Published:Updated:

மாமுக்கோயா நினைவலைகள்: கோழிக்கோடு மண்ணின் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்திய சிரிப்பு நடிகர்!

மாமுக்கோயா

நடிப்புத்துறை மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற பாடப்புத்தகமாக அவர் மாறியுள்ளார். சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன் என மாமுக்கோயா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.

Published:Updated:

மாமுக்கோயா நினைவலைகள்: கோழிக்கோடு மண்ணின் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்திய சிரிப்பு நடிகர்!

நடிப்புத்துறை மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற பாடப்புத்தகமாக அவர் மாறியுள்ளார். சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன் என மாமுக்கோயா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.

மாமுக்கோயா
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள ரசிகர்களைச் சிரிக்க வைத்த நடிகர் மாமுக்கோயா தனது 76-வது வயதில் மரணமடைந்தார். காளிகாவு பூங்கோடு பகுதியில் உள்ள செவன்ஸ் ஃபுட்பால் போட்டிகளைத் தொடங்கி வைக்கச் சென்ற அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னை மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார். அவரது உடல் கோழிக்கோடு டவுன் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
நடிகர் மாமுக்கோயா மரணம்
நடிகர் மாமுக்கோயா மரணம்

கோழிக்கோடு பள்ளிக்கண்டியைச் சேர்ந்த சாலிக்காண்டி முஹம்மது - ஆயிஷா ஆகியோரது மகனாக 1946-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி பிறந்தார் மாமுக்கோயா. கோழிக்கோடு எம்.எம் ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரை பயின்றவர் பின்னர் மரம் அறுக்கும் மில்லில் வேலைக்குச் சென்றார். நாடகம் நடிப்பதில் ஆர்வம் கொண்ட மாமுக்கோயா நிலம்பூர் பாலன், வாசு பிரதீப், குஞ்ஞாண்டி பொன்றவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர்களுடன் சினிமாவில் பிரவேசித்தார்.

1979-ம் ஆண்டு நிலம்பூர் பாலன் இயக்கிய 'அன்னியருடே பூமி' என்ற சினிமாவில் நடித்ததன் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தார். கோழிக்கோடு மாப்பிளா பேச்சு வழக்கு மூலம் தனித்துவ நடிப்பில் கவனம் ஈர்த்தார். காமெடி காட்சிகள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர், பெருமழைக்காலம் போன்ற சினிமாக்கள் மூலம் அனைத்துக் கதாப்பாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்துக்காட்டினார். 2004-ல் மாநில அரசின் சினிமா விருதைப் பெற்றார். 'குருதி' சினிமாவில் மூஸா காதர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தது அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எந்த வேடத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றிவிடுவார் மாமுக்கோயா. 250-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மாமுக்கோயாவுக்கு சுஹ்ரா என்ற மனைவியும், நிஸார், ஷாஹிதா, நாதியா, அப்துல் ரஷீத் என நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

பழைய மலையாளப் படங்களில் மாமுக்கோயா
பழைய மலையாளப் படங்களில் மாமுக்கோயா

மாமுக்கோயா மரணத்துக்கு மலையாளத் திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நடிகர் ஜெயராம் கூறுகையில், "அவருடன் நிறைய சினிமாக்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்தைப்போன்று ஒரு நபர் இருக்கிறார் எனத் தோன்றும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும். த்வனி என்ற சினிமா ஷூட்டிங் சென்ற சமயத்தில் கோழிக்கோட்டில் வைத்து அவருடன் அறிமுகம் கிடைத்தது. 35 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம்" என இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "தளும்பாத நிறைகுடமாக இருந்தார் பிரியப்பட்ட மாமுக்கேயா. மலபார் ஸ்டைலின் தனித்துவத்தை மாற்றமில்லாமல் வெள்ளித்திரையில் வெளிப்படுத்தினார். ’தூரே தூரே ஒரு கூடு கூட்டாம்’ என்ற சினிமா தொடங்கி சமீபத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ’ஓளவும் தீரவும்’ சினிமா வரை எத்தனையோ சினிமாக்களில் ஒன்றாக நடிக்கும் அதிஷ்டம் கிடைத்தது. கள்ளங்கபடம் இல்லாத அந்தச் சிரிப்பு ஒருபோதும் மறையாமல் என்றென்றும் மனதில் நிறைந்து நிற்கும். மலையாள சினிமாவுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்திய அவருக்கு அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாமுக்கோயா
நடிகர் மாமுக்கோயா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் பதிவில், "கோழிக்கோடு மண்ணின் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியவர் மாமுக்கோயா. ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்த அவரின் மறைவு கலை உலகுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. மலையாள சினிமாவில் மட்டும் அல்ல, மலையாளிகளின் ஒரு காலகட்டத்தின் சிரிப்பும் அவருடன் மறைந்துபோகின்றது. கேரள வாழ்க்கையை நினைவுபடுத்தும் நிறைய கதாபாத்திரங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், நாடோடிக் காற்று, தலையணை மந்திரம் போன்ற சினிமாக்கள் மூலம் ரசிகர்களின் பிரியப்பட்ட நடிகராக மாறினார். நாலரைப் பதிற்றாண்டுகள் நீண்டு நின்ற சினிமா உலக நடிப்பும், அதற்கு முந்தைய நாடகத் துறையின் நடிப்பு மூலமாகவும் நடிப்புத்துறை மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற பாடப்புத்தகமாக அவர் மாறியுள்ளார். சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.