விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்த `மாளிகப்புறம்' மலையாளப் படம் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ரிலீஸான 40 நாள்களில் 100 கோடி ரூபாய் மலையாளத்தின் மாபெரும் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
தனது பாட்டி மூலம் சபரிமலை பற்றி அறிந்துகொண்ட சிறுமி கல்யாணிக்கு ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. நீண்ட நாள் மனதில் தேக்கிவைத்த ஆசையை நிறைவேற்றும் விதமாகச் சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி சபரிமலை புறப்படுவதும், அதன் பிறகு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களையும் மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதே 'மாளிகப்புறம்'.

கல்யாணி என்ற சிறுமி கதாபாத்திரத்தில் தேவநந்தா நடித்திருந்தார். இதில் இந்திரன்ஸ், ஷைஜூகுறுப்பு, மனோஜ் கே.ஜெயன், ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை பத்தனம்திட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி மற்றும் பா.ஜ.க கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டிப் பதிவிட்டனர்.
மலையாள மொழியில் வெளியான 'மாளிகப்புறம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. மலையாளத்தில் இந்த ஆண்டின் முதல் மெகா ஹிட் படம் என்ற பெருமையையும் 'மாளிகப்புறம்' பெற்றுள்ளது. இதை 'ஈடு இணையற்ற சரித்திர வெற்றி' என நடிகர் உன்னி முகுந்தன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி உன்னி முகுந்தன் கூறியுள்ளதாவது, "நன்றி, மகிழ்ச்சி, பெருமை. இந்தப் படத்தை நெஞ்சோடு சேர்த்து அன்பு செலுத்தியவர்களுக்கு மிக்க நன்றி. குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், நண்பர்களுக்கும் வார்த்தையால் விவரிக்க முடியாத நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'மாளிகப்புறம்' சினிமாவுக்காக முன்பும், பின்பும் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் உன்னி முகுந்தனின் சினிமா கரியரில் முதன் முதலாக நூறு கோடி ரூபாய் வசூலித்த படமாக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது `மாளிகப்புறம்'.