பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: வானம் கொட்டட்டும்

ஐஸ்வர்யா ராஜேஷ்,  ராதிகா, விக்ரம்பிரபு, சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விக்ரம்பிரபு, சரத்குமார்

ஒருபக்கம் முரட்டு மகன் விக்ரம்பிரபு எப்படி பிசினஸில் சாதிக்கிறார் என்று ஒருபக்கம் கிளைவிரிக்க...

ணிரத்னம் தயாரிப்பில் அவருடைய டெம்ப்ளேட்டை மீறாமல் ஒரு படம்!

கிராமத்தில் அண்ணனுக்காகக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறார் சரத்குமார். இந்த வன்முறைச் சூழலை விரும்பாமல் அவர் மனைவி ராதிகா தன் மகன் மகளோடு சென்னைக்குப் பிழைக்கக் கிளம்புகிறார். வந்த இடத்தில் தட்டுத்தடுமாறி பிசினஸ் வைத்து செட்டில் ஆகிறது ராதிகா குடும்பம். ஜெயிலிலிருந்து விடுதலையாகித் திரும்பிவருகிறார் சரத். குடும்பம் அவரோடு ஒட்டியும் ஒட்டாமலும் போராடுகிறது. சரத்தால் கொலை செய்யப்பட்டவரின் மகன் பழிவாங்கத் திட்டம் போடுகிறான். அந்தத் திட்டத்தை சரத்தின் மகன் விக்ரம்பிரபு முறியடித்து, எப்படி குடும்பம் ஒன்றாகி சுபம் போடப்படுகிறது என்பது மிச்சக்கதை.

ஒருபக்கம் முரட்டு மகன் விக்ரம்பிரபு எப்படி பிசினஸில் சாதிக்கிறார் என்று கிளைவிரிக்க... இன்னொரு பக்கம் துறுதுறு ஐஸ்வர்யா ராஜேஷின் முக்கோணக் காதல்... என்ன கதை என்றே விளங்கிக்கொள்ள முடியாத மடோனா செபாஸ்டியனின் வாழ்க்கை எனப் படம் திக்கு தெரியாமல் சுற்றி அலுப்பூட்டுகிறது. இந்தக் கவனச்சிதறலில் திரைக்கதை சிதறுதேங்காய்.

ஐஸ்வர்யா ராஜேஷ்,  ராதிகா, விக்ரம்பிரபு, சரத்குமார்
ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விக்ரம்பிரபு, சரத்குமார்

சரத்குமாருக்கு மிகச்சிறந்த கம்பேக். பாசத்துக்கு ஏங்கும் தந்தையாக உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கிறார். விதவிதமான முகபாவங்களில் தான் தேர்ந்த நடிகை என நிரூபிக்கிறார் ராதிகா. விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, நந்தா, அமிதாஷ், பாலாஜி சக்திவேல், மதுசூதன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம். அத்தனைபேரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பலம் ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு. பின்னணி இசை சித்ஶ்ரீராம். கடுமையாக உழைத்திருக்கிறார். படம் ஆரம்பித்ததில் இருந்து பின்னணி இசை என்ற பெயரில் ஆங்காங்கே பாட ஆரம்பித்தவர், படம் முடிந்து பத்துநிமிடங்கள் கழித்தும் பாடியிருக்கிறார்.

சினிமா விமர்சனம்: வானம் கொட்டட்டும்

ஒரே வசனத்தில் வில்லன் திருந்துவது, ஒரே பாடலில் நாயகன் வாழ்க்கையில் உயருவது என நிறையவே விக்ரமனிசம்! நடிகர்களிடமிருந்து முழுமையாக நடிப்பாற்றலை வாங்கி உணர்வுபூர்வமான காட்சிகளை உருவாக்கிய விதத்தில் தனித்துவம் காட்டுகிறார் தனா. ஆனால் பலவீனமான திரைக்கதை அமைப்பு, நம்பகத்தன்மையற்ற செயற்கைக் காட்சிகள், கதை யார்மீது பயணிக்கிறது என்ற குழப்பம் ஆகியவற்றால் வானம் கொட்டாமல் முட்டுகிறது.