சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: சைலன்ஸ்

சைலன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சைலன்ஸ்

படத்தை பாகுபலியாக மாறித் தோளில் சுமப்பது தேவசேனா அனுஷ்காதான்.

திரைக்கு வெளியே எதிர்பார்ப்புகளை ஏற்றி, திரையில் ஏமாற்றும் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படம் இந்த ‘சைலன்ஸ்.’

அமெரிக்காவின் புகழ்பெற்ற செல்லோ இசைக்கலைஞரான மாதவன் தன் காதலி அனுஷ்காவோடு ஒரு வீக் எண்ட் ட்ரிப் அடிக்கிறார். அப்போது வழியிலிருக்கும் ஒரு பேய்ப்பங்களாவில் தனக்குத் தேவைப்படும் ஓவியம் ஒன்று இருப்பதாக அனுஷ்கா சொல்ல, இருவரும் அங்கே செல்கிறார்கள். அங்கே மாதவன் மர்மமான முறையில் இறந்துபோகிறார். ஏற்கெனவே தொடர்ச்சியாக இளம்பெண்கள் மாயமாவதால் அந்நகரத்துக் காவல்துறைக்கு மக்களிடையே கெட்ட பெயர். இப்போது மாதவனின் மரணமும் சேர்ந்துகொள்ள, குற்றவாளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் போலீஸ் அதிகாரி அஞ்சலிக்கு. அவரின் விசாரணையில் விரியும் பக்கங்களே மீதிக்கதை.

சினிமா விமர்சனம்: சைலன்ஸ்

மாதவன் - கொஞ்சமே கொஞ்ச நேரம்தான் வருகிறார். அதில் தன்னாலானவற்றைச் செய்துவிட்டுப் போகிறார். படத்தை பாகுபலியாக மாறித் தோளில் சுமப்பது தேவசேனா அனுஷ்காதான். பேச்சு சவால் உள்ளவர்களின் வாழ்க்கை உணர்ந்து அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறார். மிடுக்கான அதிகாரி பாத்திரத்தில் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாகவே நடித்திருக்கிறார் அஞ்சலி. படத்தில் நடித்த பிற நடிகர்களுக்கு வசன உச்சரிப்புகள் பொருத்தமாக இல்லை. டாரன்டினோ படங்களின் ஆஸ்தான நடிகரான மைக்கேல் மேட்சனை இந்திய சினிமாவிற்கு அழைத்து வந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் கதையில் அவருக்கான இடமே இல்லை.

ஷானிலின் ஒளிப்பதிவு மட்டுமே படத்தின் திக்திக் தருணங்களை நமக்குள் கடத்துகிறது. உடன் பலம் சேர்க்கவேண்டிய கிரிஷ் - கோபி சுந்தரின் இசை ம்ஹூம்!

சினிமா விமர்சனம்: சைலன்ஸ்

இயக்குநர் ஹேமந்த் மதுக்கரின் திரைக்கதை ஏகப்பட்ட ட்விஸ்ட்களை வரிசையாக நம் கண் முன் நிறுத்திக்கொண்டே செல்கிறது. ஆனால், அவற்றில் பாதி ‘லாஜிக்னா என்ன’ ரகம். அதிலும் குற்றம் நடந்த இடத்தில் அத்தனை போலீஸ்காரர்கள் மத்தியில் ஒருபோலீஸ்காரர் யாருக்கும் தெரியாமல் கொல்லப்படுவதெல்லாம்....ஸாரி!

ப்ளாஷ்பேக் நடக்கும்போதே நமக்கு யார் குற்றவாளி, என்ன பிரச்னை என யூகிக்க முடிகிறது. ஆனால் அமெரிக்காவின் சீனியர் போலீஸான அஞ்சலிதான் பாவம் தேடிக்கொண்டே இருக்கிறார். இதுபோக, ‘பொண்ணுங்க இப்படி இருந்தா இதுதான் நடக்கும்’ வகை அரதப்பழைய கதாகாலட்சேபங்கள் எரிச்சலூட்டுகின்றன. அதிலும் அந்த எண்டு கார்டு மெசேஜ் எல்லாம் ஹை வோல்டேஜ் கடுப்பு. சினிமா வேறுதிசையில் பயணிக்கத் தொடங்கிப் பத்தாண்டுகளுக்கு மேலாகிறது படைப்பாளிகளே!

காதலின் மேல் பழியைப் போட்டுக் குற்றங்களை நியாயப்படுத்தும் தொனியை இனியாவது கோலிவுட் கதாசிரியர்கள் தவிர்த்தல் நலம்!