இது ஓணம் அல்ல, ஆசிரியர் தின ஸ்பெஷல்..! `புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் எப்படி?

ராஜகுமாரனுக்கு பல பெயர்கள் பிறந்த கதை, அவனின் பள்ளிப் பருவத்துக் காதல் கதை, அறிமுகமே அல்லாத ஒரு பெண்ணுக்காக எடுத்துக்கொள்ளும் அக்கறை என அவனின் சில பகுதிகளைக் காட்டுகிறது `புள்ளிக்காரன் ஸ்டாரா' படம்.

புள்ளிக்காரன் ஸ்டாரா

`நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா', `ஆடம் ஜான்', `வெளிப்பாடிண்டே புஸ்தகம்' கூடவே ஓணம் வெளியீடாக வந்திருக்கிறது `புள்ளிக்காரன் ஸ்டாரா'. இடுக்கியைச் சேர்ந்த ராஜகுமாரன் (மம்மூட்டி) சிறுவயதிலிருந்தே ஊர்க்காரர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர். குறிப்பாக, பெண்கள் விஷயத்தில். இதனாலேயே பல பட்டப்பெயர்கள் அவருக்கு. மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருவது பற்றி ஆசிரியர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியராக கொச்சி வருகிறார். அங்கு அவர் சந்திக்கும் நபர்கள், எடுக்கும் வகுப்புகள், தன் மீது சுமத்தப்பட்ட பெண் பித்தன் இமேஜை மாற்ற எடுக்கும் முயற்சிகளாக நகர்கிறது `புள்ளிக்காரன் ஸ்டாரா' படம். ஓணம் ரிலீஸ் என்பதைவிட ஆசிரியர் தின ரிலீஸாக படம் பக்காவாகப் பொருந்துகிறது. மாணவர்களைக் கையாள்வது எப்படி? படிப்பு பற்றிய அணுகுமுறைகள் பற்றி மம்மூட்டி சொல்லும் விஷயங்கள் மிக சுவாரஸ்யம். 

Pullikkaran Staraa

ஆசிரியர்களுக்கே ஆசிரியர் ரோலில் மம்மூட்டி கச்சிதமாகப் பொருந்துகிறார். படத்தின் கதையே அவர் செய்யும் செயல்கள் மட்டுமே. கற்பித்தல் பற்றிய வகுப்புகள், தன் பழைய காதலி மஞ்சரியைப் (ஆஷா சரத்) பார்த்து வெட்கத்தில் நெளிவது, காதல் தோல்வியில் இருக்கும் மஞ்சிமாவை (தீபா) மீட்டெடுக்கும் முயற்சிகள் என ஒரு கதாபாத்திரத்தின் பயணத்தை வைத்து கதை சொல்ல நினைத்த இயக்குநர் ஷ்யாம்தரின் முயற்சி புதிது. இருந்தாலும் படத்தின் பெரிய குறையாக அதுவே இருக்கிறது. தேங்கித் தேங்கி நகரும் ரதீஷ் ரவியின் கதை, திரைக்கதையால் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் பார்வையாளர்களுக்குப் புலப்படாமலே போய்விடுகின்றன. 

Mammootty

மம்மூட்டியின் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களாக வரும் இன்னசன்ட், திலேஷ் போத்தன், அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி ஹரீஷ் பெருமன்னா ஆகியோர் இணைந்து வரும் காட்சிகள், காமெடியால் நிறைகின்றன. கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் ஆஷா சரத், காதலன் ஏமாற்றியதால் வருத்தத்திலிருக்கும் தீபா இருவரது கதாபாத்திரங்களும் அவர்களது நடிப்பும் நன்று. மற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தெளிவாக ஒரு முடிவையும் ஆலோசனையையும் வழங்கும் மம்மூட்டி, தன் வாழ்க்கை சம்பந்தமான சின்னச் சின்ன முடிவுகளை நண்பர்கள் சொல்வதுபோல் கேட்கிறார் என்பதும், `ஐம் வெர்ஜின்' என நெளிவதும் என்ன மாதிரியான டிசைன் இது எனக் குழப்புகிறது.

திணித்துவைக்கப்பட்டிருக்கும் `டப்பு டப்பு...' பாடல், தேவையே இல்லாத ஒரு விபத்துக் காட்சி போன்றவை ஏற்கெனவே மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் கதையில் மயக்க மருந்து தெளித்து இன்னும் வேகத்தைக் குறைக்கிறது. ஆசிரியர், ஒரு மாணவனை எப்படி நடத்த வேண்டும், மாணவர் ஆசிரியரை ஏன் மதிக்க வேண்டும், எந்தப் பிரச்னையையும் பேசினால் தீர்த்துக்கொள்ளலாம், நாம் பார்க்கும் பார்வை எப்போதும் சரியானதாகவே இருக்காது எனப் பல விஷயங்களை உணர்த்த நினைத்து காட்சிகள் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை சொன்னவிதம் நேர்த்தியாக இல்லாததால் எல்லா காட்சிகளும் கடந்து போய்க்கொண்டே இருக்கின்றன. இன்னும் நேர்த்தியான திரைக்கதை, வலுவான வசனங்கள் சேர்த்திருந்தால், நிஜமாகவே ஸ்டாராக ஜொலித்திருப்பான் `புள்ளிக்காரன்'. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!