எழுநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஐந்து தலைமுறைகள் கண்ட பிரபல மலையாள நடிகரான இன்னொசென்ட் (75) நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குச் சமீபத்தில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

இந்நிலையில் மலையாளத் திரைப்படத்துறையினர் பலரும் இன்னொசென்ட் மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான், மறைந்த நடிகர் இன்னொசென்ட் குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "நம் நட்சத்திரங்களின் தொகுப்பில் பிரகாசமாக ஒளிர்ந்த நட்சத்திரத்தை இழந்தோம். நாங்கள் அழும்வரை எங்களைச் சிரிக்க வைத்தவர் நீங்கள். எங்கள் உள்ளம் வலிக்கும் வரை எங்களை அழவும் வைத்தவர் நீங்கள். என்றும் காலத்தால் அழியாதவர் நீங்கள். உங்களைத் திரையில் பார்த்த அனைவரின் இதயத்திலும் ஒரு குடும்பத்தினரைப்போல நிறைந்திருப்பவர் நீங்கள்.
உங்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். என் குழந்தைப் பருவத்தில் என் தந்தையின் சகோதரனைப் போல, சுருமிக்கும் (துல்கரின் சகோதரி) எனக்கும் சொந்த மாமா போலவே உடன் இருந்தீர்கள். பிறகு உங்களுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு நான் வளர்ந்தேன். அன்றும் இன்றும் பல வியப்பூட்டும் கதைகளை எங்களுக்குக் கூறினீர்கள். எப்பொழுதும் மக்களை ஒன்றிணைத்து, அவர்கள் உயர்வதற்காக உழைத்தீர்கள். என் மனம் பலவற்றை நினைக்கிறது. என் எழுத்தும்! ஐ லவ் யூ டியர்லி இன்னொசென்ட் அங்கிள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.