Published:Updated:

`ஒன்ஸ் மோர் பார்த்தப்போ சிவாஜி தான் தெரிஞ்சார்...’ - உருகும் 90’ஸ் கிட் #MyVikatan

90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கருப்பு வெள்ளை காலக்கட்டம் முதல் கலர் சினிமா வரை நடித்த அனைத்து படங்களிலும், காட்சிகளிலும், ப்ரேம்களிலும் தன்னை, தனது தனித்துவமான உடல்மொழிகளால், வசன உச்சரிப்புகளால் நிலைநிறுத்திக்கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை பற்றி இங்கு பகிர விரும்புகிறேன். சாதாரணமாக திரையில் பார்த்த ஒரு கலைஞரை, அவரின் ரசிகனான என் தமையனின் நேத்திரங்களின் வழியாக கண்ட தரிசனம் இது. அவரின் நடிப்பு நிச்சயம் ஒரு சரித்திரம் தான்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான். ரஹ்மான் தன் இசையால் நம் உணர்வுதாளங்களை தட்டி எழுப்பிய காலமது. திடீரென்று வெளிச்சம் வீசிச் செல்லும் மின்னலைப்போல்தான் எனக்கு சிவாஜி என்னும் உன்னதக்கலைஞனின் நடிப்பு அறிமுகமாகியது. முதன்முதலாக 'ஒன்ஸ் மோர்' படம் பார்த்தப் பொழுது, தனது 'சாந்தா'வுக்காக ஏங்கும் அந்தக் காட்சிதான் என்னை அவரை நோக்கி ஈர்த்த முதல் நிகழ்வு. படம் முடிந்த பின்பு 'இருவர் உள்ளம்' படம் போட மாட்டார்களா என்று காவிய புதன் விளம்பரங்களை விடாமல் பார்த்திருக்கிறேன். ஏனோ அந்த ‘சாந்தாவும்’, ‘நினைவெங்கே போகிறது? ' பாடலும் நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.

அதன்பின், ஒரு சில ஆண்டு இடைவெளியில் மறுபடியும் சிவாஜி என்றொரு கலைஞனின் மற்றொரு பரிணாமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடை விடுமுறையென அனைவரும் தாத்தா பாட்டி வீட்டில் முகாமிட்டிருந்தோம். என்ன முரண்டு செய்தாலும், மதியம் கண்டிப்பாக வீட்டினுள் அடைத்துவிடுவர் தாத்தா . அப்படிப்பட்ட வேளையில் மறுபடியும் ஒரு படம், 'பாரத விலாஸ்'. கடைசி வரை மனசாட்சியுடன் பேசிப் பேசியே மனிதர் நம்மையும் அப்படி புலம்பவைத்து விடுவார். அதுவென்னவோ, இன்று வரை புதியபறவை 'கோபாலை' விட, பாரத விலாஸ் 'கோபால்' தான் என்னுடைய பேவரைட்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

மற்றோர் நாள் , ஏதோ ஒரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பப்பட்டு, நம்மை அப்படியே கட்டிப்போட்ட படம், "திருவிளையாடல்". அதிலும் கலர் கலர் லைட் செட்டிங்ஸ் வைத்து, "சங்கதனை கீறு கீறு எனக்கீறும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்ல தக்கவன்?" டயலாக் கேட்டப்போது ,"எப்படி இத மனப்பாடம் பண்ணிருப்பார்?" என்று மட்டுமே சிந்தனை ஓடியது. நக்கீரர் விடவில்லையே, " சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம், சங்கை அறிந்துந்து வாழ்வோம், அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை." வசனமும், அதற்கு சிவாஜி மேல் பரவுகின்ற வெளிச்சமும், அவர் புருவத்தூக்கலும் அல்ட்ராலெஜெண்ட் லெவல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது நடுத்தரக்குடும்பங்களில் CD பிளேயர் வந்த காலம். எதாவது ஒரு படத்துக்கு CD கிடைச்சா, அது தேயும் மட்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படிதான் அறிமுகம் ஆனார்கள் ராஜராஜசோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.

தேவாரத்தை மீட்டெடுத்த பெருமானேன்னு எல்லாரும் ராஜராஜனை சொல்வதே எனக்கு அப்போதுதான் தெரியும். கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுல தஞ்சை பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, ராஜராஜன் அரசாண்ட பூமியிலேயே வாழ்ந்துட்டு ராஜராஜன் பத்தி தெரியாத எங்கள் தலைமுறைக்கு அவர்தான் ராஜராஜச்சோழன். `தஞ்சை பெரியக்கோவில் வாழ்க வாழ்கவே` பாட்டுக்கேட்டாலே மனசில் வரும் ராஜராஜன் சிவாஜி தான்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

எத்தனை பேருக்கு அந்த அரச கம்பீரம் வரும்? அக்கன் குந்தவையிடம் பணிவு, மனைவியிடம் காதல், பெருந்தச்சனிடம் சீடன், மகளுக்கு தகப்பன், ராஜதந்திரங்கள் நிறைந்த மாமன்னன் என எல்லா உடல்மொழியிலும் அவர் காட்டிய அபாரத்திறமை இருக்கிறதே! சொல்லில் மாளாது.

திருவருட்செல்வரில் "மன்னவன் வந்தானடி" பாடல். நளினம், கம்பீரம், ஆசை அனைத்தையும் நடையிலே காட்ட முடியுமா என்ன? ஆனால் இன்றும் அவை காண்போரின் மனதில் நீங்காது. கந்தன் கருணையில் சிறு பாத்திரம் தான்.

வீரபாகுத்தேவர். ஆனால் வசனமும் காட்சி நிகழ்வுகளும் படம் முடிந்த பின்னர் கூட நம்மை தொடரும்.

" நீ சூரன், நான் வீரன்" என சூரனிடம் கொக்கரிப்பதாகட்டும், வெற்றிவேல் வீரவேல் என்று படை நடத்துவதாகட்டும், இறுதியில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில், " தாயே இப்பொழுது நீங்கள்" என்று இயல்பாக சிக்கி திண்டாடுவதாகத்தும், அவரை தவிர்க்கவே முடியாத இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

சிவாஜி ஒரு வசந்தகாலக் கலைஞன். அதனால் தான் அவரின் வசந்த மாளிகை எப்பொழுது பார்த்தாலும் நம்மை கனக்க வைக்கின்றது. ஒரு அதீத சுயமரியாதை உள்ள பெண்ணிற்கும், அன்பினை தேடித்தேடி அலையும் பணக்கார ஆணிற்குமான காதல் எல்லா வரையறைகளையும் தாண்டிய நெகிழ்வல்லவா? சிறுப்பிராயம் முதல், அன்பிற்காக ஏங்கி, தன்னை ஒரு easy go மனிதனாக காட்டிக்கொண்ட மனிதனை எப்போது கற்பனை செய்தாலும், வசந்த மளிகை 'ஆனந்த்'தான் நம் நினைவிற்கு வருவார்.

அன்பிற்கும், அதிகாரத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பமுடியாமல் தவிக்கும் அத்துணை நேரங்களிலும், `எங்க சின்னவர் கெட்டுபோய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா` என்ற குரல் நம்மை அறியாமல் மனதிற்குள் ஒலிக்கும். `மயக்கமென்ன` பாடலில் காதலின் ஆழத்தை அந்த கண்ணாடி அறையின் சுவர் வழியே கடத்தும் அழகிற்கு கொஞ்சமும் குறையாமல், `யாருக்காக` பாடலில் கசிந்துருகும் வலியினை விரவ யாரால் இயலும்? தனக்கு தானே சரிநிகர் சமானமான வெகுஜனக்கலைஞர் அவர்.

சிவாஜி கணேசன், நாகேஷ்
சிவாஜி கணேசன், நாகேஷ்

திரிசூலத்தில் `சுமதி` என்ற விளிப்போடு பாடும் `மலர் கொடுத்தேன்` கண்டு கண்ணீர்விடாத கண்களே இருந்திருக்க முடியாது.

`படிக்காத மேதை` ரங்கனாக நம்மை உருக வைக்கும் அதே வேளையில் `பார் மகளே பார்` சிவலிங்கமாக கௌரவம் காட்டி தள்ளி நிற்கவும் வைப்பார்.

தந்தைக்கு பயந்துச்சாகும் ` உயர்ந்த மனிதன்` ராஜுவும் அவர்தான். தந்தையையே அரட்டி வைக்கும் `ஊட்டி வரை உறவு` ரவியும் அவரேதான்.

அவரே `வீரபாண்டிய கட்டபொம்மனாய்` சிம்மகர்ஜனையும் செய்வார், `புதிய பறவை` கோபாலாய் கொலையும் செய்வார்.

`அன்புள்ள அப்பாவின்` ராஜசேகரன் மகளின் திருமணத்தில் பாடிய `மரகதவல்லிக்கு மணக்கோலம்` ஒலிக்காத திருமண வீடுகளே கிடையாது. காலங்கள் மாறினாலும் `எந்தன் வீடு கன்று இன்று எட்டி எட்டி போகிறது` வரியில் கண்ணீர் விடாத தகப்பன்களே கிடையாது. இன்றும் தேவர் மகனின் `இதெல்லாம் என்ன பெருமையா? கடமை` template Meme creator -களின் நிலைவாசல். அதிலும் அந்த படத்தின் அப்பா-பையன் உரையாடலும், அதன் கனமும், அந்த நிமிடம் நம் கண்ணில் நிறையும் நீரும், மனவோட்டத்தில் உறைந்துப்போன நொடிகள்தான்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

எல்லா வார்த்தைகளுக்கும் அகராதியில் பொருள் இருப்பதைப்போலவே , எல்லா கதாபாத்திரங்களும், அதன் மேதமைகளோடு சரிவர அளக்கப்பட்டு, சிவாஜியினால் நிறுவப்பட்டிருக்கும். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனில் தன்னை தொலைத்து, கதாபாத்திரத்தை மிளிரச்செய்யும் தன்மை அவரையே சேரும். அவர் ஒரு சரித்திரம், அவரின் நடிப்பு பெரும் பாடம்.

-மனோ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு