Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் விஷ்ணு விஷால் சூப்பர்... ஆனால், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்?! - கதாநாயகன் விமர்சனம்

``கெட்டவங்களை அடிக்கிறவன் மட்டும் தைரியசாலி இல்லை... கெட்டதைத் தட்டிக்கேட்டு அடி வாங்குறவனும் தைரியசாலிதான். ஆனா, இந்த ரெண்டும் இல்லாம ஓடி ஒளியிற ஒரு கோழைக்கு என் பொண்ணைத் தர மாட்டேன்'' - ஹீரோவைப் பார்த்து ஹீரோயினின் அப்பா பேச, சாமானியன் எப்படி ஹீரோவாகிறான் என்பதே இந்தக் `கதாநாயகன்' கதை. 

தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் தம்பிதுரை (விஷ்ணு விஷால்). அதே அலுவலகத்தில் அட்டெண்டர் அண்ணாதுரை (சூரி). கண்மணியைக் (கேத்ரின் தெரசா) கண்டதும் தம்பிதுரை  காதல்வயப்படுகிறார். அலுவலக உதவியாளர் அண்ணாதுரை, அவரது காதலுக்கும் உதவியாக இருக்கிறார். பல (சோதனை) முயற்சிகளுக்குப் பிறகு ஹீரோயினுக்கும் காதல் வருகிறது. ஆனால், ஹீரோயினின் அப்பா, `தன் மகளை தைரியமான ஒரு ஆம்பளைக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன்’ என்கிறார். நாய் துரத்தலுக்கே தெருத் தெருவாக ஓடும் தம்பிக்கும் தைரியத்துக்கும் வெகுதூரம். அப்படிப்பட்டவர் என்ன செய்து தன் காதலியைக் கரம்பிடிக்கிறார் என்பதே மீதிக் கதை. 

`இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதியை சரக்குக்காக காலி குடோனுக்கு அழைத்துச் செல்லும் கேரக்டரில் நடித்த முருகானந்தம்தான், இந்தப் படத்தின் இயக்குநர். தனது முதல் படத்தை, ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி அளிக்கும்விதத்தில் எடுத்ததற்காக அவரைப் பாராட்டலாம். அதேபோல விஷ்ணு விஷால், கேத்ரீன், சூரி, அருள்தாஸ், ஆனந்தராஜ், `நான் கடவுள்' ராஜேந்திரன் என தன் காமெடி ஸ்க்ரிப்ட்டுக்குத் தோதான ஆள்களைத் திரட்டியவகையிலும் பாஸ் ஆகியிருக்கிறார். கூடுதலாக ‘நட்பு’க்காக தன் ஜாலிகேலி டீமில் விஜய் சேதுபதியையும் இணைத்திருக்கிறார். 

கமர்ஷியல் படங்களில், ஹீரோவுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் ஹீரோயின் பின்னால் சுற்றவிடுவார்கள். இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அரசாங்க வேலை ஒன்றைக் கொடுத்துச் சுற்றவிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே வேலை இல்லாமல் சுற்றும் ஆர்.ஐ இவராகத்தான் இருக்கும். அதேபோல், ஹீரோயினுக்கு எந்த வேலையும் இல்லை என்றாலும், தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றியபடி இருக்கிறார். சூரிக்கு, இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கப் போராடும் வழக்கமான காமெடி கேரக்டர். 

கமர்ஷியலுக்கு தன்னை தயார்செய்துவருகிறார் விஷ்ணு விஷால். அது ஓரளவுக்கு வொர்க்-அவுட்டாகியும் உள்ளது. வெறும் நடிகராக இருந்தபோது `இன்று நேற்று நாளை’, `முண்டாசுப்பட்டி’ எனத் தனித்துவ ஸ்க்ரிப்ட்களைத் தேர்ந்தெடுத்தவர், தயாரிப்பாளர் ஆனதும் லாஜிக் இல்லா காமெடி ஸ்க்ரிப்ட்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது ஏனோ? கேத்ரீனுக்கு, எல்லா காமெடிப் படங்களில் வரும் கிளாமர் கிறுக்குப் பெண் கேரக்டர்.  பாடல் காட்சிகளில் கிளாமராக வந்து போகிறார். ஆனால், படம் முழுவதும் ஒருவித கிரக்க முகபாவத்துடனேயே வலம் வருவது ஏன்? 

கதாநாயகன்

சூரியின் நடிப்பு, இந்தப் படத்தில் கவனிக்கவைக்கிறது. அவர் கொடுக்கும் வித்தியாசமான முகபாவனைகள், வாய்ஸ் மாடுலேஷன்ஸுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால், இங்கிலீஷைத் தவறாக உச்சரிக்கும் காமெடியை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள் சூரி? சில காட்சிகளில் வந்தாலும், விஜய் சேதுபதி செம ரகளை!

துபாய் ஷேக்காக ஆனந்தராஜ், இயல்பான உடல்பாவனையில் சிரிக்கவைக்கிறார். சிங்கராக வரும் `நான் கடவுள்' ராஜேந்திரன், சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பாட்டு பாடுவதும், அவர் குரலில் அந்தப் பாடல்களைக் கேட்பதும் ரசிகர்களுக்கு புது அனுபவம். டான் சிங்கத்தின் அடியாள் அருள்தாஸ், வழக்கத்துக்கு மாறாக காமெடியில் ஸ்கோர் செய்கிறார். 

‘ஓர் அம்மாஞ்சி வில்லன்களை விரட்டியடிக்கும் ஹீரோவாக எப்படி மாறினான்’ என்ற கதையை நோக்கி நகரும் திரைக்கதையில் சுவாரஸ்யகத்துக்காக சேர்த்திருக்கும் கிளைக்கதை காட்சிகள்தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். விஷ்ணுவை ஹீரோவாக மாற்றத் தேவையான வில்லனை இயக்குநர் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால் டிவிட்ஸ்டுகளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் அந்த டாக்டர் எபிசோட், ஷேக் போர்ஷன் ஆகியவை தனித்தனியாக பார்க்க நன்றாக இருந்தாலும் அவை கதையின் ஓட்டத்துக்கு ஸ்பீட் பிரேக். அந்தக் காட்சிகளையும் கதையுடன் இன்னும் இறுக்கமாக கனெக்ட் செய்து இருந்தால் படமும் பரபரவென்று இருந்திருக்கும், காமெடியும் நல்ல ஃப்ளோவில் அமைந்திருக்கும். 

ஷான் ரோல்டனின் இசையில், `தெனமும் ஓன் நெனப்பு பேபி...’ மற்றும் ‘பையன் மனசைப் பந்தாடும் லேடி...’ பாடல்கள் தாளம் போடவைக்கின்றன. கமர்ஷியல் படங்களில் பாடல் காட்சிகளுக்குப் பின்னால் வைக்கும் ஃபோகஸ் லைட்டை படம் முழுக்க வைத்து நம்மைச் சோதிக்கும் ஒளிப்பதிவாளர் லட்சுமண், டாஸ்மாக் ஃபைட் சீனில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

`பாஸ், உங்க கறியை விட்டுட்டுப் போறீங்களே...’, `யூ ஸீ... ஊசியெல்லாம் போட்டாச்சிப்பா...’, `நாம எப்போவாச்சும்தான் பிரியாணி சாப்பிடுவோம், இவனுங்க எப்போதுமே பிரியாணி சாப்பிடுவானுங்க...’ இப்படி ஆங்காங்கே வரும் கவுன்டர்களை படம் முழுக்கத் தூவியிருந்தால் இந்தக் கதாநாயகன் காமெடியில் இன்னும் கலக்கியிருப்பான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்