Published:Updated:

“என் பெயரை ‘ரஜினி ஹாசன்’னு மாத்திக்க யோசிச்சிருக்கேன்!”

சுராஜ் வெஞ்சாரமூடு
பிரீமியம் ஸ்டோரி
News
சுராஜ் வெஞ்சாரமூடு

பொதுவா நடிக்க வரலைன்னா டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆகியிருப்பேன்... நடிக்க வந்ததே ஒரு விபத்து என சினிமாவில் இருப்பவர்கள் சொல்வார்கள். நான் ஒரு விபத்தாலதான் நடிக்கவே வந்தேன்.

சுராஜ் வெஞ்சாரமூடு... ஊர்ப்பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டு மலையாள சினிமாவையும் தாண்டி இந்தியாவின் கவனம் ஈர்க்கும் திரைக் கலைஞன். ‘ஜன கண மன', ‘டிரைவிங் லைசென்ஸ்', ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்', ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்', ‘தொண்டிமுதலும் திருசாக்‌ஷியும்', ‘காணேக்காணே', ‘விக்ரிதி' என அண்மையில் இவர் நடிப்பில் வந்த படங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு உணர்ச்சிப் பரிமாணங்கள். தன்னிடம் பேசும் யாரையும் சில நிமிடங்களிலேயே இமிட்டேட் செய்துவிடும் அளவுக்கு அலாதியான மிமிக்ரித் திறமைக்குச் சொந்தக்காரர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய போராட்டங்களைக் கடந்து இன்று தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்த நடிகர். ஷூட்டிங் இடைவெளியில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு மாதுளை மணியாய் வந்து விழுகின்றன சொற்கள்...

சுராஜ் வெஞ்சாரமூடு
சுராஜ் வெஞ்சாரமூடு

‘‘தமிழ்நாடு வரை உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா..?''

‘‘எல்லாப் புகழும் ஓ.டி.டி பிளாட்பாரத்துக்கே. 2000-த்துலிருந்து மலையாள சினிமாவில் இருக்கிறேன். ஆனால், இப்படி ஒருத்தன் இருக்குறதா தமிழில் யாருக்கும் தெரியாது. இப்பத்தான் என் படங்களைத் தமிழ் மக்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. திருவனந்தபுரம் பக்கத்தில் வெஞ்சாரமூடு கிராமம்தான் நான் பிறந்த ஊர். எங்க ஊரில் பாதிப்பேர் நாகர்கோவில் தமிழில் பேசுவார்கள். நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்போம். பொதுவாக ரஜினி ரசிகர்களுக்கென்றும் கமல் ரசிகர்களுக்கென்றும் தனி குணம் உண்டு. அது, ரஜினி பிடித்தால் கமலைப் பிடிக்காது; கமல் பிடித்தால் ரஜினியைப் பிடிக்காது. ஆனால், ரஜினியையும் கமலையும் சேர்த்து வெறித்தனமாக நேசித்த ரசிகன் நான். ‘ரஜினி ஹாசன்'னு என் பெயரை மாத்திக்கலாம்னுகூட யோசிச்சிருக்கேன். நாம என்ன கொடுக்கிறோமோ அது நமக்கு வேற ரூபத்துல கிடைக்கும்னு நம்புறேன். நான் நேசிக்கும் தமிழ் மக்கள் என்னையும் நேசிப்பது மகிழ்ச்சியே. எனக்குப் பிடித்த தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.’’

சுராஜ் வெஞ்சாரமூடு
சுராஜ் வெஞ்சாரமூடு

‘‘நீங்க சினிமாவுக்கு நடிக்க வந்ததே ஒரு விபத்துன்னு சொல்கிறார்களே..?''

‘‘பொதுவா நடிக்க வரலைன்னா டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆகியிருப்பேன்... நடிக்க வந்ததே ஒரு விபத்து என சினிமாவில் இருப்பவர்கள் சொல்வார்கள். நான் ஒரு விபத்தாலதான் நடிக்கவே வந்தேன். ஆச்சர்யமா இருக்கா..? நான் நடிக்கவரலைன்னா கண்டிப்பா ஆர்மிக்காரன் ஆகியிருப்பேன். எங்க அப்பா வாசுதேவன் நாயர் ஒரு ராணுவ வீரர். இரண்டு மகன்களில் ஒருத்தரை அவரைப்போல உருவாக்க ஆசைப்பட்டார். எனக்கும் அதுதான் கனவா இருந்துச்சு. என் அண்ணன் ஷாஜி மிமிக்ரி கலைஞனாக இருந்தார். அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்கூல் படிக்கிற காலத்திலேயே மேடைகளில் மிமிக்ரி பண்ணினவர். 50 வெரைட்டியான குரல்களில் மிமிக்ரி பண்ணுவார். ஆச்சர்யமாக இருக்கும். யாரையும் பார்த்த அஞ்சாவது நிமிஷம் இமிட்டேட் பண்ணிடுவார். அவ்வளவு டேலண்ட். அப்பாவும் அவரை அப்படியே போக விட்டுட்டார். மிமிக்ரிக் கலைஞரான ஜெயராம் சினிமாவில் கலக்க ஆரம்பித்ததும் அண்ணனுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், விதி யாரை விட்டது? எனக்கு ஒரு சாலை விபத்து ஏற்பட்டு வலது கையில் செம அடி. இப்போதுவரை அந்தக் கையை ரொம்ப சிரமப்படுத்திக்க முடியாது. கையைக் காப்பாற்றியதே பெரிய விஷயம். இந்த விபத்து என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. என் ராணுவக் கனவு தகர்ந்தது. எனக்குப் பதில் ராணுவத்துக்கு அண்ணன் போனார். அண்ணனோடு சும்மா துணைக்கு மேடையேறிய நான் முழு நேர மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக மாறினேன். ஆனால், அண்ணன் திறமையில் கால்வாசிகூட என்னிடம் இல்லை. அண்ணனும் ஓய்வுபெற்று தற்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார்.’’

சுராஜ் வெஞ்சாரமூடு
சுராஜ் வெஞ்சாரமூடு

‘‘மேடை- டி.வி- சினிமா... எப்படி ஒவ்வொரு காலகட்டத்துக்கும் உங்களை மாற்றிக்கொண்டீர்கள்?''

‘‘மிமிக்ரி செய்யும்போது, என் திருவனந்தபுரம் தமிழ் கலந்த மலையாளத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போதெல்லாம் எனக்கு சினிமா குறித்த கனவேதும் இல்லை. ஏதாவது பண்ணி சிரிக்க வைக்க வேண்டும். அதில் நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. இப்போது செல்ஃபி போல அப்போது ஆட்டோகிராப் வாங்க ஆரம்பித்தார்கள். அது இன்னும் நன்றாக மிமிக்ரி செய்யத் தூண்டியது. கான்செப்ட் பிடித்து விதவிதமாக மிமிக்ரியையும் தாண்டி யோசித்தேன். அதன் மூலமாகத்தான் டிவி வாய்ப்பும் சினிமா வாய்ப்பும் வந்தது. ‘ஜகபொகா' படம் தந்த வெளிச்சம்... காமெடி ரோல்கள் நிறைய வர ஆரம்பித்தன.''

சுராஜ் வெஞ்சாரமூடு
சுராஜ் வெஞ்சாரமூடு

‘‘மம்மூட்டி, மோகன் லால் இரண்டு பேரையும் மேடைகளில் லந்து பண்ணி மிமிக்ரி பண்ணுகிறீர்களே... கோபித்துக்கொள்ள மாட்டார்களா..?’’

‘‘மம்மூட்டிதான் என் சினிமா உலகின் காட்ஃபாதர். எனக்கு லாலேட்டனும் அவ்வளவு பிடிக்கும். நான் நடித்த ‘ஜகபொகா' படம் மலையாள சினிமாவையே ஸ்பூஃப் செய்து எடுக்கப்பட்ட படம். நான் ‘கைரளி' டி.வி-யில் பண்ணிய சேட்டையைத்தான் படமாக எடுத்தார்கள். அந்தப் படத்தில் ‘தாதா சாகிப்' என்ற ரோலில் மம்மூட்டி கெட்டப்பில் அவரை மிமிக்ரி செய்து நடித்தேன். படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும், மம்மூட்டி சார் பார்த்து ரசித்திருக்கிறார். அதன்பிறகு மலையாள சினிமாவில் முக்கிய இயக்குநரான அன்வர் ரஷீத்தின் ‘ராஜமாணிக்யம்' படத்துக்கு அழைப்பு வந்தது. ஆனால், எனக்கு திருவனந்தபுரம் ஸ்லாங் தெரியுமென்பதால் மம்மூக்காவுக்கு டிரெயினிங் கொடுக்க அழைத்ததாகச் சொன்னார்கள். ஒரே ஒரு சீனில் நடித்து அந்த சீனையும் எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள். ஆனாலும் படத்தின் டைட்டில் கார்டில் எனக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லி மகிழ்வித்தார்கள். அதன்பிறகு மம்மூக்கா ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. அவருடன் ‘துருப்புகலன்', ‘பஸ் கண்டக்டர்', ‘அண்ணன் தம்பி', ‘சட்டம்பி நாடு', ‘மாயாவி' என்று பல படங்களில் நண்பனாக நடித்தேன். அவர் கொடுத்த வெளிச்சத்தால் காமெடியனாக பல ஹீரோக்களோடு இணைந்தேன்.

மனைவி சுப்ரியாவுடன்
மனைவி சுப்ரியாவுடன்

2009-ல் ‘டூப்ளிகேட்' படத்தில் சோலோ ஹீரோவாக நடித்தபோது, மம்மூக்கா வாழ்த்தினார். லாலேட்டன் என் மிமிக்ரியை ரொம்ப ரசிப்பார். ‘புலி முருகன்' படத்தில் சேர்ந்து நடிக்கும்போது, ‘இதையெல்லாம் ஸ்பூஃப் பண்ணி கலாய்ச்சிடாதே மோனே சுராஜு' என்று கிண்டலடிப்பார். இருவருமே ஈகோ இல்லாத ஸ்டார்கள்.’’

‘‘தேசிய விருது வாங்கிய பிறகு உங்கள் நடிப்பு மெருகேறியதாகச் சொல்கிறார்களே..?’’

‘‘2013-ல் ‘பேரறியாதவர்' படத்தில் நான் ஏற்று நடித்த துப்புரவுத் தொழிலாளி பாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதற்காக தேசிய விருது கிடைத்தது. விருதினை நான் மனதில் இருத்திக்கொள்ளவில்லை. எல்லாப் படங்களும் எனக்கு ஏதோ ஒருவகையில் அனுபவத்தைத் தந்து சென்றன. ‘உன் வாழ்க்கையில் போதுமான அளவுக்கு இருள் சூழ்ந்த பிறகே நட்சத்திரங்களைக் காண ஆரம்பிப்பாய்' என்ற வாசகத்தை நான் மறக்க மாட்டேன். ஆரம்பக் காலங்களில் என் நடிப்பைக் கிண்டல் செய்தவர்களும் இப்போது ஏற்றுக்கொண்டதையே நான் ஆஸ்கராக நினைக்கிறேன்.’’

சுராஜ் வெஞ்சாரமூடு
சுராஜ் வெஞ்சாரமூடு

‘‘தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் பிடிக்கும்?’’

‘‘இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இன்ஸ்பிரேஷன்தான். ஒருத்தரை விட்டுவிட்டாலும் தவறாகிவிடும். மலையாளத்தில் யார் பிடிக்கும் என்று வேண்டுமானால் சொல்கிறேன். மம்மூட்டி, மோகன்லால் தவிர பகத் பாசில் நடிப்பு ரொம்பவே பிடிக்கும். தமிழில் ‘கடைசி விவசாயி’ படம் ரொம்பப் பிடித்திருந்தது. பிளாக் அண்ட் ஒயிட்டில் நாகேஷ் மற்றும் சந்திரபாபு இருவரின் ரசிகன் நான்.’’