மலையாள சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் இன்னொசென்ட். இவர் சாலக்குடி தொகுதியில் எம்.பி-யாகவும் இருந்துள்ளார். சுவாசப் பிரச்னை மற்றும் இதயப் பிரச்னை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 3-ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அவரது பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
நடிகர் இன்னொசென்ட்டின் உடல் இன்று காலை கொச்சியிலும், அதைத் தொடர்ந்து திருச்சூர் இரிஞ்ஞாலகுடா பகுதியிலும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

75 வயதில் மரணமடைந்த இன்னொசென்ட் ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சினார். 750-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துள்ளார். 1972-ம் ஆண்டு 'நிருத்தசாலா' என்ற சினிமா மூலம் சினிமா நடிகராக அறிமுகம் ஆனார். பல ஆண்டுகள் மலையாள சினிமா நடிகர் சங்கமான 'அம்மா'-வின் தலைவராக இருந்தார். கேன்சர் பாதித்த நிலையில் அதிலிருந்து மீண்டுவந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
நடிகர் இன்னொசென்ட் இடதுசாரி அரசியலிலும் இயங்கினார். ஒருமுறை, "நான் ஒரு ஆவேசத்தில் இடதுசாரியாக ஆகிவிட்டேன். அது எனது தவறு என உணர்ந்துகொண்டேன்" என இன்னொசென்ட்டின் போட்டோவைப்போட்டு சிலர் சமூக வலைத்தளங்களில் போலியாகப் பரப்பினர். அதற்குப் பதிலடி கொடுத்த இன்னொசென்ட், "அந்தப் பதிவைப் போலியாகச் சிலர் பரப்பி வருகின்றனர். எனது அப்பா அடிப்படையில் உறுதியான ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தார். அப்பாவின் அரசியலின் வெப்பத்தை உணர்ந்துதான் நான் வளர்ந்ததும், வாழ்ந்ததும். எனவே, நான் சாகும்வரை கம்யூனிஸ்ட்டாகவே இருப்பேன்" எனக் கூறியிருந்தார்.
சினிமா பிசியில் இருந்த இன்னொசென்ட்டை நாடாளுமன்ற வேட்பாளராகக் களமிறக்க இன்றைய கேரள முதல்வர் பினராயி விஜயன் முக்கிய பங்குவகித்தார். 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலில் இன்னொசென்ட் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டார். தலையில் தலைப்பாகை கட்டியபடி காங்கிரஸ் கோட்டையான சாலக்குடியில் பிரசாரத்தை அனல் பறக்கச்செய்தார் இன்னொசென்ட். அவருக்காக முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் சாலக்குடியில் வாக்கு சேகரித்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவரான பி.சி.சாக்கோவை தோற்கடித்து, 13,884 வாக்குகள் வித்தியாசத்தில் இன்னொசென்ட் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் கோட்டையான சாலக்குடியை வென்று சிவப்பாக்கிய பெருமை இன்னொசென்ட்டையே சாரும். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்ட இன்னொசென்ட் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் பென்னிபெகன்னான் வெற்றிபெற்றார். வெற்றியிலும், தோல்வியிலும் சாலக்குடி தொகுதி மக்களுக்காகச் செயல்பட்டார். இறுதி மூச்சுவரை கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தார். இன்னொசென்ட் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.