Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தனியார் தீயணைப்பு படை தீயாக வேலை செய்திருக்கிறதா? - நெருப்புடா விமர்சனம்

`தீயணைப்பு வீரனாக வேண்டும்' என்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்ட ஐந்து இளைஞர்கள். அவர்களது லட்சியம் நிறைவேறியதா அல்லது தாறுமாறாகத் தடம் மாறியதா என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது `நெருப்புடா'.

நெருப்புடா

சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சிறுவயதிலேயே ஐவருக்கும் தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை, மனதில் தீயாய்ப் பற்றி எரிகிறது. வளர்ந்து வாலிபர்களான பிறகு, தனியாகத் தீயணைப்பு வண்டிவைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தீயணைப்புத் துறை வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் திடீரென ஒரு `விபத்து' நடக்கிறது. எதிர்பாராத ஒரு கைகலப்பில் பிரபல ரௌடியான மதுசூதனன் ராவின்  நண்பன் வின்சென்ட் அசோகன் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு ரெளடி - நண்பர்கள் இடையிலான துரத்தல்கள்தான் கதை. 

விக்ரம்பிரவுக்கு, கதாநாயகனாக இது 10-வது படம். நடிப்பில் அதற்கேற்ற முதிர்ச்சியும் தெரிகிறது. `எங்க வேலை ஒரு உசுர எடுக்கிறது இல்லை; உசுர காப்பாத்துறது' என சில நேரங்களில் அடங்கிப்போவதும், தன் நண்பர்களின்மேல் யாரேனும் கை வைத்தால் முஷ்டியை முறுக்கிக்கொண்டு கிளம்புவதுமாக ரணகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் வருண், `கயல்' வின்சென்ட், ராஜ்குமார் ஆகியோர் வந்துபோகிறார்கள். 

`மாநகரம்', `பண்டிகை' வரிசையில் இந்தப் படத்திலும் அதே `தாதா' கதாபாத்திரம் மதுசூதனன் ராவுக்கு. சமயங்களில் தெலுங்குப் பட வில்லனைப்போல ஓவராக சவுண்டுவிடுகிறார். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவதைப்போல இரண்டு டூயட் ஆடி, க்ளைமாக்ஸில் ஹீரோ காப்பாற்றுவதற்காகக் கைகள் கட்டப்பட்டுக் காத்துக்கிடக்கிறார் நிக்கி கல்ராணி. துப்புரவுத் தொழிலாளியாகவும் விக்ரம்பிரபுவின் அப்பாகவும் பொன்வண்ணன் பாவமோ பாவம். `நான் கடவுள்' ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். `ஆடுகளம்' நரேன், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் படத்தில் `ஆஜர் சார்' சொல்கிறார்கள். 

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, பொதுவான கமர்ஷியல் பட ஃப்ளேவரிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம், காட்சிக்குக் காட்சி தீயாக வேலைசெய்திருக்கும் ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். தீப்பற்றி எரியும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், நண்பர்கள் ஐவரையும் ஒரே ஃப்ரேமில் அடக்க நினைத்து, ஒரே மாதிரியான ஆங்கிள்கள் ரிப்பீட் அடித்திருக்கின்றன. படத்தின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காதவண்ணம் வேலைபார்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் தியாகுவின் கத்தரி. சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. 

நெருப்புடா

எல்லா காட்சிகளும் வித்தியாசமாக ஆரம்பித்து, வேறுவிதமாகப் பயணித்து, தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால மரபுப்படியே ஏதேனும் ஒரு க்ளிஷேவில் முடிவது, தட் `ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரியில்லையே' மொமன்ட். படத்தின் வில்லன் புளியந்தோப்பு ரவி (மதுசூதனன் ராவ்)க்கு போலீஸ், ரௌடி என எல்லோரும் வசனம் பேசியே செம பில்டப் ஏற்றுகிறார்கள். ஆனால்  அவரோ, ஆவேசமாக காரைக் கிளப்பி, புளியமரத்தில் மோதுகிறார்; விக்ரம்பிரபுவின் ஒரே அடிக்குக் கீழே விழுகிறார்; எதிர்பாராத `வில்லன்' கதாபாத்திரத்தால் எதிர்பாராமல் தீர்த்துக்கட்டப்படுகிறார். என்னதான் ஆச்சு இந்த வில்லனுக்கு?

இதற்கிடையில், ``தலைமறைவாக இருக்கும் புளியந்தோப்பு ரவி வெளியே வரட்டும், என்கவுன்டர்ல போட்டுடுவோம்" என்று அடிக்கடி சொல்லும் போலீஸ் அதிகாரி நரேனோ, ரூமைவிட்டு வெளியே வரவேயில்லை. `புளியந்தோப்பு ரவி'யோ சென்னையின் பல இடங்களில் தாராளமாகச் சுற்றித் திரிவதோடு, மொட்டைமாடிக்கு வந்து நடுராத்திரி விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டும் போகிறார்.  தமாசு... தமாசு! வில்லனின் நண்பன் இறந்துவிடுவதால்தான் அவர் `வெளியே' வருவார் என்கிறார் போலீஸ் ஆபீஸர் நரேன். ஆனால், மதுசூதனனோ செத்த நண்பனுக்கே சுடுகாட்டில் கொள்ளி போடுகிறார். ஆனால், அங்கே போலீஸ் மிஸ்ஸிங், லாஜிக்கும்கூட. 

ஒட்டுமொத்த படத்துக்குள் குறைந்தது ஐந்து இடங்களிலாவது `சுபம்' போட்டு முடிக்கலாம். ஒரு கதைக்குள்ளேயே பல கதைகள் ஆரம்பித்து முடிகின்றன. எப்போது எழுந்து வந்தாலும் படம் முடிந்திருக்கும் ஃபீல்தான். அத்தனை க்ளைமாக்ஸ் படத்தில். ``எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு தெரிஞ்சு வெச்சு அடிச்சிருக்கான்டா", ``நான் சொல்லலை... இந்த ரிப்போர்ட் சொல்லுது'', ``என் இத்தனை வருஷ சர்வீஸ்ல..." என்று பழைய வசனங்களில் சுள்ளி கொளுத்தி விளையாடியிருக்கிறார்கள். 

விக்ரம்பிரபுவும் அவரது நண்பர்களும் தனியாக ஒரு தீயணைப்பு வண்டி வைத்து, யூனிஃபார்மும் போட்டுக்கொண்டு தீயணைக்கப்போவது எல்லாம் எந்த நாட்டில் சார் நடக்கும்? க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆனால், அதில் அர்த்தமும் இல்லை; அழுத்தமும் இல்லை. 

பரபரப் பட்டாசாக வெடிக்காமல் புஸ்வாணமாகப் போய்விடுவதால், நெருப்பு இல்லாமல் புகைய மட்டுமே செய்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement