Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுபட்ஜெட் படங்கள் செய்யும் தவறுகளை வீரையனும் செய்கிறானா..? - 'வீரையன்' விமர்சனம்

Chennai: 

பாரதிராஜா காலத்திலிருந்தே கிராமத்துக் கதையை மண்வாசனையோடு முதல் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை கோலிவுட்டின் பெரும்பான்மை உதவி இயக்குநர்களுக்கு உண்டு. அந்தவகையில் தஞ்சை மண்ணையும் மக்களையும் மையப்படுத்தி 'வீரையன்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் பரீத். அந்த முயற்சி எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது?

வீரையன்

தன் சொத்துகளை எல்லாம் இழந்து தம்பிகளைப் படிக்க வைக்கிறார் 'வீரையன்' ஆடுகளம் நரேன். படித்தத் திமிரில் அண்ணனை மதிக்காமல் தம்பிகள் முறைக்க, 'உங்களைவிட பெரியாளா என் பையனை மாத்திக் காட்டுறேன்டா' எனச் சவால்விட்டு பையனைப் படிக்க வைக்கிறார். இன்னொருபுறம் ஊருக்குள் சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்து அடிவாங்கித் திரிகிற இனிகோ பிரபாகர், 'கயல்' வின்சென்ட், ப்ரீத்திஷா கூட்டணி. அப்படி அடிப்பவர்களில் வேல.ராமமூர்த்தியின் வீட்டு டிரைவரும் ஒருவர். பதிலுக்குப் பழிவாங்க அந்த டிரைவரும் ஊர்ப்பெரியவரான வேல.ராமமூர்த்தியின் மகளும் ஓடிப்போக இருக்கும் விஷயத்தைச் சபையில் சொல்லிவிடுகிறார்கள் இந்த மூவரும். அவமானத்தில் வேல.ராமமூர்த்தியின் மகள் தூக்கில் தொங்க, டிரைவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது. இதற்கு நடுவே இனிகோ பிரபாகர் அண்ட் கோவால் நரேனின் மகன் படிப்பும் தடைபடுகிறது. இதனால் நரேன் குடும்பத்துக்கு என்னாகிறது... இனிகோ குழுவினர் தங்கள் தவறுகளைச் சரிசெய்ய என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

வீரையன்

கதையை சிம்பிளாகச் சொல்லிவிட முடிகிறது இல்லையா. ஆனால், இதுதான் கதை என்பதைப் புரிந்துகொள்ள நான்கைந்து குரூப் டிஸ்கஷன்கள் நடத்த வேண்டியிருக்கின்றன. அந்த அளவுக்கு திரைக்கதையைக் குழப்பியடித்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான பரீத். கதையின் நாயகனாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இனிகோ பிரபாகருக்கு, அதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துகொடுத்திருக்கும் படம் இது. அவருடைய முகச் சாயலுக்கு கிராமத்துக் கதைகள் பொருந்துகிறதுதான். அவரும் முடிந்த அளவுக்குப் படத்தைத் தாங்கி நிற்க உழைத்திருக்கிறார். ஆனால், அதுமட்டுமே பத்தாதே ப்ரோ! வீ வான்ட் மோர் ரியாக்‌ஷன்ஸ்! 'கல்வி மட்டும்தான் ஒருவனை முன்னேற்றும்' கான்செஃப்டில் இருக்கும் அப்பாவாக நரேன், மகனின் படிப்புக்காக நிறைய உழைப்பதும், ஊர் பெருசுகளுக்கு டீ கொடுத்து, மகனின் பெருமையைப் பேசச்சொல்லிக் கேட்பது எனத் தனி டிராக்கில் ஸ்கோர் செய்கிறார். 'கயல்' படத்தில் லைக்ஸ் குவித்த வின்சென்ட் இதில் வழக்கமான நண்பனாக வந்து போகிறார். திருநங்கை பிரீத்திஷா ஹைடெசிபலில் பேசியே கவனம் ஈர்க்கிறார்.

'ஆடுகளம்' நரேன், வேல.ராமமூர்த்தி போன்ற வெயிட்டான நடிகர்கள் இருந்தும் கதையில் கனம் இல்லாததால் அவர்களும் வேறுவழியில்லாமல் கொடுத்ததை செய்துவிட்டுப் போகிறார்கள். பார்ப்பதற்குப் பாந்தமாக இருக்கும் ஹீரோயின் ஷைனிக்கும் திரையில் பெரிதாக வேலையில்லை. அருணகிரியின் இசையில் பாடல்களெல்லாம் எங்கேயோ கேட்டவை போலவே இருக்கின்றன. எடிட்டர் ராஜா முகமதுவின் கத்திரிகள் ஓவர்டைம் பார்த்திருப்பதால் நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குகின்றன. கிளைகளாக ஆங்காங்கே தொங்கும் திரைக்கதையில், 'பூட்டு திருட்டு' எபிசோட் தனி ரசனையைக் கொடுக்கிறது. ஆனால், திரைக்கதையில் சீரியஸான காட்சிகளுக்கும் காமெடிக் காட்சிகளுக்கும் வித்தியாசம் காட்டுவதில் மெனக்கெடல் இல்லாதது, உணர்வுகளைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தத் தவறியது போன்ற குறைகளால் படம் திக்குதெரியாமல் சுற்றுவதால், சில நல்ல காட்சிகளையும் 'ஜஸ்ட் லைக் தட்'டாகக் கடந்துபோகவேண்டிய கட்டாயம் வருகிறது. 

வீரையன்

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் முருகேஷாவின் ஒளிப்பதிவு. ஓப்பனிங் காட்சியில் கிராமத்துத் தெய்வம் 'வீரையன்' கோயிலில் விரியும் அவரின் கேமராக் கண்கள் வஞ்சகம் இல்லாமல் பட இறுதிவரையிலும் கிராமத்து அழகை அள்ளி அடைக்கிறது. கிராமத்தின் இயல்பான லைட்டிங்கையும் சிதிலமடைந்த கட்டடங்களையும் அவ்வளவு அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆறுதலாக ஒளிப்பதிவு மட்டுமே இறுதிவரை நம்மை இறுக்கிப்பிடித்து உட்காரவைக்கிறது. 

தவிர, திரைக்கதை இலக்கே இல்லாமல் எகிறிக் குதிப்பதால் யார் வில்லன் எனக் கணிக்கவே முடியாது. 'என்னைப் பாத்துக்குற உன்னை, நான் பாத்துக்கமாட்டேனா?' - வாட்ஸ் அப் குட்மார்னிங் மெசேஜ்போல இருக்கும் இந்த வசனம், காதலர்கள் உரையாடிக்கொள்வது. இந்தமாதிரியான வசனங்களாலேயே காதல் எபிஸோடிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி அநியாயத்துக்கு நாடகத்தன்மை தெரிகிறது. 

வீரையன்

நான்கைந்து கதைகள், அவை வந்து ஒன்றிணையும் மையப்புள்ளி, க்ளைமாக்ஸ் டுவிஸ்ட் என யோசிக்கும்போது கச்சிதமான கிராமத்து கமர்ஷியலாகத்தான் யோசித்திருக்கிறார் இயக்குநர். 'நல்ல கதை, சுமாரான அல்லது மோசமான மேக்கிங்' என்பதுதான் பெரும்பாலான சிறுபட்ஜெட் படங்களில் இருக்கும் முக்கியமான பிரச்னை. அது இந்தப் படத்திலும் தொடர்வதால், 'வீரையனோடு' ஒன்றவே முடியாமல் போகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்