"கள்ளன் பவித்ரன் vs கடவுள்"! தனுஷின் முதல் மலையாளப் படம் 'தரங்கம்'.. படம் எப்படி?

ஏழரை உச்சம் பெற்ற ஒருவனுக்கு நான் ஸ்டாப் ஆப்புகள் விழுந்தால் எப்படி இருக்கும்? அவன் ஒரு போலீஸாக இருந்து அவன் சஸ்பென்ஷனிலிருந்து, அவனுடைய காதலி, நண்பன், ரோட்டில் போகும் ஒருத்தன் கூட ஏதாவது பிரச்னையில் சிக்க வைத்தால், அதுதான் `தரங்கம்'. 

தரங்கம்

`கள்ளன்' பவித்ரன் (அச்சுதானந்தன்) கடவுளைச் (திலேஷ் போத்தன்) சந்திப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தனக்கு அளிக்கப்பட்ட சாபத்தால் தன் சந்ததிகள் துர்மரணம் அடைவது பொறுக்காமல், தன் கொள்ளுப் பேரக் குழந்தைகளாவது நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு சாப விமோச்சனம் அளிக்கும்படி கடவுளிடம் பேரம் பேசுகிறார். கடவுளும் ஒரு நிபந்தனை விதித்து, அதன்படி அவர்கள் நடந்துகொண்டால் சாபவிமோச்சனம் பெறுவர் எனச் சொல்லப்படுகிறது. அப்படியே கதை பூமிக்கு நகர்கிறது. பத்மநாபன் என்கிற பாப்பன் (டொவினோ தாமஸ்), ஜோய் (பாலு வர்கீஸ்) இருவரும் ஒரு கடத்தலைத் தடுக்கச் சென்று, அது சொதப்பலாகி உயர் அதிகாரியின் இறப்புக்குக் காரணமாக இருந்ததற்காக ஒரு மாதம் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள். உடனடியாக தான் பட்ட கடனை அடைக்க 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது டொவினோவுக்கு. அதற்காக வேவு பார்க்கும் வேலை செய்யப் போய் ஓர் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் டொவினோவும், பாலு வர்கீஸும். பூமியில் டொவினோவின் பிரச்னை என்ன ஆகிறது? இடையில் வரும் ஓமனா, ரகு, சிஜு ஆகியோரின் பிரச்னை எப்படி இதற்குள் வருகிறது? இந்தச் சிக்கல்களுக்கும், `கள்ளன்' பவித்ரன் + கடவுளின் டீலிங்கிற்கும் என்ன சம்பந்தம் என்பதை எல்லாம், நின்று நிதானமாக பொறுமையாகச் சொல்கிறது தரங்கம்.

தயாரிப்பாளர் தனுஷ் மலையாளத்தில் கால்பதித்திருக்கும் முதல் படம் இது. வி.ஐ.பி தீமுடன் தனுஷ் தயாரிப்பில் என ஆரவாரமாக ஆரம்பித்தாலும், எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக ஒரு நகைச்சுவைப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டோம்னிக் அருண். கொசுமருந்து அடித்ததுபோல் ஸ்மோக் எஃபக்டில் அல்லாமல் சாதாரண ஒரு ஆஃபீஸ் ரூம், அங்கு பவித்ரனோடு கடவுள் பேசுகிறார், சுதந்திரத்துக்கு முந்தைய ரேடியோ வழியே "எல்லோரையும் காப்பாத்து கடவுளே" தொடங்கி "நான் என்ன உன்கிட்ட காசு பணமா கேட்டேன், தாடி மீசை முளைக்க வைனுதான கேக்கறேன். எத்தனை முறை ஷேவ் பண்ணியும் உனக்குக் கருணையே இல்லையா" என மக்களின் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்கிறார் என்பது வரையிலான மிக எளிமையான க்ரியேட்டிவிட்டியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குநர்.

Tharangam

கடன் தொல்லை, காதலியும் தொல்லை, பணத்துக்காக எடுத்துக்கொண்ட வேலையும் தொல்லை என எல்லாம் சூன்யமாக மாறிவிட பாப்பனாக நடித்திருக்கும் டொவினோவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும், பாலு வர்கீஸுடன் இணைந்து செய்யும் காமெடிகளும் சரவெடி. சீக்கிரமே `மாரி 2' மூலம் தமிழிலும் அறிமுகமாக இருக்கும் டொவினோவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள். குறிப்பாகத் தொலைந்து போன காரைத் தேடிப் போவது, செக்யூரிட்டி ஒருவரிடம், ப்ரவுன் கலரு, அட கோல்டன் ப்ரவுனு, என்னோட தோல் கலர்ல இருக்கும்யா என விளக்கிச் சொல்லும்போது தியேட்டர் தெறிக்கிறது. அடம் பிடிக்கும் காதலியாக சந்தி பாலசந்திரன், லேடி டானாக நேஹா, அவருடைய அடியாளாக சிஜாய் வர்கீஸ், கடன் வசூலிப்புக்கு வந்து மிரட்டும் அலன்சிர், பேக் திருடிவிட்டு ஓடும் நபர் எனப் படம் முழுக்க விதவிதமான கதாபாத்திரங்கள். எல்லோரும் நடித்த விதம் சிறப்பு. கடவுள் - கள்ளன் பவித்ரன் கதையையும், பூமியில் பாப்பன் கதாபாத்திரத்தால் நடக்கும் கலாட்டாக்களும் என இரண்டையும் நான் லீனியராக திரைக்கதையில் கொண்டு வந்ததும், மூன்று குழுக்களில் பொருள் மாறாட்டத்தால் நடக்கும் கலாட்டாக்களையும் எந்தக் குழப்பமும் இல்லாமல் கொடுத்த விதமும் நன்று. ஆனால்,  ப்ளாக் ஹ்யூமர் என்றால் படம் இவ்வளவு மெதுவாக நகர வேண்டுமா, எதற்காக இத்தனை இழுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது, க்ளைமாக்ஸ் முன்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் சுந்தர் சி படம் போல அசம்பிள் ஆகும்போது வரும் கலகலப்பு சூழல் மிஸ்ஸாகி, எப்போ முடியும் என்ற உணர்வு எழுகிறது. 

பாடல் மற்றும் பின்னணி இசையில் கவர்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் ரெஞ்சு. படத்தின் நகைச்சுவைகளுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாமல் பின்னணியில் ஒலிப்பதும், சில இடங்களில் பரபரப்பை உண்டு பண்ணுவதும் பின்னணி இசைதான். தீபக் டி மேனன் ஒளிப்பதிவுக் காட்சியின் தன்மையைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது. சில இடங்களில் பயன்படுத்தியிருக்கும் ஸ்லோ மோஷன் ஐடியாக்கள் நன்று. 

நிறையவே பொறுமையாக இருந்து பார்த்தால் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், பல திருப்பங்கள், பல காமெடிகள் என உங்களுக்குப் பர்ஃபெக்ட் என்டர்டெய்ன்மென்ட் தரும் இந்தத் தரங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!