பேய் எப்ப சார் வரும்? - 'பயமா இருக்கு' பட விமர்சனம்

பொதுவாகவே பேய் படங்கள் என்றாலே மிரட்டும் இசை, திகிலூட்டும் கேமரா கோணங்கள், சட்டென மாறும் கிராபிக்ஸ் முகங்கள் என சில சீன்களிலாவது கொஞ்சம் தெறிக்கவிடுவார்கள். ஆனால், இந்த 'பயமா இருக்கு' பேய் படம் தியேட்டரில் சின்னச் சின்னதாகக் கிச்சுகிச்சு மூட்டுகிறதே தவிர, பயம் தரவில்லை. பேய் எப்ப சார் வரும் எனக் கேட்கத் தோன்றுகிறது.

பயமா இருக்கு

படத்தின் கதை இதுதான். இலங்கை ராணுவத்திடமிருந்து மொட்டை ராஜேந்திரன், 'பிக் பாஸ்' பரணி, ஜெகன், ஜீவாவை காப்பாற்றுகிறார் ஹீரோ சந்தோஷ் பிரதாப். இதனால் ஏற்பட்ட நட்பால், தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார் ஹீரோ.

பேய் படங்களுக்கே உண்டான அதே தனிமையான வீட்டில் வசிக்கும் ஹீரோவின் மனைவியான ரேஷ்மி மேனனைப் பார்த்து, 'பேய்' என்று பயந்து நடங்குகிறார்கள் நண்பர்கள். பின், யார் பேய் என்பதில் குழப்பம் நீள்கிறது. உண்மையில் ரேஷ்மி மேனன்தான் பேயா? எப்படி பேய் ஆனார். அந்தப் பேயிடமிருந்து ஹீரோவை இந்த நண்பர்கள் காப்பாற்றினார்களா? என்பதே கதை. 

காமெடி ஹாரர் படத்தில்... சென்டிமென்ட், லவ், ப்ரெண்ட்ஷிப்னு நவதானிய கமர்ஷியல் மசாலாவை சேர்ப்பது நியாயம்தான். ஆனால், இது படத்துக்கு கொஞ்சம்கூட நியாயம் செய்யவில்லை. அதுவும் ஒப்பனிங் காட்சிகளில் சென்டிமென்ட் சீனுக்காக இலங்கைத் தமிழர்கள்களையும், சிங்கள ராணுவத்தையும் காட்சிபடுத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. 

இந்த படத்திலிருக்கும் ஒரே ஆறுதல் 'மொட்டை' ராஜேந்திரன்தான். அதுவும் அவர் 'காலுக்கு நடுவுல பார்த்தா பேய் தெரியும்...' போன்ற மொக்கை காமெடி வசனங்களால் சிரிப்பு வரவில்லை. அவர் பாடி லேங்குவேஜ்தான் கொஞ்சம் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறது. 

பயமா இருக்கு

ஹீரோ சந்தோஷ் பிரதாப் பெரும்பாலும் எல்லா சீன்களுக்கும் ஒரே ரியாக்‌ஷன்தான் தருகிறார். ஜெகன், கண்களை பிதுக்கி படம் முழுக்க என்னமோ செய்துக்கொண்டிருக்கிறார். ஜீவா, 'எப்படியாவது காமெடி பண்ணி சிரிக்க வைக்கணும்'னு நினைக்கிறார். ஆனா, படம் முடியும் வரைக்கும் அது முடியவில்லை. பரணி, 'பிக்  பாஸ்' வீட்டில் காயத்ரி கூட்டணியிடம் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் முழித்ததைப்போல இங்கும் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார். ரேஷ்மி மேனன் புடவை கசங்கக் கூடாது என்பதில் காட்டிய கவனத்தை கொஞ்சம் நடிப்பிலும் காட்டியிருக்கலாம். பேய் கேரக்டர் உங்களுக்கு ஷூட் ஆகலை சிஸ்டர். பாவம் இந்த நடிகர்களும்தான் என்ன பண்ணுவார்கள். கதையில் சுவாரஸ்யமான காட்சிகளும் நடிப்பதற்கான இடமும்  இருந்தால்தானே நடிக்க முடியும். ஒரு பட்ஜட் படத்தில் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை இயன்ற அளவு செய்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர். இசையும் ஒளிப்பதிவும் படத்தின் முக்கியமான பலவீனம்.

'பேய் ஓட்டும்' டெவில் தேவிகாவாக வரும் கோவை சரளாவின் இன்ட்ரோ சீனுக்கு அவ்வளவு ஹைப் கொடுத்து கடைசியில் அவரையும் புஷ்வானம் ஆக்கிவிட்டார்கள். அவரும் 'குண்டலனி குஷ்கா குமாரி'னு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிவிட்டுச் செல்கிறார். 'பயமா இருக்கு' என கதைக்குப் பெயர்வைத்தவர்கள் கொஞ்சமாவது பயம்காட்ட வேண்டாமா? படம் முடிந்ததும்  'Written and Directed by Jawahar' என ஸ்டைலான டிசைனில் தன் பெயரைப் போட்டுக்கொள்கிற இயக்குநர், இந்த மெனக்கடலை கொஞ்சமாவது படத்தின் திரைக்கதையை உருவாக்குவதில் செய்திருக்க வேண்டும். பெட்டர் லக் நெக்ஸ் டைம் ப்ரோ !

Do you like the story?

Please Appreciate the Author by clapping!