Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காளையை அடக்கிக்கோ... தங்கச்சியை கட்டிக்கோ... வாவ்..! ‘கருப்பன்’ விமர்சனம்

Chennai: 

முறுக்கு மீசை, கிறுக்கு வீரம் என யாருக்கும் அடங்காத ஹீரோ. அவரை அன்பால் அடக்கும் மனைவி. அந்த மனைவி மேல் ஆசைப்படும் வில்லன். ’அட, எட்டுப்பட்டி ராசாவின் ரீமேக்கா?' எனக் கேட்க வைக்கிறான் கருப்பன்.

விஜய் சேதுபதி

கருப்பன் (விஜய்சேதுபதி) காளைகளையும், அநியாயங்களையும் கண்டால் அவ்வளவுதான். அதை அடக்கிவிட்டுதான் அடுத்த வேலை. யாரும் அடக்க முடியாத தனது காளையை அடக்கினால் தன் தங்கையைத் திருமணம் செய்து தருவதாக அவரிடம் சவால் விடுகிறார் பசுபதி. போட்டியில் விஜய் சேதுபதி ஜெயித்துவிட பசுபதி தங்கை அன்புக்கும் (தன்யா) விஜய் சேதுபதிக்கும் திருமணம். ஆனால், தன்யாமீது அவளது தாய் மாமன் பாபி சிம்ஹாவுக்கு பலகாலமாக ஒருதலைக் காதல். கூடவே விஜய் சேதுபதிக்கு உள்ளூர் பிரமுகர் சரத் லோகித்துடன் மோதல். இந்தக் காதலும் மோதலும் என்ன ஆகிறது என்பதே கதை.

ரேணிகுண்டா இயக்குநர் என்பதால் படத்துக்கு இணையத்தில் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. ஆனால், அதிலிருந்த ஃப்ரெஸ்ஷ்னெஸ் இந்த முறை பன்னீர்செல்வத்திடம் மிஸ்ஸிங். 

Karuppan

பழகிய கதை, பட்டென கண்டுபிடிக்கக்கூடிய ட்விஸ்ட் என இருந்தாலும் கருப்பனைக் கைக்குள் வைத்து காப்பாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷனோ, கோபமோ, காதலோ, அழுகையோ... வழக்கம் போல அத்தனையும் அசால்ட்டாக வருகிறது `மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு. மனநலம் குன்றிய அம்மாவிடம் பாசம், அன்பைக் கொட்டும் மனைவியிடம் ரொமான்ஸ், சீண்டிப் பார்ப்பவர்களிடம் வீரம் என வெரைட்டி விருந்துதான். கருப்புப் பொட்டு, வேஷ்டி சட்டை என கெட்டப்பில் கிராமத்தானாக மாறிவிட்டாலும், நடிப்பில் பாபி சிம்ஹா அத்தனை பொருத்தமாக இல்லை. கிட்டத்தட்ட இதே கதாபாத்திரத்தின் வேறு வெர்ஷனை இன்னும் நல்ல பெர்ஃபாமென்ஸில் `இறைவி' படத்தில் பார்த்துவிட்டதாலோ? க்ளைமாக்ஸில் கழுத்து வரை காதலைத் தேக்கி வைத்து ஹீரோயினைப் பார்த்து ரொமான்டிக்காகக் கண்ணடிப்பதைத் தவிர அவருக்கான வேலை பெரிதாக ஒன்றுமில்லை.

தன்யா நடிப்பு எந்த அலட்டலும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. லட்சுமி மேனனை எதிர்த்து தேனி ஏரியாவில் போட்டியிட்டால் அம்மணிக்கு டெபாசிட் நிச்சயம் கிடைத்துவிடும். `தேசிங்கு ராஜா'வில் கேட்ட பாயாசம் இந்தப் படத்தில்தான் சிங்கம்புலிக்குக் கிடைக்கிறது. அதேபோல் சில இடங்களில் அவரது காமெடியும் ஒர்க் அவுட் ஆகிறது. அதைவிட கண்கலங்கும் காட்சியில்தான் மெர்சல் காட்டுகிறார். பசுபதிக்கு சாதாரணமான ஒரு ரோல், அதை மிக சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார். "அவன அரத்துப் போடுங்கடா, ஆரையும் ஒயரோட விடாதீங்கடா" என தமிழா, தெலுங்கா, கன்னடமா எனப் புரியாத மாதிரி டப்பிங் பேசியபடி சரத் லோகித் வந்து போகிறார். தமிழை வெட்ருங்க சார்.

Vijay Sethupathy

பஞ்சாயத்தில் பத்து நாளில் பேசிக்கலாம் என்கிறார்கள். ஆனால், அதன்பின் ஒரு போகம் விவசாயமே செய்துவிடுகிறார் ஹீரோ. ஆனால், பாபி சிம்ஹாவும் பஞ்சாயத்தும் ஒன்றுமே செய்யாமலா இருப்பார்கள்? சரத் லோகித்துக்கு பசுபதியிடம் ஒரு வேலை நடக்க வேண்டுமே. அது என்ன வேலை? அது என்ன ஆனது? அந்த அம்மா கேரக்டர் படத்துக்கு எதற்கு? அந்த ஊரில் யார் வீடுமே சரியாக கட்டப்படவில்லையா? சுவர்கள் இடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன.

 

கதையே பழசு; ட்யூன் மட்டும் புதுசு வேணுமா என்ற இசையமைப்பாளர் இமானின் கோபம் பாடல்களில் தெரிகிறது. ஆனாலும், மெலடிகள் இதம்தான். கிராமத்து லொகேஷன்களில் முடிந்த அளவு எதாவது புதுமையாகக் காட்டிவிட முயற்சி செய்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு. இத்தனை சுமார்களுக்கும் நடுவில் சுழற்றியடித்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் ராஜசேகர். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக்காட்சி அருமை. 

மொத்தத்தில், இந்தக் கருப்பன்.க்ளிஷேக்களின் தலைவன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்