வாழ்த்துகள் கோபி நயினார்... வொண்டர்ஃபுல் நயன்தாரா! - ‘அறம்’ விமர்சனம்

அறம் - கிணற்றுக் கல்லாய் கிடக்கும் அதிகார வர்க்கத்தின்மீது இறங்கும் ஆணி.

ஒருபக்கம், மினரல் வாட்டரை கேன் கேனாக குடித்துக் களிக்கும் மாடர்ன் இந்தியா, மறுபக்கம் ஒரு மடக்குத் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களின் இந்தியா. முன்னவர்களுக்குப் பின்னவர்கள் இருப்பது பற்றிய பிரக்ஞையே இல்லை. அப்படி மறந்துபோன மக்களின் ஆன்மாவாக ஒலிக்கும் குரலே 'அறம்'. 

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில், ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் ராக்கெட் கனல்கள் தெறித்துவிழும் தூரத்தில் இருக்கும் கிராமம் காட்டூர். வியர்வைகூட துளிர்த்த உடனே வறண்டுபோகும் அளவுக்கு வறட்சி அங்கே தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கவேண்டிய நிலை. ஆனாலும், இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் ராமசந்திரன் துரைராஜ் - சுனு லஷ்மி தம்பதியினர். ஒருநாள், சுனு விறகு வெட்டப் போகும்போது, எதிர்பாராதவிதமாக அவரின் நான்கு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுகிறது. குழந்தையை மீட்க முயற்சிக்கும் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா, துணிந்து சில முடிவுகளை எடுக்கிறார். அந்த முயற்சிகள் பலனளித்ததா? பிஞ்சுக் குழந்தை உயிரோடு மீண்டதா, பிரச்னைகளுக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.

ஆழ்துளைக் கிணற்று அவலங்களை வைத்து கதை பின்னியதில் ஸ்கோர் செய்யும் இயக்குநர் கோபி நயினார், அதில் பொருத்தமான நடிகர்களை நடிக்கவைத்ததன்மூலம் சிக்ஸர் அடிக்கிறார். இதுவரை துணை நடிகராக வலம் வந்த ராமசந்திரனுக்கு, இதில் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் கனமான பாத்திரம். அசராமல் தூக்கிச் சுமக்கிறார். அவருக்கு சளைக்காமல் நடித்திருக்கிறார் சுனு லஷ்மி. ஒன்றிரண்டு காட்சிகளே வந்தாலும் பழனி பட்டாளம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன.

நயன்தாரா, ஹீரோவை துரத்திக் காதலிக்கும் காட்சிகள், ஜிகுஜிகு ஆடைகள் போன்றவற்றிலிருந்து பெரிய பிரேக் அவருக்கும் நமக்கும். ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த இயக்குநர் கோபி நயினாருக்கு சல்யூட். அவர் உருவாக்கிய கேரக்டருக்கு, கச்சிதமாக உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அவர் கரியரில் மிக முக்கியமான படம் இது.  கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எம்.எல்.ஏ-வை முறைத்துவிட்டு கெத்தாக நடப்பது, குழந்தையை கேமராவின் வழி பார்க்கும்போதெல்லாம் இயலாமையில் புழுங்குவது என அசரடிக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸில் மொத்தக் கூட்டத்திலிருந்தும் பிரிந்து, தனியாக வெடித்துக் கதறும்போது... க்ளாஸ். இனியும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் என்ன செய்தீர்கள் என நயனை யாரும் கேள்வி கேட்க முடியாது.

கதை, திரைக்கதையில் மட்டுமல்ல, காட்சி அமைப்பிலும் அத்தனை இயல்பைக் கூட்டுகிறார் இயக்குநர். குறிப்பாக, உச்சி வெயிலில் பிளாட்டுகளுக்கு கற்கள் நடும் இடம். ‘இந்த இடமே எவ்ளோ பசுமையா இருந்தது’ எனப் பேசிக்கொள்ளும் பெயின்டர்கள். ‘இருக்கிற எல்லா மரங்களையும் அழிச்சு கதவு, ஜன்னல் செஞ்சுட்டு வீட்டுக்குள்ள காத்து வரலைனு பொலம்புறானுங்க’ எனப் பேசும் வசனம் அழகு.

அறம்

வாழ்வாதாரத்துக்கு தண்ணீரே இல்லாத கிராமத்துக்கு அருகே, இந்திய அரசு விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துகிறது. ராக்கெட் எதற்காக செலுத்தப்படுகிறது என்கிற நோக்கம் தெரியவில்லை என்றாலும், ‘அது, நம்ம நாட்டிற்குப் பெருமைதானே… அதுக்காக சாமி கும்பிடுவோம்’ என வெள்ளந்திப் பேச்சு பேசும் மனிதர்கள். அந்த மக்களுக்குத் தண்ணீர் வழங்காமல்தான், பக்கத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் லாரி சென்றுகொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு அரசு காட்டும் கரிசனம் இதுதான் என்பதைப் பொட்டில் அடித்துக் கடக்கிறது அந்தத் தண்ணீர் லாரி.

‘ஆழ்துளைக் கிணறு’ என்ற சிறிய களத்தை வைத்துக் கடல் அளவு கேள்விகளை எழுப்புகிறார், இயக்குநர். அதிகாரம், அரசு அதிகாரியான நயன்தாராவிடம் கேள்வி கேட்கிறது. அப்பாவி மக்கள், அதிகாரத்திடம் தங்களுடைய உரிமைக்காக, உயிருக்காக கேள்வி கேட்கிறார்கள். அரசு அதிகாரியான நயன்தாரா, சக அதிகாரிகளிடம் அதிகாரத்தை மீறிச் செயல்படுவதைக் குறித்து கேள்விகளைக் கேட்கிறார். காட்சிகள் மூலம் கதை சொல்லும் உத்தி இயக்குநருக்கு நன்றாக கைவந்தபோதும், தொலைக்காட்சி விவாதம் மூலம் சொல்லும் நியாயங்கள் தேவையற்றவை. படத்தை விட்டு விலகியும், பொறுமையை சோதிப்பதாகவுமே இருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. 'களவாணி', 'வாகை சூட வா' என கிராமத்துக் களங்களில் விளையாடிப் பழக்கப்பட்ட ஓம்பிரகாஷ், இதில் டபுள் செஞ்சுரி அடிக்கிறார். ஒவ்வொருமுறையும் கேமரா, ஆழ்துளைக் கிணற்றின் இருட்டில் இறங்கும்போதும் நம்மையே கயிற்றைக் கட்டி இறக்குவதுபோல அடிவயிறு கவ்வுகிறது. நீரின்றிக் காய்ந்து வறண்ட நிலப்பகுதியையும், அந்நிலத்தின் மக்களையும் ஒருவித இருள் சூழ்ந்த ஒளியில் படமாக்கியிருக்கும் ஓம்பிரகாஷின் உழைப்பு அபாரம். ஓம்பிரகாஷின் ஒவ்வொரு ஷாட்டும் நம்மையும் படத்தில் ஒரு பங்கேற்பாளராக மாற்றியிருக்கிறது… அவ்வளவு மெனக்கெடல்.  முன் பின் எனப் பயணிக்கும் திரைக்கதை என்பதால், ரூபனின் எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறம்

அரசியல்தான் இப்படத்தின் ஆணிவேராக இருந்தாலும், ‘எமோஷனல் திரில்லர்’ ஜானரைப் புகுத்தி, அதில் பதறவைக்கும் ஒரு அழுத்தமான சம்பவத்தைச் சொல்லி கதை நகர்த்துகிறார், இயக்குநர். இதுவே, இப்படத்தை வெறும் பிரசாரப் படமாக இல்லாமல், அனைவருக்குமான படமாக மாற்றுகிறது. முதல் அரை மணிநேரம் இலக்கே இல்லாமல் பயணிக்கும் திரைக்கதையில், லேசாக நாடகத்தனம் தெரிகிறது. அதன்பின் ஒரு கு(ழி)வியில் மையம்கொள்ளும் திரைக்கதை விறுவிறு வேகம் பிடிக்கிறது. பின்னணி இசையிலும் பாடலிலும் உருக்குகிறார் ஜிப்ரான். ‘தோரணம் ஆயிரம்…’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட். அதைக் கதையோடும் காட்சி அமைப்புகளோடும் பார்க்கும்போது இன்னும் பரிதவிப்பு கூடுகிறது.

குழியில் கிடக்கும் தங்கள் குழந்தையைப் பார்த்துப் பரிதவிக்கும் பெற்றோரின் கண்ணீரை அவ்வளவு சாதாரணமாகக் கடக்க முடியவில்லை. 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தை, தன் பெற்றோரிடம் பேச முயல்கிற இடமும் நயன்தாராவுக்கும் அந்தக் குழந்தைக்குமான உரையாடலையும் கனத்த இதயத்தோடுதான் கடக்கவேண்டியிருக்கிறது. ‘ஜட்டியில கொக்கி மாட்டி இழுத்துடலாம் மேடம்’ எனத் தீயணைப்புத்துறை அதிகாரி சொல்ல, ‘வேணாம்யா… அது 10 ரூபாய்க்கு வாங்குன ஜட்டி சாமி’ எனக் கதறும் தாயைப் பார்க்கும்போது கண்ணீர் முட்டுகிறது. படம் முழுக்க பரிதவிப்புகளை உணர்வு மாறாமல் கடத்திய அளவிற்கு, வசனங்களும் பாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர, படத்தில் இருக்கும் அனைவருமே கருத்து சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் நெருடல்!

அறம்

தாங்கள் முன்பு விளையாடித் திரிந்த மைதானங்களிலேயே இப்போது நினைவுகளை அசைபோட்டபடி கட்டட வேலைகள் பார்ப்பது, க்ளைமாக்ஸில் மொத்தக் கிராமமும் உணர்ச்சிப்பெருக்கில் இருக்கும்போது, தூரத்தில் கங்குகளைக் கக்கியபடி ஏவுகணை சீறுவது என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் புள்ளிகள், படத்தில் நிறையவே இருக்கின்றன. அதிகம் பேசப்படாத அந்த இரண்டாம் உலகத்தின், புறக்கணிக்கப்படவர்களின் தேசத்தை கண் முன் நிறுத்தியதற்காகவே வாழ்த்துகளை வாரிக் குவிக்கலாம் இயக்குநர் கோபிக்கு. படம் எழுப்பும் பல கேள்விகளில் முக்கியமான கேள்வி, ‘பல கோடிகள் செலவுசெய்து ராக்கெட் அனுப்பும் இந்திய அரசு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்ன வைத்திருக்கிறது?’ இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, படம் எழுப்பிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் வேண்டும் என்பதால், இந்த ‘அறம்’ சமூகத்தின் தேவையாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!