Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அரசியல் கொலைகளின் ரீவைண்ட், ஆணவப்படுகொலைகளின் ஆவணம்! - ‘விழித்திரு’ விமர்சனம்

ஓர் இரவில் பயணிக்கும், நான்கு கதைகள் ஒன்றையொன்று ஊடுருவிச்சென்று, இறுதியில் ஒரே புள்ளியில் இணையும் இந்த வருடத்தின் மற்றுமொரு ஹைப்பர் லிங்க் சினிமா `விழித்திரு'.

விழித்திரு

சொந்த ஊருக்குச் செல்லவிருந்த நேரத்தில் பணம் + ரயில் டிக்கெட் வைத்திருந்த பர்ஸை பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் முத்துக்குமாராக கிருஷ்ணா. எல்லாக் காட்சிகளிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். பூட்டிய வீடுகளில் ஆட்டையைப் போடும் திருடன் சந்திரபாபுவாக விதார்த், திருடி சரோஜாதேவியாக தன்ஷிகா. கிருஷ்ணாவின் கதை ரத்தமும் சதையுமாகச் செல்ல, இவர்களின் கதையோ கலாயும் கலாட்டாவாகவும் செல்கிறது. தொலைந்துபோன நாயை தன் மகள் சாராவோடு தேடிக்கொண்டிருக்கும் தந்தையாக வெங்கட்பிரபு. பிறந்த நாளன்று கார் பழுதாகி, பர்ஸை தொலைத்து பையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் அல்லாடும் கோடீஸ்வர இளைஞனாக ராகுல் பாஸ்கரன். அவரின் தோழியாக எரிக்கா ஃபெர்னான்டஸ். ஒட்டுமொத்த படமும் சோடியம் விளக்கொளியால் சூழப்பட்டிருக்க, கொஞ்சமேனும் கலர்ஃபுல்லாக இருப்பது இவர்களின் கதைதான். 

பர்சை தொலைத்துவிட்டு பணத்துக்காக ஆக்டிங் ட்ரைவராக செல்லும் கிருஷ்ணாவின் கதாபாத்திர வடிவமைப்பும், அவரைத் துரத்தும் பிரச்னைகளின் மூலம் கதையில் விறுவிறுப்பு சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். ஊரையே அதிர வைக்கப் போகும் ஆதாரம் ஒன்றை வைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும், கடைசியில் தன் மொபைலைக் கொடுக்கும் இடத்திலும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார் கிருஷ்ணா. திருடா-திருடி கூட்டணியாக இணையும் விதார்த் - தன்ஷிகா ஜோடி படத்தின் பட படப்பைக் கொஞ்சம் குறைக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு இடையிலும் மிகச் சுமாரான காமெடிகளுடன் களம் இறங்கும் தம்பிராமையா அதைக் காலி செய்துவிடுகிறார். பார்வை சவால் கொண்டவராக வெங்கட்பிரபு. கண்களிலேயே பயம், பாசம், பதட்டம் என அனைத்தையும் கடத்த முயற்சி செய்கிறார். குறிப்பாக சாராவைத் தேடிச்செல்லும் காட்சிகளில் சிறப்பு. 'ஐயம் விக்ரம்... விக்ரம்  குரூம் ஆஃப் கம்பெனியோட எம்.டி.' என எதற்கெடுத்தாலும் பிகு பண்ணும், ராகுல் பாஸ்கரன் நடிப்பிலும் நிறையவே பிகு பண்ணுகிறார். எந்த உணர்வுக்கும் அதற்கான முகபாவனை இல்லை. எரிகா ஃபெர்னான்டஸுக்கு நடிக்க பெரிய இடம் கிடையாது என்பதால் க்ளாமராக மட்டும் வந்து போகிறார். ராகுல், பொம்மைக் கடை மீது காரை மோதிவிட்டு பணத்தை விட்டெரியும் இடமும் ஒரு போன் காலுக்காக பிச்சைக்காரரிடம் ஒரு ரூபாய் பெறும் இடமும் செம.

விழித்திரு

ஒரே இரவில் நடக்கும் கதை, அதில் வரும் நான்கு வெவ்வேறு கதைகள் அதை அங்கங்கே இணைத்து பின் விடுவித்து கடைசியில் இணையும் படி செல்லும் திரைக்கதை சுவாரஸ்யம் சேர்க்கிறது. அதற்கு தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் உதவியிருக்கிறது விஜய் மில்டன், சரண் இருவரின் ஒளிப்பதிவு. மற்றபடி பாடல்களோ, பின்னணி இசையோ படத்தில் பெரிய பங்கு வகிக்கவில்லை. பெரிய தாமதத்திற்குப் பிறகு வெளியானதன் பாதிப்பால், ரியல் டைமிலேயே ஒரு பீரியர்ட் ஃபிலிம் பார்ப்பது போன்ற உணர்வு எழுகிறது. கூடவே `மாநகரம்', `குரங்கு பொம்மை' போல இதே திரைக்கதையமைப்பில் படங்கள் பார்த்துவிட்டதும், (இந்தப் படங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டுவிட்ட படம் இது)  படத்தை பலவீனப்படுத்துகிறது. படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட பாடல் என்பதால், டி.ஆர் ஆடும் பாடலை புரமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். அத்தனை வற்புறுத்தலாக அது படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.

வாசலுக்கு அருகில் வைத்து ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார், அந்தச் சத்தம் வாசலுக்கு வெளியே நிற்கும் கிருஷ்ணாவுக்குக் கேட்காமலா இருக்கும், கையில்தான் கார் இருக்கிறதே அதை வைத்து சொந்த ஊருக்கே அவர் போய்விடலாமே என நிறைய குழப்பங்கள் படத்தில். டைட்டில் பாடலோடு சேர்த்து படத்தின் முதல் பத்து நிமிடமும், கடைசி பத்து நிமிடமும் பக்கா. அதிலும் டைட்டில் அனிமேஷன் பாடல் பக்காவோ பக்கா. இயக்குநரின் டச் தெரிகிறது. பின்னர், இடையிலுள்ள காட்சிகளோ எந்தவொரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாகவே நகர்கிறது. வித்தியாசமான திரைக்கதை, ஆனால் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். 

விழித்திரு

ஆணவப் படுகொலைக்குக் காரணமான அரசியல் தலைவர் பெயர் ராமமூர்த்தி, அரசியல் ஆட்டத்தில் பலிகடா ஆகும் ஹீரோவுக்குப் பெயர் முத்துக்குமார். அண்ணன் இறந்தது தெரியாமல், பாவமாக திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசும் தங்கை, கிடத்தப்பட்ட உடலை பிரபாகரனின் மரணத்தோடு ஒப்பிட்டிருப்பது... எனப் படம் முழுக்க நாம் கடந்துவந்த அரசியல் ஆட்டங்களை ரீவைண்ட் செய்கிறார் இயக்குநர். அது கதைக்கு வெளியே துருத்தாமல் இயல்பாய் அமைந்திருந்து சிறப்பு.

படத்தில் ஆணவக் கொலைகளுக்கு பின்னாலிருக்கும் ஓட்டுவங்கி அரசியல் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். அதை அழுத்தமான காட்சிகளால் பேசி, பாத்திர வடிவமைப்பில் இன்னும் யதார்த்தத்தை கூட்டியிருந்தால், ‘விழித்திரு’, சிறப்பானதொரு சினிமாவாக வந்திருக்கும்.

’அவள்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement