Published:Updated:

மாடர்ன் லவ் சென்னை: மூன்று ராஜாக்களின் ஆறு காதல் கதைகள்!

மாடர்ன் லவ் சென்னை
News
மாடர்ன் லவ் சென்னை

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என, தமிழ் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உருவாக்கத்தில் உருவான தொடர் என்பதால், `மாடர்ன் லவ் சென்னை; மீதான எதிர்பார்ப்பு ஏராளமாகவே இருந்தது.

Published:Updated:

மாடர்ன் லவ் சென்னை: மூன்று ராஜாக்களின் ஆறு காதல் கதைகள்!

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என, தமிழ் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உருவாக்கத்தில் உருவான தொடர் என்பதால், `மாடர்ன் லவ் சென்னை; மீதான எதிர்பார்ப்பு ஏராளமாகவே இருந்தது.

மாடர்ன் லவ் சென்னை
News
மாடர்ன் லவ் சென்னை

மாடர்ன் லவ்...

ஒரு பத்திரிகை பத்தி சுவாரஸ்யமான ஓடிடி தொடராக முடியுமா? ‘ஓ... முடியுமே' என நிரூபித்த தொடர்தான் இது. தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான வாராந்தரப் பத்தியின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் 'மாடர்ன் லவ்' (இரண்டு சீசன்கள்). நியூயார்க் நகரில் நடக்கும் வெவ்வேறு காதல் கதைகளாக ஜான் கார்னே இயக்கி அமெரிக்காவில் பிரைம் வீடியோ வாயிலாகப் புகழ்பெற்றது. இது காதல், குடும்பம், சுய காதல், விரக்தி, காமம், இரக்கம், அன்பு, நம்பிக்கை உட்பட பல வடிவங்களில் நவீன காதலை ஆராய்கிறது.

Modern Love Chennai
Modern Love Chennai

நியூயார்க்கை தாண்டி, இந்தியாவில் மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் வரிசையில் இப்போது மாடர்ன் லவ் சென்னை!

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என தமிழ் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உருவாக்கத்தில் உருவான தொடர் என்பதால், எதிர்பார்ப்பு ஏராளமாகவே இருந்தது. இளையராஜா, பாரதிராஜா ஆகியோரின் பங்களிப்பும், இவர்கள் இருவரும் நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்த ஒரு கதையும் இருப்பது அடுத்த ஆச்சர்யம். இப்படி மூன்று ராஜாக்களின் முக்கியத்துவம் பெற்ற மாடர்ன் லவ் சென்னையின் ஆறு கதைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

லாலாகுண்டா பொம்மைகள்

ராஜூமுருகன் எழுத்து, இயக்கத்தில் எளிய மக்களின் பின்னணியில் ஒரு குறும்படம். பட்டர் பிஸ்கட் ஃபேக்டரி பெண்ணுக்கும் பானி பூரி வடக்கத்திப் பையனுக்கும் பூக்கும் காதல் எப்படிப் போகிறது என்பது ஒன்லைன் (லாலாகுண்டா - வட சென்னையின் ஒரு பகுதி; பொம்மைகள் - யாரென்று உங்களுக்கே தெரியும்).

புலம்பெயர்ந்து வரும் வடக்கத்தி மனிதர்கள் தமிழ் வாழ்வோடு கலந்துவிட்ட சூழலை இயல்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நகரமயமாதலின் விளைவுகளில் ஒன்றான பல்வேறுபட்ட மக்கள் ஒன்றாக வாழும் தன்மை, அதற்கான சமரசங்கள், கலப்பு என அவ்வளவாகப் பேசப்படாத விஷயங்களை இயல்பான திரைமொழியில் கையாண்டிருக்கிறார்.

லாலாகுண்டா பொம்மைகள்
லாலாகுண்டா பொம்மைகள்

மிக நுட்பமான சமூக, கலாசார, அரசியல் பார்வைகொண்ட இந்தக் கதைக்கு வசனங்களும் கதாபாத்திரங்களும் துணை நிற்கின்றன. அதே நேரத்தில் பார்வையாளரை உள்ளிழுக்கும் நகைச்சுவை இழையோடுவது ஒரு பலம். ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தது. பெண் பாத்திர வடிவமைப்பும், ‘இதுவும் கடந்து போகும்’ எனக் காதலின் வலியிலிருந்து இயல்பாக மீளும் தன்மையும், அதற்கேற்ற வசனங்களும் அருமையாக வாய்த்திருக்கின்றன. அந்த வகையில் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

இமைகள்

பாலாஜி தரணிதரன் எழுதி பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிற குறும்படம். காதல் என்பது ஒரு வாக்குறுதி. அது வாழ்நாள் முழுவதும் எந்தச் சூழலிலும் இமைகள் போல இருவரையும் இணைத்திருக்கும் என்பதற்கான கதை. டி.ஜே.பானு, அசோக் செல்வன் ஆகியோர் யதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். வாழ்வில் நம்பிக்கை இழக்கும் ஒரு தருணத்தில் அதை இறுகப் பற்றிக்கொள்ளும் விஷயமாக இதில் இசை (வீணை) இடம்பெறுகிறது.

தம்பதிகளுக்கிடையேயான ஆழமான காதலுக்கும் பின்னர் அவர்களுக்கிடையிலான தெளிவின்மைக்குமான காரணம் ஆழமாக இல்லை என்பது ஒரு பலவீனம். மற்றபடி, சட்டென முறியும் நவீன காதல் காலத்தில் விட்டு விலகாத காதலாக வாய்த்திருக்கும் வகையில் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

இமைகள்
இமைகள்

காதல் என்பது கண்ணுல Heart இருக்கிற Emoji சினிமாவையும் காதலையும், சினிமாவின் மீதான காதலையும், காதலின் மீதான காதலையுமே தன் வாழ்க்கையாக பாவிக்கும் 90’ஸ் கிட் லவ்வபிள் ஸ்டோரி. ரேஷ்மா கட்டாலாவின் எழுத்தில் கிருஷ்ணகுமார் ராம்குமாரின் இயக்கம். ரொமான்டிக்காக காதலித்தே தீர வேண்டும் என வெறித்தனமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், இணையம் என சகலத்திலும் முயற்சி செய்யும் பெண்.

நிறைவேறா காதல்கள் காரணமாக, படையப்பா ‘நீலாம்பரி’ போல கதவை அடைத்துக்கொண்டு காதல் படங்கள் பார்த்துக்கொண்டே, கன்னாபின்னாவென தின்றுகொண்டே இருப்பது காமெடியாகத்தான் இருக்கிறது. மழையில் நனைவது உண்மையில் நசநசவென்றுதான் இருக்கும்... சினிமாவில் வரும் ரொமான்டிக் மழையிசை அல்ல அது என பரத்வாஜ் ரங்கன் சொல்வதன் மூலம் இப்படத்துக்கும் வாழ்க்கைக்குமான யதார்த்த இடைவெளியை அவர்களே சொல்லிவிடுகிறார்கள்... அந்த வகையில் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

மார்கழி

பாலாஜி தரணிதரன் எழுதி அக்‌ஷய் சுந்தர் இயக்கிய படம். பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு அப்பாவுடன் வாழும் மகளின் கதை. அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் காட்சிகள் இப்படத்தின் சிறப்பம்சம். சென்னையில்தான் இந்த இடங்கள் இருக்கின்றனவா என ஆச்சர்யப்படுத்தும் லொக்கேஷன் தேர்வுகள்.

‘இசையோடுதான் நான் வாழ்வேன்’ என, தன் தனிமைக்கு இசையைத் துணையாக்கும் பதின்ம வயது பெண்ணின் வாழ்க்கையில் ஒரு கோடை விடுமுறையில் இணைகிறான் அதே வயதுடைய ஒருவன். முதல் காதல் ரொம்பவே ஸ்பெஷலானது என்பதால் அவள் அளிக்கும் பிரிதலின் முத்தமும், அந்தப் பிரிவை அவள் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் வித்தியாசமானது என்கிற வகையில் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

மார்கழி
மார்கழி

பறவை கூட்டில் வாழும் மான்கள்

`மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்’ என்கிற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளிலிருந்து (மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்) ஈர்க்கப்பட்ட தலைப்பு இங்கு கவித்துவமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நண்பன் பாலுமகேந்திராவுக்கு பாரதிராஜா சமர்ப்பித்திருக்கும் இப்படத்தில் முன்னவரின் தாக்கங்கள் நிறையவே உண்டு. ‘மறுபடியும்’ படத்தின் நட்சத்திரங்களான ரவி, ரேவதி, ரோகிணி ஆகிய பெயர்களே இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள்!

இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கு தான் எந்த வகையிலும் குறைந்தவரில்லை என மீண்டும் நிரூபித்திருக்கிறார் 81 வயது இளைஞர் பாரதிராஜா. இயல்பும் நேர்த்தியும் மிக்க நடிப்புக்கு கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலக்ஷ்மி மூவரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இப்படி நடக்கும் என்கிற முன்முடிவுகளைப் பொய்யாக்கும் திரைக்கதையை அளித்திருக்கிற பிரதீப் குமாரின் எழுத்து இப்படத்துக்கு வலு சேர்க்கிறது.

(ரோஹிணி: உங்க கணவர், குழந்தைகள் எல்லாரையும் என்கிட்ட குடுத்துட்டீங்க, என்கிட்ட குடுக்க எதுவுமேஇல்லை. வெறுமை மட்டும்தான் இருக்கு

ரேவதி: அந்த வெறுமையை நான் எடுத்துக்கிறேன். அதுதான் நீங்க என்ன முடிவெடுக்கனும்ங்கிற தெளிவை உங்களுக்கு குடுத்துருக்கு. எனக்கும் அந்த தெளிவை குடுக்கும்).

ஒரு குடும்ப செஃல்பிக்குள் தற்செயலாக இடம்பெறும் விஜயலக்ஷ்மி (ரோஹிணி) அந்தக் குடும்பத்தில் ஒருவராக மாறுவதற்குக் காரணம் ஒரு காதல். காதல் என்பது ஒருமுறைதான் பூக்கும் என்கிற கற்பிதததை உடைத்திருக்கிறது என்பதாலும், வித்தியாசமான வெகு அரிதான பெண்ணாக ரேவதியைக் காட்டிய வகையிலும் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

(பி.கு: இது பிற்போக்குத்தனமாக இருக்கிறது... அதற்கு நவீன சாயம் பூசியிருக்கிறார் இயக்குநர் என்றும் ‘காதல் சுயநலமாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும்’, இனி சண்டை போட்டு கணவனை விட்டுவிலகாமல் இருந்து ஆகப்போவதென்ன என பிராக்டிகலாக முடிவெடுக்கிறாள் நாயகி என்றும் இருவேறு பார்வைகளை இப்படம் தருகிறது).

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்
பறவைக் கூட்டில் வாழும் மான்கள்

நினைவோ ஒரு பறவை

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கிய சற்றே நீளமான படம். கதை சொல்லும் முறையில் வழக்கம் போல புதிய பாணியைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதனாலேயே இப்படத்துக்கு ஒவ்வொரு பார்வையாளரும் தனித்தனியாக தியரிகளையும் குறியீடுகளையும் உருவாக்கி அர்த்தம் கற்பிக்க முடிகிறது. நேரடிப் பொருளில் பார்த்தால் ஒரு காதல், ஒரு முறிவு, மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் அதே காதல் என்கிற கதை. கதைக்குள் கதையாக வருகிற சினிமா கதையையே முதன்மைக் கதையாகவும் கருத முடியும். அது உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டது.

ஜூப்லி வெப் சீரிஸ் மூலம் நிலோபராக பலரது உள்ளங்களைக் கவர்ந்த வாமிகா இதன் நாயகி (ஆம்... மாலை நேரத்து மயக்கம் பட நாயகியேதான்). இவர் இந்தப் படத்தை மொத்தமாகத் தாங்கிப் பிடிக்கிறார் என்றால் மிகையில்லை.

ஓடிடி தொடர்களை வழக்கமான க்ரைம் கதைகளைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சி என்ற வகையிலும் இது ஒரு மாடர்ன் லவ் சென்னை!

நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை

மொத்தத்தில்...

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் என்றே மாடர்ன் லவ் சென்னையைக் கூறலாம்.

வைஜயந்தி அக்கா, ஷோபா, மல்லிகா, ரோஹிணி, ரேவதி, ஜாஸ்மின், சாம் என ஒவ்வொருவரும் தனித்துவத்துடன் வாழ்கிறார்கள் இந்தக் கதைகளில்.

ஒரிஜினல் மாடர்ன் லவ் சீசன்-2ல் LGBTQ க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற எந்தக் கதையும் மாடர்ன் லவ் சென்னையில் இல்லை. அனைத்துப் படங்களிலுமே வசனமும் இசையும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இசை பற்றி தனித்தனியாக பல அத்தியாயங்கள் எழுதலாம். ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் Ilaiyaraaja: 2கே கிட்ஸையும் காதல் கொள்ள வைக்கும் இளையராஜாவின் `Modern Love Chennai'!

(https://www.vikatan.com/music/modern-love-chennai-how-ilaiyaraaja-is-still-staying-relevant-in-this-2k-kids-era) படியுங்களேன்!