'நேரம்', 'பிரேமம்' போன்ற படங்களை இயக்கி மலையாள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘GOLD’. இப்படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாளம், தமிழ், இந்தி, மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

‘GOLD’ திரைப்படம், 'நேரம்', 'பிரேமம்' படங்களைப் போல இல்லை என்றும் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். பலர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனைத் தொடர்ந்து ட்ரோல் செய்தும் வந்தனர். இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவிடப்படும் பல எதிர்மறையான கருத்துகளுக்கும், ட்ரோல்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அப்பதிவில், “'கோல்ட்' திரைப்படத்தைப் பார்த்து நீங்கள் என்னையோ என் படத்தையோ உங்களின் திருப்திக்காகத் தவறாகப் பேசினால், ட்ரோல் செய்தால், அது உங்களுக்கானது மட்டுமே. அது என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. உங்களது விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எனது ‘Profile Picture’-ஐ நீக்கியுள்ளேன். நான் ஒன்றும் உங்களின் அடிமை இல்லை. பொதுவெளியில் என்னை விமர்சிக்கவோ, கலங்கப்படுத்தவோ உங்களுக்கு உரிமை கிடையாது. அதனால் எனது படங்களைப் பிடித்திருந்தால் மட்டும் பாருங்கள். எனது சமூக வலைதள பக்கத்தில் உங்களது கோபத்தைக் காட்டாதீர்கள்.
அப்படி நீங்கள் செய்தால் நான் சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடுவேன். நான் முன்புபோல் இல்லை. நான் எனக்கும், என் மனைவி, குழந்தைகளுக்கும், என்னைப் பிடித்தவர்களுக்கும், என் தோல்வியில் துணை நின்றவர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் தோல்வியடையும்போது என்னைப் பார்த்துச் சிரித்த உங்களின் முகங்களை நான் என்றும் மறக்க மாட்டேன். யாரும் வேண்டுமென்றே தோல்வியடையமாட்டார்கள். அது இயற்கையாக நடக்கும் செயல். அதனால் அதே இயற்கை என்னை உறுதுணையுடன் பாதுகாக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.