந்தாலும், அதிலுள்ள புத்திசாலித்தனத்தை ரசிப்பது மனித இயல்பு. அதைச் சரியாகக் கையாண்டு வெற்றி கண்டுள்ளது மணி ஹெய்ஸ்ட்.

அலெக்ஸ் பினா( Alex Pina) உருவாக்கத்தில் 2 சீஸன்களில், 4 பாகங்களாக, 31 எபிசோடுகளில் வெளிவந்துள்ள இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் OTT இல் கிடைக்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள "மணி ஹெய்ஸ்ட்" ரசிகர்கள் விடிய விடிய 4 பாகங்களைப் பார்த்து முடித்து 5-ம் பாகத்துக்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

நம்முடைய ரசிப்புத் தன்மையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் என்பதால், தமிழ் ரசிகர்கள் `மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸை அவசியம் பார்கலாம். தற்போது ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இத்தொடர் கிடைக்கிறது. இதன் இமாலய வெற்றி காரணமாய் வருங்காலத்தில் தமிழ் உள்ளிட்ட மேலும் பல மொழிகளில் Netflix-ல் கிடைக்க வாய்ப்புண்டு.

ஒரு காலத்தில் வெளிவந்த தொடர் கதைகளின் நீட்சியாகவே இன்று வெப் சீரியஸ்கள் பார்க்கப்படுகின்றன. மணி ஹெய்ஸ்ட் போன்ற சுவாரஸ்யமான வெப் சீரிஸ்களைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே உள்ளனர். எனவே, ரசிகர்களைப் பரவசப்படுத்தும் இவ்வகை திரைக்கதைகளை உருவாக்க நம் தமிழ் படைப்பாளிகள் தயாராக வேண்டும்.

`மணி ஹெய்ஸ்ட்' போன்ற ரசிகனுக்கு ஆச்சர்யமூட்டும் வகையிலான வெப் சீரிஸ்கள் தமிழில் எடுக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழ் வெப் சீரிஸ் ரசிகனின் விருப்பமாக இருக்கும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு