கால்பந்து போட்டிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த பிரபல மலையாள நடிகர் மாமுக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 76.

மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மாமுக்கோயா. நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், காமெடி நடிகராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துப் பிரபலமடைந்தார். ‘அண்ணியாருதே பூமி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான மாமுக்கோயா 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். மம்மூட்டி, மோகன்லால், போன்ற முன்னணி மலையாள நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கால்பந்தாட்டத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் அண்மையில் பூங்கோடு ஜானகிய செவன்ஸ் ஃபுட்பால் டோர்னமென்ட் (Poongod Janakeeya Sevens Football Tournament) போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக மலப்புரம் வந்திருந்தார். போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.