வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (07/11/2017)

கடைசி தொடர்பு:15:45 (07/11/2017)

சீரியஸ் ஜாக்கி சான், வில்லத்தன பியர்ஸ் பிராஸ்னன்..!  #TheForeigner படம் எப்படி?

மகளை இழந்த தந்தைக்கும், ஓர் அரசு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் அதிரடி சம்பவங்களின் தொகுப்புதான் தி ஃபாரினர். 
முன்னாள் போர் வீரரான குவான் (ஜாக்கி சான் ) லண்டனில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். IRA தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை குவான் இழக்க, கொலைக்குக் காரணமானவர்களைத் தேடுகிறார். அயர்லாந்து அரசின் முக்கிய அரசு பொறுப்பில் இருக்கிறார் லியாம் ஹெனெஸி (பியர்ஸ் பிராஸ்னன்). இவருக்குக் கொலையாளிகள் யார் எனத் தெரியும் என யூகிக்கிறார் குவான். கொலை, பழிவாங்கல், ஆக்ஷன், பாசம், துரோகம் என மாறி மாறி பயணிக்கிறது தி ஃபாரினர். 

தி பாரினர்

ஸ்டீபன் லெதர் எழுதிய ' தி சைனாமேன் ' என்கிற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் கேம்ப்பெல். பியர்ஸ் பிராஸ்னனை வைத்து கோல்டன் ஐ; டேனியல் கிரெய்கை வைத்து கேசினோ ராயல் என இரு ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய மார்ட்டினின் படத்தில் அதிரடி இருக்குமென பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிராஸ்னன் ஒரு முன்னாள் IRA என்பதைத் தவிர, ஜாக்கி அவரை இப்படி 24*7 துரத்துவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை.  நாவலாகப் பல காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம் கூட படத்தில் இல்லை. 

அறுபது வயதைக் கடந்தாலும், இன்னும் ஜாக்கி சானிடம் ரசிகர்கள் காமெடி சண்டைக் காட்சிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஒரு காட்சியில் ஜாக்கி சான் படிக்கட்டிலிருந்து விழ, பாதி திரையரங்கம் சிரிக்க வேறு செய்தது. (படத்தின் இறுதியில் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சியில் ப்ளூப்பர்ஸ் வருமா என்கிற ஆர்வத்தில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது). தி கராத்தே கிட் படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடனுடன் பல காட்சிகளில் நடித்திருப்பார் ஜாக்கி சான். அதில் அவர் அழும் காட்சிக்கு திரை அரங்கில் இதே ரெஸ்பான்ஸ்தான் இருந்தது. ஆனாலும், மனிதர் சண்டைக் காட்சிகளில் இன்னும் அதிரடியில் மிரட்டுகிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி ஆகட்டும், அபார்ட்மென்ட்டில் நடக்கும் இறுதி சண்டை ஆகட்டும், ஜாக்கி சான் தி மாஸ்!

தி பாரினர்

பியர்ஸ் பிராஸ்னனை நல்லவராகவும் காட்ட வேண்டும். அதே சமயம் வில்லனாகவும் காட்ட வேண்டும். நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா எனக் கேட்க வைக்கிறது பிராஸ்னன் வரும் அநேக காட்சிகள். "வெடிதான் வைக்க சொன்னேன், அங்க மக்கள் சாகக்கூடாதுன்னும் சொன்னனே" முதல் பல வசனங்கள் இதே குழப்பநிலையில் தான் இருக்கிறது. பிராஸ்னனின் மனைவி, ஜாக்கி, அயர்லாந்து போலீஸ், பிராஸ்னனின் உயர் அதிகாரி என ஏகத்துக்கு அனைவருக்கும் பிராஸ்னனை மிரட்டுவது மட்டும் ஒரே வேலை. இது என்னடா ஜேம்ஸ் பாண்டு ஹீரோவுக்கு வந்த சோதனை என்கிற ரீதியில் இருக்கிறது இவரது கதாப்பாத்திரம். 

ஒரு சாமான்யனுக்கு அரசின் உயர் அதிகாரி பயந்து, ஊருக்கு வெளியே ஃபார்ம் ஹவுஸில் தஞ்சம் புகுவது முதல், அலுவலகத்தில் வைக்கும் வெடி வரை அத்தனையும் காமெடிக் காட்சிகள். அதிலும், படத்தின் இறுதிக் காட்சியில், தமிழ் சினிமா போல், ஹீரோவை மன்னித்து விடுவதெல்லாம். யப்பா டேய் ரகம். 

தி பாரினர்

மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லாஜிக் களேபரங்களைக் குறைத்து, சுவாரஸ்யங்களைச் சேர்த்திருந்தால், ' தி சைனா மேன் ' நாவல் போல், ' தி ஃபாரினர் ' திரைப்படமும் பேசப்பட்டிருக்கும்.

விழித்திரு படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...


டிரெண்டிங் @ விகடன்