Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்டு, காமெடி, ப்ரியா பவானிசங்கர்லாம் ஓ.கே. ஆனாலும்..? - ‘மேயாத மான்’ விமர்சனம்

Chennai: 

`இதயம்' படத்தின் முரளியைப் போல், தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வருகிறார் முரளி . தனது காதலைச் சொல்லவும் முடியாமல், கொல்லவும் முடியாமல், லிட்டர் லிட்டராக லிக்கர் எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதுதான் அவரது முழுநேர வேலை. இதை முடிவுக்கு கொண்டுவர, முரளியின் நண்பர்கள் ஒரு முயற்சி எடுக்கிறார்கள். அது என்ன முயற்சி, அதனால் என்ன ஆனது என்பதை காதல், நட்பு, பாசம், கானா,  ராக், ஷேக்ஸ்பியர் கலந்து சொல்லியிருக்கிறது `மேயாத மான்'.

மேயாத மான் விமர்சனம்

வழக்கமான காதல் தோல்வி, காதலுக்கு உதவும் நண்பர்கள் கதையை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். பல காட்சிகளில் வழக்கமான முறைகளை உடைத்த விதமும் திரையில் கொடுத்த விதமும் கவர்கிறது. 

படத்தின் மற்ற பிரதான பாத்திரங்களை ஓரம் கட்டி தன் நடிப்பால் தனித்துத் தெரிகிறார் விவேக் பிரசன்னா. அலட்டிக் கொள்ளாத உடல் மொழி, மிக இயல்பாக வெளிப்படுத்தும் வசனங்கள், யதார்த்தமான முக பாவனைகள் என ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். செல்போனில் தற்கொலை மிரட்டல் விடும் வைபவை "சரி சாவுறதுனா சாவுடா" என கோபமாக திட்டி கட் செய்துவிட்டு, பிறகு பதறிப்போய் ஓடுவது, சுடர்விழியின் (இந்துஜா) கோபத்துக்குப் பிறகு தயக்கத்துடனே பழகுவது, "எனக்கு முரளி முக்கியம் ஒழுங்கா நான் எழுதுறத பேசு" என ப்ரியா பவானி சங்கரை டென்ஷனாக்குவது என ஆரம்பம் முதல் முடிவு வரை அசத்தல். இதயம் முரளியாக, எப்போதும் சோகம் தோய்ந்த முகம், குடி போதையில் உளறல்...என அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வு வைபவ். 

மேயாத மான் விமர்சனம்

மது கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா பவானி சங்கர் அழகான வரவு. நடிப்பதற்கு வாய்ப்பு வரும் இடங்களில் எல்லாம் நடிக்க முயற்சிக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பான நடிப்பை வழங்குவார் என நம்பலாம். வைபவின் தங்கையாக வரும் இந்துஜாவின் கதாபாத்திரம் செம. இந்துஜாவிடம் விவேக் பிரசன்னா காதலைச் சொல்லுமிடம் காமெடி கவிதை.

சந்தோஷ் நாராயணன் - பிரதீப் குமார் இசையமைப்பில் பாடல்களும்... ஃபீல் குட். விது ஐயன்னாவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். 

மேயாத மான் விமர்சனம்

அஜித்தின் 'ஆலுமா..டோலுமா' பாடலை படத்தில் பயன்படுத்தியிருக்கும் இடத்தைப் பார்த்து தல ரசிகர்கள் தாறுமாறாய் டென்ஷன் ஆவார்கள். ஒரே ஒரு போன் காலில் ப்ரியாவுக்கு வைபவ் மேல் ஒரு 'இது' வந்து (காதல் என்று சொல்லமுடியுமா?) திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போடுவது நம்பும்படியாய் இல்லை. அந்த ஒரு வருடத்திலும் அவர் வைபவைச் சந்திப்பதற்கோ அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கோ எந்த முயற்சியும் எடுத்ததாய்த் தெரியவில்லை. ஓராண்டுக்குப் பிறகுதான் தற்செயலாக ஒரு திருமண வரவேற்பில் சந்திக்கிறார். ஙே!

குறும்படமாக இருந்த `மது', அப்படியே படத்திலும் துவங்கியிருப்பதும், அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடந்தது என கதையை நகர்த்தியிருந்த விதமும் நன்று. ஆனால், காதல், தங்கை பாசம், நட்பு என மூன்றையும் சொல்ல முயன்று, ஆங்காங்கே தடுமாறிச் செல்கிறது படம். படத்தின் கதை சூப்பர்ப் என்று சொல்ல முடியாது. ஆனால், சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலம் ஈர்க்கிறது இந்த மான்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்