Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

டாக்டர் விஷால்... போலீஸ் மோகன் லால்... யார் வில்லன்? - வில்லன் படம் எப்படி?

மோகன் லால் - உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியிருக்கும் சினிமா `வில்லன்'. `கிராண்ட் மாஸ்டர்' போன்ற வடிவமைப்பிலேயே இன்னொரு த்ரில்லர் கதை சொல்லியிருக்கிறது இந்த காம்போ. 

வில்லன்

ஏழு மாத விடுப்புக்குப் பின் மீண்டும் வேலைக்கு வருகிறார் மேத்திவ் மஞ்சூரன் (மோகன் லால்). வந்த கையோடு விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு அன்றோடு காவல்துறையிலிருந்து விலக இருப்பவரிடம், நகரத்தில் மூவரை மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. முதலில் அதனை ஏற்க மறுப்பவர் பின்பு, தீவிரமாக அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்தக் கொலைகளை செய்தது யார். ஏன், எப்படி என வில்லனுக்காக போலீஸ் மோகன் லால் மேற்கொள்ளும் தேடுதலே படம். ஆரம்பத்திலேயே கொலை நடந்ததைக் காண்பித்து கதைக்குள் நுழைகிறது படம். கொலையாளி விஷால்தான் எனக் காட்டிவிட்டு, இந்தக் கொலை எப்படி நடந்திருக்கும் என மோகன் லால் க்ளூக்களை இணைத்து சொல்லும் விதத்தால், அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் படி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் உன்னி கிருஷ்ணன்.  

Mohan lal

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சாந்தமாக வருகிறார் மோகன் லால். அவருக்குப் பின்னால் குடும்பத்தை இழந்த கதை இருக்கும், அதிகப்படியான காட்சிகளில் அதை வெளிப்படுத்தும் படியான முகபாவனைகளிலேயே பேசுகிறார், கோபப்படுகிறார்.மருத்துவமனை காட்சிகளில் மோகன்லால், தான் ஒரு கம்ப்ளீட் ஆக்டர் என்பதை நூறாவது முறையாக நிரூபிக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்குக் காரணமானவர் கிடைத்தும் பழிதீர்க்காமல், `ரிவெஞ் இஸ் எ டிசீஸ்' என அமைதியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார். டாக்டர் சக்திவேலாக விஷால். தனக்கு எதிரில் நிகழும் அநியாயங்களுக்காக கோபம் கொள்ளும் கதாபாத்திரம். மருத்துவத்துறையில் நடக்கும் தவறுகளுக்கு சட்டத்தை கையிலெடுத்து தீர்ப்பெழுதும் விஷாலுக்கு இது மலையாள மெர்சல். ஆனால், அந்த கண்ணாடி ஃபிரேம் படம் நெடுகிலும் சிரிப்பை வரவழைக்கிறது. எதிர் எதிர் கதாபாத்திரங்களை உருவாக்கி அதனை மோதிக் கொள்ள செய்த விதம், குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன் மோகன் லாலுக்கும் விஷாலுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் படத்தின் வலு. 

Hansika

சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் மஞ்சு வாரியரின் நடிப்பு படத்தின் ஓட்டம் மாறிய பின்பும் மனதில் நிற்கிறது. அதே போன்ற அளவுள்ள கதாபாத்திரம்தான் ஹன்சிகாவுக்கு என்றாலும் வலுவான பின்னணி இல்லை என்பதால் பெரிதாக கவரவில்லை. கொலைகளுக்கான காரணங்களைத் தேடி அலையும் ராஷி கண்ணா, ஒரு விதத்தில் மோகன் லாலின் இழப்புக்கு தானும் காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் செம்பன் வினோத், அத்தனை முக்கியமான கதாபாத்திரமாக இல்லை என்றாலும் சித்திக், ரெஞ்சி பனிக்கர் என எல்லோருமே தங்களின் பங்கை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். 4 மியூசிக் பேண்ட் கலைஞர்களான பிபி, ஜிம், எல்தோஷ், ஜஸ்டின் இசையில் பாடல்கள் நன்று. இன்வஸ்டிகேஷன் த்ரில்லர்தான் என்றாலும் படத்தில் விறுவிறுப்பு பெரிதாக இருக்காது, ஆனால் பின்னணி இசையில் எனர்ஜி கொடுத்திருக்கிறார் சுஹாசின் ஷ்யாம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு கச்சிதம். `இங்க நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது. Everything is grey' எனப் படத்தில் ஒரு வசனம் இருக்கும். அதே போலதான் மோகன் லால், விஷாலின் பாத்திர வடிவமைப்பு, அந்த உணர்வை ஒளிப்பதிவின் மூலமும் கொடுத்திருக்கிறார் மனோஜ் பரம்ஹம்சா.

 

 

மோகன் லால், மஞ்சு வாரியர் மகள் அதிரா படேல் என இந்தக் குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் கதைக்குத் தேவை என்றாலும் நாடகத்தனமாக இருக்கிறதே என்கிற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் அந்தக் குடும்பத்தின் மரணத்துக்கு யார் காரணம் என்பது எளிதில் யோசிக்க முடிகிற திருப்பம் என்பதால், அதை சஸ்பென்ஸாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? படத்தில் நடக்கும் கொலைகள், மோகன் லாலின் பர்சனல் பாதிப்பு, விஷாலின் கதை என எல்லாம் தனித் தனியாக காட்டி பின்பு ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு என திரைக்கதையை சுவாரஸ்யம் என்றாலும் ஒரு பேட்டர்ன் அமைந்த பின்பு அடுத்து எல்லாம் யூகிப்பதாகவே நடப்பது அலுப்பு தருகிறது. படத்தின் துவக்கத்தில் இருக்கும் ஆர்வம், மெல்ல மெல்ல குறைய ஆரம்பிப்பது பெரிய மைனஸ்.

முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான உணர்வுகளை அழுத்தமாக எழுதியதைப் போல, கதையின் ஓட்டத்தையும் வலுவாக எழுதியிருந்தால் இன்னும் மிரட்டலான படமாக அமைந்திருக்கும் வில்லன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement