24 மாதங்களில் முதல்வராவது எப்படி. கெஜ்ரிவால் படம் எப்படி?

கெஜ்ரிவால்

இந்தியாவின் தலைநகரான டெல்லியை தேசிய கட்சிகள்தான் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஒரு புதிய கட்சி தலைநகரின் தலையெழுத்தை எப்படி மாற்றியமைத்திருக்கிறது என்பதுதான் கெஜ்ரிவால் பற்றிய An Insignificant Man படத்தின் கதை.

‘அரசியல் கட்சிகளின் அடி நாதம் ஊழல்தான்’ என்பதை முதல் ஃபிரேமிலிருந்தே அழுந்தச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஓர் அரசாங்க அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கும் கெஜ்ரிவாலின் அரசியல் போராட்டமும் டெல்லி தேர்தலும்தான் கதையின் களம். ''எங்களுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் எங்களை வர வைத்திருக்கிறார்கள்'' ''இந்தியா ஊழலுக்கு எதிரான மசோதாவைத் தாக்கல் செய்ய முடியாமல் தோல்வியடைந்துவிட்டது''... இப்படி வடக்கு அரசியலை ஒற்றை வரிகளில் சொல்லியிருக்கிறார்கள். 

புதிதாக ஒரு கட்சியை உருவாக்கும்போது, தேர்தலுக்கு முந்தைய இரண்டு வருடங்கள் அந்தக் கட்சி என்ன செய்ய வேண்டும், வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சியைக் கட்டமைப்பதற்கான அடிப்படை அம்சங்கள்... என்று இந்தப் படத்தை அரசியல் கட்சிகளுக்கான பாடத்திட்டம்போல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். 

உத்திகளை அமைப்பது மீடியாக்களை கையாள்வது என கெஜ்ரிவாலுக்கு யோகேந்திர யாதவ் கைகொடுக்க, ஆம் ஆத்மி எனும் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போராடுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு வெளியாகும், ‘ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்’ என்ற வீடியோ, பத்திரிகையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால்மீது கறுப்பு மை தெளிப்பு, ஊழல் நிறைந்த கட்சி... என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் ஆம் ஆத்மி மீதான நம்பிக்கையை மொத்தமாகச் சரியச் செய்கிறது. அதிலிருந்து கட்சி எப்படி மீள்கிறது என்பதுதான் மீதிக்கதை.

An Insignificant Man படத்தின் ட்ரெய்லர்

தேர்தல் களத்தில் மோடி, ராகுல் என தேசியக் கட்சித் தலைவர்கள் ஒருபுறம். ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என சவால்விடும் ஷீலா தீட்ஷித் மறுபுறம். இவர்களுக்கு இடையில், இரண்டே தேர்தல் வாக்குறுதிகளை நம்பி களமிறங்குகிறார் கெஜ்ரிவால். 6-10 இடங்களை ஆம் ஆத்மி பிடிக்கலாம் என்று தேர்தல் கணிப்புகள் வெளியாகிறது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 28 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. 

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் காட்சிகளில் கெஜ்ரிவால் 2556 வாக்குகள் முன்னிலை எனத் தொடங்கி, 15000, 22000 வாக்குகள் என நீள்வது, பரபரப்பான திரைக்கதை அமைந்த கமர்ஷியல் சினிமாவைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை தருகிறது. 

ஆம் ஆத்மியின் சாதனைகளையும் அதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளையும், கெஜ்ரிவாலின் தன்னம்பிக்கையையும் நேர்த்தியாகக் காட்டிய இயக்குநர், அண்ணா ஹசாரேவை ஒரே ஒரு ராம்லீலா போராட்டக் காட்சியில் காட்டியது, யோகேந்திர யாதவ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கியது, ஆட்சி கலைப்பு போன்ற நெகட்டிவ் விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் சப் டைட்டிலோடு நிறுத்திக்கொண்டது ஏன் என்று தெரியவில்லை. 

ஒட்டுமொத்தமாக An Insignificant Man படம் மாற்று அரசியல் சாத்தியம் அதற்கு எப்படி ஒரு கட்சி தயாராக வேண்டும் எனச் சொல்லும் பாலபாடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!