Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அப்படிப் போய் இப்படிப் போய் எப்படியோ போனானாம்!' - 'பிச்சுவாகத்தி' விமர்சனம்

Chennai: 

சிறுதவறுகூட செய்யத்தெரியாமல் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் சிலர், திரும்பத் திரும்ப தவறு ஒன்றையே செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதையும் சொல்கிறது, ‘பிச்சுவாகத்தி’.

கிரிக்கெட், சரக்கு என ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் இனிகோபிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு. நாயகி ஶ்ரீபிரியங்கா, இனிகோவிடம் காதலைச் சொன்ன சந்தோஷத்தில் நண்பர்களான மூவரும் குடிக்கிறார்கள். எக்ஸ்ட்ரா சரக்குக்கு ஆசைப்பட்டு, ஆடு திருடி மாட்டிக்கொள்கிறார்கள். அருகே இருக்கும் கும்பகோணம் காவல் நிலையத்தில் முப்பது நாட்கள் கையெழுத்து போட வேண்டிய சூழல். இது ஒரு கதை. இரண்டாவது ஹீரோ செங்குட்டுவன் – அனிஷாவின் காதலும், அவர்கள் காதலுக்கு உதவும் பாலசரவணன், அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கை… இது தனிக்கதை.

பிச்சுவாகத்தி

ஆடு திருடி மாட்டிக்கொண்ட நண்பர்கள் இனிகோ, ரமேஷ்திலக், யோகிபாபு மூவரிடம் ’30,000 ரூபாய் பணம் கொடுக்கவேண்டும்’ என மிரட்டுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ். பணம் திரட்ட முடியாத சூழலில், செங்குட்டுவனின் காதலி அனிஷாவின் செயினை அறுக்கப் பிளான் போட்டு அதிலும் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு, போலீஸின் கட்டாயத்தால், தவறுமேல் தவறு செய்யவேண்டிய சூழல் வருகிறது. வேறு வழியே இல்லாமல், வில்லன் மனோகரிடம் அடைக்கல் ஆகவேண்டிய கட்டாயம் வருகிறது. தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணமான அனிஷாவைப் பழிவாங்கவேண்டும், ஊருக்குத் திரும்பி காதலியைக் கரம்பிடிக்கவேண்டும் என்று திரியும் இனிகோ மற்றும் அவரது நண்பர்களின் நிலை என்ன ஆனது?  ஊருக்குத் திரும்பினார்களா… இல்லையா? என்பதைச் சொல்கிறது, திரைக்கதை.

சிங்கிள் ஹீரோவாகப் பயணிக்க விரும்பும் இனிகோவுக்கு இந்தப்படம் பாஸ்மார்க். இரண்டாவது நாயகன் செங்குட்டுவனிடம் இருக்கும் எதார்த்த நடிப்போடு சேர்த்து, காதலிக்காக உருகுவது, டான்ஸ் ஆடுவது, தவறு செய்யமாட்டேன் எனப் போலீஸிடம் லத்தி சார்ஜ் வாங்குவது, வில்லனுடைய திட்டங்களுக்கு உதவுவது… எனப் பல ஏரியாக்களில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார் இனிகோ.  

நாயகி ஶ்ரீபிரியங்கா அமைதியாக, அழகாகக் கடந்துபோகிறார். செயின் பறிக்கும் இனிகோவைத் துணிச்சலாப் பிடிப்பது, காதலன் செங்குட்டுவனிடம் முறைப்பது, பிறகு காதலில் உருகுவது…. என வெரைட்டியாக நடித்திருக்கிறார் மற்றொரு நாயகி அனிஷா. யோகிபாபு – ரமேஷ்திலக் கூட்டணியின் காமெடி ஓகே ரகம். ‘மன்னார் & கம்பெனி’ பெயரில் எம்.எல்.எம் நடத்தும் நபராக காளிவெங்கட், அங்கு வேலைக்குச் சேரும் செங்குட்டுவன், பாலசரவணன், அனிஷா, சீதா ஆகியோரின் நட்பு, காதல், காமெடி படத்திற்குக் கொஞ்சம் கலகலப்பு சேர்க்கிறது. சில காட்சிகள் வந்தாலும் மொட்டை ராஜேந்திரனை ரசிக்கலாம்.  மந்திரியாக வரும் அவரது காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், திரைக்கதையில் அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை இயக்குநர் ஐயப்பன்.

பிச்சுவாகத்தி

யுகபாரதி வரிகளில், ரகுநந்தன் இசையமைத்திருக்கும் ‘யே சிறுக்கி…’, ‘அடியே அடியே…’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். ஆனால், சம்பந்தம் இல்லாத இடங்களில் பாடல்கள் ஒலிப்பதால், ரசிக்கமுடியவில்லை. தவிர, பின்னணி இசையில் சீரியல்தனம். கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்துகொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.  எடிட்டரின் கத்திரி இன்னும் பல இடங்களைப் பதம் பார்த்திருக்கலாம். கோர்வை இல்லாமல் கடக்கும் காட்சிகள், திடீரென வரும் தேவையற்ற பாடல், கதைக்குக் கொஞ்சமும் கை கொடுக்காத காட்சிகள்… என எடிட்டர் ராஜாசேதுபது வெட்டியிருக்கவேண்டியது ஏராளம்.

இருவேரு கதைகள், அவை ஒன்றிணையும் புள்ளியில் க்ளைமாக்ஸ். இந்த வகைப் படங்களுக்குத் திரைக்கதையில் மேஜிக் காட்டிய படங்கள் ஏராளம். ஆனால், எந்த லாஜிக்கும், சுவாரஸ்யமும் இல்லாமல் படம் முழுக்க வரும் கேரக்டர்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சி யோசிக்கும்போது அதன் அடிப்படை விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்று யோசிப்பதுதான் ஒரு நல்ல இயக்குநருக்கான அடையாளம். படத்தில் வரும் ஒரு காட்சியில் 20 கிலோ எடையைத் தாங்காத லக்கேஜ் பேக் ஒன்றில், 60 கிலோ ஆள் ஒளிந்துகொண்டு வருகிறார். ஒளிந்துகொண்டு வருவது பிரச்னை எனில்… அந்த லக்கேஜ் பேக் கூரியரில் வருகிறது எனக் காட்டுவது அதைவிடப் பெரிய பிரச்னை.

கும்பகோணத்தையே தன் கையில் வைத்திருப்பதாகக் காட்டப்படும் வில்லன் மனோகர் கேரக்டருக்கு லோக்கல் ரவுடி இமேஜைக்கூட சரியாகக் கொடுக்கவில்லை இயக்குநர். போலீஸாக வரும் சேரன் ராஜ் பெட்டிக்கடை நடத்துவதுபோல போலீஸ் ஸ்டேஷன் நடத்துகிறார். அவருடைய ஸ்டேஷனிலேயே வில்லன் பொழுதொரு கொலை செய்கிறார். எதற்கும் ஒரு எதிர்வினையும் நடக்கமாட்டேன் என்கிறது. இப்படிப் படத்தில் பல பிரச்னைகள், லாஜிக் மீறல்கள்.   

பிச்சுவாகத்தி

இனிகோ பிரபாகரன், ரமேஷ்திலக், யோகிபாபு, காளிவெங்கட், மொட்டை ராஜேந்திரன், மனோகர், ‘கோலிசோடா’ சீதா… எனப் பல முகங்கள் இருந்தாலும், பலவீனமான கதையும், மிகப் பலவீனமான திரைக்கதையும் படத்தை மொத்தமாகப் பழுதாக்கியிருக்கிறது. ‘விதியை மீறுறதுதாண்டா என் பாலிஸி’ என படத்தின் வில்லன் தொடக்கத்தில் பன்ச் பேசுவார். அதுக்காக இத்தனை விதிமீறல்கள் தாங்காது ப்ரோ. பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்