கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் பிரித்விராஜ் மற்றும் சில இயக்குநர்கள் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை திடீர் ரெய்டு நடத்தியது.
அப்போது, வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தில் கேரளாவில் சினிமா எடுத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் தனியார் (மறுநாடன் மலையாளி) மலையாள யூ டியூப் செய்தி சேனல் ஒன்று இன்று வெளியிட்ட செய்தி ஒன்றில் வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணம் கேரளாவுக்கு வருகிறது. அந்த பணத்தில் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை வளையத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் உள்ளனர். பிருத்விராஜ் அந்த பணத்தில் குறிப்பிட்ட பிரச்சார சினிமா எடுக்க உள்ளார். இதுகுறித்து அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அமலாக்கத்துறைக்கு நடிகர் பிரித்விராஜ் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார் என அந்த யூ டியூப் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் பிருத்விராஜ். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளதாவது, "நான் 25 கோடி ரூபாய் அமலாக்கத்துறைக்கு அபராதம் செலுத்தியதாக வெளியான செய்தி என் கவனத்துக்கு வந்தது. இப்போது ஊடக நெறிமுறைகள் வேகமாக மறைந்து வருவதால், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் செய்திகள் தகுதியற்றவை என நான் நிராகரிக்கிறேன்.
முற்றிலும் உண்மைக்கு புறம்பான, தனிப்பட்ட முறையில் பொய்யான ஒன்றை செய்தி என்ற பெயரில் வெளியிட்டு தார்மீகத்தை மீறியுள்ளனர்.

எனவே, அந்த யூ டியூப் சேனல் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைக்கு நான் தயாராகி உள்ளேன். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கையாக எந்த எல்லைவரைக்கும் செல்ல நான் தயாராகிவிட்டேன். நான் எந்த விதத்திலும், ஒருபோதும் அபராதம் செலுத்தவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.