டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம்

உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி.

ரிச்சி

ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை யாருடைய வெர்ஷன் என்பதில் குழப்பம் வருகிறது. அதோடு கதையும் போகுது...போகுது... போய்க்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் படம் ஒன்றேமுக்கால் மணிநேரம்தான். ஆனாலும் பல மணிநேரங்கள் ஓடுகிற ஃபீல்.

`உளிடவரு கண்டன்டே’ படத்தின் சிறப்பே கர்நாடக மாநிலத்தின் கடற்கரை கிராமத்தின் கலாசாரத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்ததுதான். திரைமொழியிலும் பாத்திரங்களின் நடிப்பிலும் கன்னட சினிமாவின் பெஞ்ச் மார்க் சினிமாவாக அது மாறியிருந்தது. ஆனால், தமிழில் அனைத்தும் மிஸ்ஸிங். தூத்துக்குடி என்ற லேண்ட்ஸ்கேப்பைக்கூட `வாலே போலே' போன்ற சொற்களால் மட்டுமே உணர முடிகிறது.

ரிச்சி

கருப்புச் சட்டை, தாடி, போலீஸ் பெல்ட், துப்பாக்கி என அதட்டலாக படத்தில் புது லுக் கொடுத்திருக்கிறார் நிவின்.  ஆனால், அவருக்குப் பல இடங்களில் லிப்சின்க் இல்லாமல் இருப்பது. சில இடங்களில் அவர் வெற்றிலை குதப்ப, பின்னணியில் வாய்ஸ் கேட்பது, மலையாளம் கலந்து பேசுவது, தேவையில்லாத பில்டப்... என ரிச்சியை வெச்சி செய்திருக்கிறார்கள். அதுவும் நிவின் ஒரு டயலாக்கை பேசி முடிப்பதற்குள் ஓடிப்போய் பாப் கார்னே வாங்கிவந்துவிடலாம் (அப்போவும் முடிஞ்சுருக்காது என்பது வேறு விஷயம் ). அவ்வளவு இழுத்த்த்த்து பேசுகிறார்.

அலட்டல் இல்லாத எதிர்நாயகனாக நடித்திருக்கும் நிவின் பாலிக்கு முதல் பாதியில் மூன்று ஓப்பனிங் சீன்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்றில் ரஜினி,கமல், மம்முட்டி பாடலுக்குக் குத்தாட்டம்கூட போடுகிறார். முதல் பாதியில் ஆளாளுக்கு நிவின்பாலியின் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லிச்சொல்லி பில்டப் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், காட்சியாக எதுவுமே கன்வெர்ட் ஆகவில்லை! அதனாலேயே ரிச்சி மீது நமக்கு வரவேண்டிய ஈர்ப்பு வரவில்லை. ‘நேரம்’ படத்தின் மூலம் நிவின் பாலி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தாலும் ‘ரிச்சி’தான் அவரது நேரடி தமிழ்ப்படம். ‘பிரேமம்’ படத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நிவினுக்கு இருக்கும் க்ரேஸை, இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. 

ரிச்சி

படத்தில் நிவின் பாலி கேரக்டரைத் தவிர ஷ்ரத்தா, நட்டி, குமரவேல், பிரகாஷ்ராஜ், ஆடுகளம்  முருகதாஸ், துளசி, லட்சுமி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, ரிச்சியின் பால்ய நண்பனாக வரும் ரகு, மதுரைப் பையனாக வரும் 'டெமோகரஸி' என நடித்தவர்களின் பட்டியல் நீளம். நட்டியின் பாத்திரமும் அதன் பின்னணியும் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரகாஷ்ராஜ் ஒரே முகபாவனையோடு படம் முழுக்க ஆசீர்வாதம் பண்ணிக்கொண்டே இருக்கிறார். அவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் குமரவேல் வழக்கம்போல் அபாரமாக நடித்திருக்கிறார். ‘லட்சுமி’ குறும்பட லட்சுமி பிரியாவுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. கடலில் எது கிடைத்தாலும் தனக்குப் பாதி வேண்டும் என தாடிவைத்த டீசன்ட் வில்லனாக வருகிறார் ஜி.கே.ரெட்டி. 

விதவிதமான கதாபாத்திரங்களைப் பிடித்தவர்கள் அவர்களுக்கான பின்னணியை இன்னும் ஆழமாக உருவாக்கியிருக்கலாம். அதனாலேயே யாருடைய வேதனையும் மனதில் ஒட்டவில்லை. ஷ்ரத்தா துடிப்பான பத்திரிகையாளராக இரண்டு வசனங்கள் பேசுகிறார். மற்ற நேரங்களில் அவருடைய பின்னணி குரல் ஆங்காங்கே ஒலிக்கிறது. கடைசியில் கருத்துச்சொல்லி படத்தை முடிக்க உதவி இருக்கிறார். ரிச்சியின் நண்பன் ரகுவின் கதை ஏனோதானோ என்று படமாக்கப்பட்டிருப்பதால் அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு வரவேண்டிய பரிதாப உணர்ச்சியோ அல்லது அன்போ வரவில்லை. 

ரிச்சி

படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் கதையும், அதில் சொல்லப்படும் பயம், நட்பு போன்ற விஷயங்களை வைத்தே கதையை நகர்த்தியிருப்பது; இயக்குநர்கள் கை ரிட்சி, டொரென்டினோ படங்கள் போல் படத்தில் வரும் ஆரம்பகட்ட ஃபிரேம்கள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் படத்தின் கேமராமேன் பாண்டிகுமார் , எடிட்டர் அதுல் விஜய் நிறையவே பாராட்டப்படவேண்டியவர்கள். டெக்னிக்கலாக சிறப்பாகவே இருக்கிறது ரிச்சி.  ஆங்காங்கே வரும் சில க்யூட்டான வசனங்களில் ராஜ்மோகனும், இயக்குநர் கவுதமும் ஈர்க்கிறார்கள்.

மணப்பாடு என்கிற கிராமத்துப் பெயரை மட்டும்தான் காட்டுகிறார்கள். கடைசிவரை அந்த கிராமத்தையோ, அந்த மக்களையோ, அவர்கள் வாழ்க்கையையோ கொஞ்சம்கூட காட்டவில்லை. அதனாலேயே கதை நடக்கும் இடம் அந்நியமாகிவிடுகிறது. கதை நடக்கும் காலம், ஏன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பதற்கும் காரணமே இல்லை. 

ஆரம்பத்தில் ரிச்சி யார் தெரியுமா? என வாய்ஸ் ஓவர் தருபவர்களில் ஒருவராய் வரும் குமரவேலை முதல் காட்சியிலேயே காட்டிவிட்டு, இறுதியில் அவருக்கு என்ன ஆச்சோ ஏன்று ஏற்படுத்த நினைத்த பதைபதைப்பு பார்வையாளனை கவர மறுக்கிறது. படத்தின் முக்கியத் திருப்பமாக நண்பனை நேருக்கு நேராக ரிச்சி சந்திக்கும் சீன் இருந்திருக்க வேண்டும். 'டேஷ் டேஷ் டேஷ் டெஷ் ' எனக் கதை சொல்லி கடுப்பேற்றி கடந்து போகிறார் நிவின் பாலி.

ரிச்சி

"`எந்தக் கதைக்கும் ஆரம்பமோ முடிவோ இல்ல. நாம எங்க நிப்பாட்டுறோமோ அங்கதான் முடிவுனு நெனச்சுக்குறோம்'- இந்த க்ளைமாக்ஸ் டயலாக் மாதிரிதான் படமும் எங்கே ஆரம்பிக்கிறது, யார் பார்வையில் கதை பயணமாகிறது என்ற தெளிவே இல்லாமல் போகிறது. 

ஆங்கிலம், மலையாளத்தமிழ் எனப் பேசும் நிவின் பாலிக்கு, அவர் எதிர்பார்த்த தமிழ் சினிமாவுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு நிச்சயம் ‘ரிச்சி ' இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!