கேரளத்தில் கடந்த வாரம் நடிகர் பகத் பாசில் நடித்து அகில் சத்யன் இயக்கத்தில் வெளியான பாச்சுவும் அ(ற்)த்புதவிளக்கும் திரைப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழகத்திலும் அத்திரைப்படம் வெளியாகியுள்ளது. அகில் சத்யன், கேரளா சினிமாவின் பீல் குட் ஜானரின் முன்னோடி இயக்குநர் என்று சொல்லப்படுகிற சத்யன் அந்திக்காடின் மகன்.

வீட்டில் எலித் தொல்லை அதிகரிக்க, அந்த வீட்டில் எலி புடிக்கும் பொறி ஒன்று வைக்கப்படுகிறது. எலி அதில் பிடிபட, "அதைக் கொன்று விடலாமா?" என்று மகன் கேட்கிறான். "வேண்டாம்" என்று கூறி வீட்டிலிருந்து தூரமாக எலியை விட்டுவிடச் செல்கிறார்கள் தந்தையும் மகனும். இதுதான் பத்திரமான இடமென்று ஓர் இடத்தில் எலியை அவர்கள் விட, அடுத்த நொடியே மறைவிலிருந்து “மியாவ்” எனத் தாவி எலியை வேட்டையாடுகிறது பூனை. வருத்தப்பட்ட சிறுவனிடம் தந்தை சொல்கிறார், “ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இந்த பூனைக்குச் சாப்பாடு இப்படிதான் கிடைக்கணும்னு இருந்துருக்கு” என்கிறார் நேர்மறையாக. இது தத்துவ கதையோ, ஜென் கதையோ அல்ல. இப்படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில் தனது தந்தையைப் பற்றிக் கூறும்போது சொன்னது. அவரது தந்தையின் படங்கள் வாழ்வின் யதார்த்தங்களைத் தத்துவத்தோடு இணைத்துப் பேசின. இத்திரைப்படமும் அத்தகைய சாயலிலே இருக்கிறது.
அற்புத விளக்கு கதை தோன்றி ஆயிரம் ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்று பிறக்கும் ஒரு குழந்தைக்கு அது ஒரு புதுக்கதைதான். அது போலவே பழக்கப்பட்ட பழைய கதையை, பழைய கதாபாத்திரங்களைப் புதிய பயணத்தில் புதிய அழகியலில் தந்திருக்கிறது அகில் சத்யனின் இந்த `Pachuvum Athbutha Vilakkum'.
‘வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துச் சிரிப்பதா அழுவதா, இல்லையென்றால் இப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்பதா?' என்ற யதார்த்த உணர்வினை வெளிப்படுத்துவதே சத்யன் அந்திக்காட்டின் 'டிரேட்மார்க்’ என்கிறார்கள் சேட்டன்கள். இப்போது அவரின் 80-90ஸ் படங்களின் 2k வடிவமாக இதைக் களமிறக்கியுள்ளார் அகில் சத்யன்.

மும்பையில் மெடிக்கல் கடையை நடத்தி வரும் பாச்சு என்கிற பிரசாந்திற்கு, தன் வாழ்வில் நடக்கும் எதிர்பாராதச் சம்பவங்கள் ஒரு பயணம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த விபரீத பயணம் அற்புதமாக மாறுமா, அதனால் அவனுக்கும் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. வித்தியாச வித்தியாசமான பூவைக் கோர்ப்பது போல, முதல்பாதி காட்சிகளாகவும் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் தனித்தனியாக மிகவும் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் இடைவேளை முடிந்த பின்னரும் கதை இதுதான் என்னும் முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் நிலை தொடர்கிறது.
முதல் பாதி இப்படி இருக்க, இரண்டாம் பாதி அந்த வித்தியாசமான பூக்களின் வாசனையை ஒன்று சேர வெற்றிமாலையாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு காரின் ஹாரன் சத்தத்தை ஆரம்பத்திலிருந்து சிரிப்புக்காகப் பயன்படுத்தியதைச் சொல்லலாம். அடிக்கடி அது திரும்பி வர, “தங்கதுர ஓரளவுக்குத்தான்... ஓயாம எல்லாம் சிரிக்க முடியாது" என்ற நிலைக்குப் படம் பார்ப்பவர்கள் மாறும்போது, க்ளைமாக்ஸில் ஒரு கதாபாத்திரம் பேசுவது போல அந்த காரின் ஹாரன் சத்தம் மாறியது இயக்குநரின் தனித்துவம்.
அழகான வெகுளித்தனம், எதிலும் முழுமையில்லாத் தன்மை, நல்லவன், ஆனால் கொஞ்சம் கெட்டவன், தவறுகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருத்திக்கொள்பவன் எனப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமாகியிருக்கிறார்பகத் பாசில்பாச்சு.
முதல் பாதியில் அல்தாப் மற்றும் முகேஷோடு இணைந்து சிரிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் விஜி வெங்கடேஷ், த்வாணி கதாபாத்திரங்களோடு இணைந்து நெகிழ வைக்கிறார். உம்மச்சி எனும் கதாபாத்திரத்தில் வரும் விஜி வெங்கடேஷ், உணர்வுபூர்வமான காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். அடுத்து இங்குப் புறத்தில் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் தாங்க முடியாத வேதனையை அகத்தில் சுமப்பவர்கள், என்னும் நிஜ உலகின் பிரதிபலிப்பை நேர்த்தியாகச் செய்திருந்தார் நாயகி அஞ்சனா பிரகாஷ்.

மறைந்த நடிகர் இன்னசண்ட் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஐபோன் சிரியிடம் பேசுவது போல வரும் காட்சிகளில் 'சொந்தக்கார பூமர்களை' நினைவுபடுத்தி சிரிப்பலைகளை உண்டாக்குகிறார். பகத் பாசிலுக்கு இணையான கதாபாத்திரத்தில் 'வினித்' கலக்கியுள்ளார். 'சர்வம் தாளமய'த்தில் திரும்பி நடிக்க வந்திருந்தாலும் இதுவே அவரது ஆத்மார்த்தமான கம்பேக் என்றே சொல்லலாம். அன்னையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி, திடீரென கோபப்பட்டுக் கத்துவது, பின்பு எதுவும் நடக்காதது போலச் சிரிக்க முயல்வது என இரண்டாவது இன்னிங்ஸை சிக்ஸரோடு தொடங்கியுள்ளார். இத்துடன் பகத்தோடு பயணப்படும் இங்கிலீஷ் பேசும் சிறுவனும் கவனம் பெறுகிறார்.
மும்பை, கேரளா, கோவா என்று மூன்று நகரங்களை மையமாக வைத்து நகர்கிறது கதைக்களம். அதைப் படமாக்கிய விதத்திலும், ஒன்றுசேர்த்த விதத்திலும் ஒரு பயண உணர்வினை தருகிறது படம். பீச், பார்ட்டி என்று ஸ்டீரியோடைப் செய்யப்படும் கோவாவைத் தாண்டி, அதன் உட்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் இயற்கை அழகியலைக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஷரோன் வேலாயுதன். மும்பை நகரத்தின் காலை விடியலைக் காட்டும் இந்திப் பாடலும், 'நின் கூட ஞான் இல்லையோ' என்று 'தீம்தனா தன தீம்தனா' என வரும் மெலோடி சங்கீதத்திலும் ஜஸ்டின் பிரபாகரன் தன் இசையால் ஈர்க்கிறார். பின்னணி இசையில் காட்சிகளின் உணர்வுகளுக்கும் கச்சிதமாக உயிரூட்டியுள்ளார்.

யதார்த்தமான டிரமாவாகச் செல்லும் திரைப்படம் என்றாலும் பெண் கல்வி, பாலின சமத்துவம் எனும் அரசியலை, பிரசார நெடியில்லாமல் வெண்ணெய்யில் இறங்கும் கூர் கத்தி போலச் சிரமமின்றி இறக்கியுள்ளது திரைக்கதை. 2மணி நேரம் 50 நிமிடங்கள் எனும் படத்தின் நீளம் இரண்டாம் பாதியில் சிறிது வேகத்தைக் குறைக்கிறது. எதுவுமே மிகைப்படுத்தப்படாமல் போய்க் கொண்டிருக்கையில் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் சற்று நம்பகத்தன்மையை இழந்தது போல உணர வைக்கிறது. ஒரு மாற்றம் நிகழ்கிறது என்பதற்கு வலுவான காரணங்களை வைத்திருக்கலாம்.
ஒட்டுமொத்தமாகத் திரைக்கதைக்கு என வகுத்து வைத்திருக்கும் சினிமா இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல ஃபீல் குட் அனுபவத்தைத் தந்திருக்கும் இந்த `பாச்சுவின் அத்புதவிளக்கு' பிரகாசமாக எரிகிறது.