Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஆஸ்கருக்கு சரியான படத்தைதான் அனுப்பிருக்காங்க..! ‘நியூட்டன்’ படம் எப்படி?

Chennai: 

`நியூட்டன்'... இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுத் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ள படம். இன்ஜினீயரிங் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமா துறையைத் தேர்ந்தெடுத்த இளம் இயக்குநர் அமித் வி மஸுர்கர் இயக்கிய இரண்டாவது படம். 67-வது பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் அதிகக் கவன ஈர்ப்பைப் பெற்ற படம்... 90-வது ஆஸ்கர் விருதுகளில் `சிறந்த வெளிநாட்டு சினிமா' பிரிவில் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூட்டன்

கதை என்னவென்று பார்ப்போம்... 

கதையின் நாயகன் நியூட்டன் குமார் துடிப்பான இளைஞன். அரசு இயந்திரத்தின் இளம் க்ளார்க் உத்தியோகஸ்தன். சிஸ்டத்துக்குள் புதிதாய் வந்திருப்பதால் மடிப்பு கலையாத மனம் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாமல் உண்மையாக வேலை பார்க்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய இந்தியாவின் சில ஆயிரம் பேர்களில் ஒருவன்! சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு 'எலெக்‌ஷன் டூட்டி'க்காக செல்கிறான் நியூட்டன். மிகவும் பின் தங்கிய அந்தப்பகுதி எல்லாவகையிலும் வாழவே லாயக்கில்லாமல் இந்தியாவின் இன்னொரு முகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

தேர்தலையே காணாத, படிப்பறிவில்லாத மக்கள் ஒரு பக்கம், மாவோஸ்ட்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் `ஆபரேஷன் ஹன்ட்' ஒரு பக்கம் என வளம் கொழிக்கும் அந்த தண்டகாருண்யமே 'தண்ட'மாகக் கிடக்கிறது. இந்த அசாதாரணமான  சூழலில் நியூட்டன் குமார் தன் சகாக்களோடு தேர்தலை நடத்தி முடித்தாரா..? சுதந்திரமாக தேர்தலை நடத்த என்னவெல்லாம் விலை கொடுக்கிறார்..? என்னென்ன மாதிரியான பிரச்னைகளை அதனால் எதிர்கொள்கிறார்..? போன்ற எக்கச்சக்கமான கேள்விகளுக்கு விறுவிறு க்ளைமாக்ஸில் பதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அமித். ஒரு மாற்று சினிமாவையே உண்மைக்கு மிக அருகில் வைத்து விறுவிறுப்பாக கதை சொல்ல முடியும் என்பதை 'நியூட்டன்' தெளிவாக உணர்த்துகிறது.

நியூட்டன்

படம் பேசி இருக்கும் அரசியல் மிக முக்கியமானது. உதாரணாமாக ஹீரோ நியூட்டன் குமார் மிக பிரயத்தனப்பட்டுத்தான் வாக்குச்சாவடிக்கு மக்களை அழைத்து வருகிறார். தேர்தலையே காணாத, அப்படி என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஓட்டுப்போடும் அந்த மெஷினை அவர்கள் அதற்குமுன் பார்த்ததுகூட கிடையாது. ஒரு பெரியவர் அட்டைப்பெட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வாக்கு மெஷின் முன் நின்று என்ன செய்வது எனத் தெரியாமல் உறைந்து நிற்கும் காட்சியும் அதனைத் தொடர்ந்து நியூட்டன் அவர்களுக்கு ஓட்டுப் போடுவது பற்றியும் தேர்தலைப் பற்றியும் அவர்களுக்கு பாடம் எடுப்பதாக விரியும் காட்சியும் மிக முக்கியமானது.

வெளிநாட்டு பத்திரிகையாளர் இந்தியாவின் தேர்தலைக் கவரேஜ் செய்ய வந்திருப்பதையும் அதற்காக அங்கு கூடும் அரசு இயந்திரத்தின் 'திடீர்' சின்சியாரிட்டியும் முகத்தில் அறைகிறது. மேலும், போலீஸுக்கு உதவும் சல்வா ஜுடும் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸாரின் யதார்த்த முகங்களும் படத்தை 'கேன்டிட்'டாக பார்த்த உணர்வை நமக்குத் தருகிறது. வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு வரும் அசிஸ்டெண்ட் கமான்டன்ட் ஆத்மா சிங்கிற்கும் நியூட்டன் குமாருக்கும் இடையே நிகழும் மிக கேஷுவலான மோதல்கள் தற்போதைய அரசியல் சூழலை அப்பட்டமாக  எடுத்துக்காட்டி இருக்கிறது. 

நியூட்டன்

படத்தின் ஹீரோவாக நடித்துள்ள ராஜ்குமார் ராவைப் பற்றி தனியாகவே சொல்லி ஆக வேண்டும்.  மிகமிக நேர்த்தியாக இவரின் நடிப்பு இருப்பதற்குக் காரணம் இவர், அனுராக் காஷ்யப்பின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர். 2013-ல் 'ஷாஹித்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைத் தட்டிச் சென்றவர். கதை நாயகனாக மட்டும் இல்லை... வில்லனோ, துண்டுதுக்கடா ரோல்களோ,  தான் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் திறமை உள்ளவர்.

சமீபத்திய கவனக்குவிப்பு சினிமாவான 'ட்ராப்டு' படத்துக்காக உடல் எடையை 22 நாட்களில் 7 கிலோ அளவுக்குக் குறைத்து மிக யதார்த்தமாக நடித்திருந்தார்.  `லவ் செக்ஸ் அவுர் தோஹா',கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்', `கய் போ சே', `குயின்', `சிட்டி லைட்ஸ்', 'அலிகார்' என இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் எல்லாமே வெரைட்டியான பாத்திரங்கள்தான்.

'நியூட்டன்' படத்தில் கதைக்குத் தேவையான எமோஷன்களை திரையில் மிகையில்லாமல் கொண்டு வந்திருந்தார். சொல்லப்போனால் படத்தின் ஒரே ஸ்டார் வேல்யூ ராஜ்குமார் ராவ் மட்டும் தான். அசால்ட் காட்டி இருக்கிறார். அதேபோல பாதுகாப்புப் படை அதிகாரியாக வரும் பங்கஜ் திரிபாதி தன் உடல்மொழியால் மிரட்டி இருக்கிறார். இருவரின் நடிப்புமே ஆஸ்கர் லட்சியம் தேசிய விருது நிச்சயம் வகை. 

இதுபோன்ற சினிமாவுக்கு மிக இயல்பான லைட்டிங்கோடு படம் பிடித்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் கேமராமேன் ஸ்வப்னில் சோனாவானே. நரேன் சந்தவார்க்கர்-பெனடிக்ட் டெய்லரின் துறுத்தாத பின்னணி இசையும், ஸ்வேதா வெங்கட்டின் கச்சிதமான எடிட்டிங்கும் படத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்கிறது. 

படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் என்ட்ரியாக மராத்தி நடிகை அஞ்சலி பட்டீல் நடித்திருக்கிறார். அவரின் கேரக்டர் சிறியதுதான் என்றாலும் மனதில் நிற்கிறார்.   

நியூட்டன்

நியூட்டன்' படம் இந்தியா முழுக்க ரிலீஸாகி சுமாராக ஓடியது. ஆஸ்கர் நாமினேஷனில் படம் இருக்கிறது என்ற தகவல் இணையத்தில் பரவியதும் படம் கொஞ்சம் பிக்-அப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஒரு கோடி ரூபாய்  சன்மானத்தோடு இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் ரேஸில் கம்பீரமாக கலந்து கொண்டிருக்கிறது. யார் கண்பட்டதோ இப்போது 'பிளாக்கரிஸம்' சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. `2001-ல் ரிலீஸான ஈரான் சினிமாவான 'சீக்ரெட் பாலட்' படத்தின் காப்பிதான் இந்த சினிமா!' என யாரோ இணையத்தில் கொளுத்திப்போட  டைரக்டர் அமித் உள்ளிட்ட 'நியூட்டன்' டீம் செம அப்செட்.

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் அதிரடியாய் நியூட்டன் படத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்கி ஒரிஜினல் என சொல்லப்படும் `சீக்ரெட் பாலெட்' படத்தின் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு படத்தைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் இருவரும் நியூட்டன் படத்தை பார்த்துவிட்டு, ``எங்கள் படத்தில் ஒரு பெண் ஒரு பாலைவன கிராமத்திற்குச் சென்று  வீடுவீடாக ஓட்டு சேகரிப்பார். அது காமெடிப்படம். நியூட்டன் அச்சு அசல் இந்தியத் தேர்தலையும் இந்திய மக்களின் பிரச்னைகளையும் தீவிரமாக பேசி இருக்கிறது. மிகத் தீவிரமான யதார்த்த சினிமாதான் நியூட்டன். காப்பி என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என சொல்லி இருக்கிறார்கள்.  

``நான் மொத்த கதையையும் எழுதி முடித்துவிட்டு தண்டகாருண்யத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் சீக்ரெட் பாலட் என்ற படத்தைப் பற்றி என் அசிஸ்டென்ட் ஒருவரின் மூலம் கேள்விப்பட்டேன். அதன் டிவிடியை உடனே வாங்கிப் பார்த்தபோது அது வேற சினிமா என்பதும்  `அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் தேர்தலுக்காக கிராமத்துக்கு செல்கிறார்' என்ற ஒற்றை வரி ஒற்றுமையைத் தவிர படத்தில் வேறு ஒற்றுமை எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து நிம்மதி அடைந்தேன். எனக்காக குரல் கொடுத்து வரும் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு நன்றி!'' என்று சொல்லி இருக்கிறார் இயக்குநர் அமித். 

ஆஸ்கரைத் தட்டி வர அட்வான்ஸ் வாழ்த்துகள் அமித்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement