Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ச்... எத்தனை ஹீரோவை காப்பாற்றியிருப்பார் சந்தானம்? - சக்க போடு போடு ராஜா விமர்சனம்

வருடத்துக்கு ஒரு படம் என்ற இன்ஸ்டால்மென்டில், ஹீரோ சந்தானத்தின் இந்த வருட ரிலீஸ் `சக்க போடு போடு ராஜா'. காதலில் ஜெயிக்க ஹீரோ போடும் திட்டங்களை, காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்கிறது படம். 

சந்தானம்

சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனோடு சேர்த்ததும், ஓப்பனிங் பாடல் போட்டு அறிமுகமாகிறார். “என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு, என்னை அசிங்கப்படுத்தீட்டானேடா... அவனப் புடிங்கடா" என உறுமுகிறார் தாதா சம்பத். அதனால், குடும்பத்தையும், நண்பர்களையும் தலைமறைவாக்கிவிட்டு, தானும் தலைமறைவாகிறார் சந்தானம். பதுங்கிக்கொள்ள சென்ற இடத்தில் யாழினியைப் (வைபவி) பார்த்ததும் காதல் கொள்கிறார். முதலில் சந்தானம் அலையவிட்டு, பின்பு வைபவி அலையவிட்டு ஒரு வழியாக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காதலுக்கு ஒரு பிரச்னை வருகிறது, அது என்ன, அதை சந்தானம் எப்படிச் சரி செய்கிறார், காதலர்கள் இணைந்தார்களா என்பதை சொல்கிறது படம். இதற்கிடையில் சம்பத்துக்கும் - சரத் லோகித்சவாவுக்கும் என்ன பிரச்னை, ஹீரோயின் வைபவி யார், ஒரு காமெடி படத்தை எப்படி எடுக்கக் கூடாது என்ற கிளைக் கதைகளையும் காட்டுகிறார் இயக்குநர்.

Santhanam

சந்தானம் காமெடியைத் தாண்டி வந்து ஹீரோவுக்காகத் தயாராகிவிட்டேன் என உணர்த்த பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அது எதுவுமே படத்தில் எடுபடாமல் போவதுதான் வருத்தம். முன்பு ஹீரோக்களைக் காப்பாற்ற சந்தானம் இருந்தார். இந்த ஹீரோ சந்தானத்தைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் சோகம். இதெல்லாம் அசால்ட்டு என சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார் சம்பத். கதாநாயகி வைபவி, அந்தரத்தில் மிதந்தபடி ஸ்டெப் போடுகிறார், சந்தானத்திடம் அறைவாங்கி காதல் கொள்கிறார், படம் முழுக்க அழகாய் இருக்கிறார். விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன் எனப் பல காமெடியன்கள் இருக்கிறார்கள், காமெடியைத் தவிர. 

ரோபோ ஷங்கர், சந்தானத்திடம் வந்து விசாரிக்கும் ஒரு காட்சி, சம்பத்திடம் திருமணத்துக்கான திட்டத்தை சந்தானம் சொல்லும் காட்சி இந்த இரண்டும் சிரிக்க வைக்கிறது. மொத்தமாக எண்ணிப் பார்த்தால் ஐந்து ஜோக்குகளே தேறுகின்றன. மற்றவை எல்லாம் எதற்கு என எண்ண வைக்கின்றன. சந்தானம் படத்தில் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இருப்பவை அவரது டைமிங், ரைமிங் வசனங்கள். ஆனால், அதுவும் இதில் மிஸ்ஸிங். வாட்ஸ்அப் காமெடி வீடியோக்களைப் பார்த்து அதை படத்தில் ரீக்ரியேட் செய்திருப்பதெல்லாம் அநியாயம். 

vaibhavi shandilya

காதல் தேவத தேவத தேவத தேவத தேவத தேவத தேவத தேவத என்ற பாடலை யுவன் பாடியிருந்தார் என்பது மட்டும் தெரிந்தது. மற்றபடி டைட்டில் கிரெடிட்ஸில் எஸ்டிஆர் மியூசிகல் எனத் தெரிந்தததோடு சரி, பாடல்களிலோ, பின்னணி இசையிலோ சொல்லிக் கொள்ளும்படி புதிதாக ஒன்றும் செய்யவில்லை இசையமைப்பாளர் சிம்பு. மிகவும் அலுப்பு உண்டாக்கும் படத்தை, உறுத்தாமல் ப்ளசன்டாக நமக்குக் கொடுத்து ஆறுதல் அளிக்கிறது அபிநந்தன் ஒளிப்பதிவு. படத்தின் திரைக்கதை பற்றி இயக்குநர் சேதுராமன் பெரிதாக அலட்டிக் கொள்ளாததால், துண்டு துண்டாக நகர்கிறது படத்தின் கதை. மிகவும் சுமாரன சீரியல் பார்த்த உணர்வை தந்து அயர்ச்சியும் சேர்க்கிறது. சந்தானத்தின் மீசை, தாடியை செதுக்குவதில் காட்டிய அக்கறையில் கொஞ்சமாவது திரைக்கதையைச் செதுக்க செலவிட்டிருக்கிலாம். 

 

 

தாதாவின் தங்கையைக் காதலித்து கைபிடிக்கும் `தீ' (தமிழில் `மிரட்டல்'), முரட்டுத்தனமான காதலியின் குடும்பத்தை திருத்த குடும்பத்தையே இணைத்து நாடகமாடும் ஹீரோ `ரெடி' (தமிழில் `உத்தமபுத்திரன்'), தான் காதலிக்கும் பெண்ணை அடைய நினைக்கும் வில்லனை திருத்தும் `கந்திரேகா', தன் ஊருக்காக வில்லன் குடும்பத்துக்குள் இணைந்து அவர்களை திருத்தும் `மிர்ச்சி' இப்படி இன்னும் பல தெலுங்குப் படங்களில் அவர்களே அடித்து துவைத்து துவம்சம் செய்த ஃபார்முலாதான் இது. அவர்களே, சின்ன பட்ஜெட்டில் `அர்ஜுன் ரெட்டி' பிரம்மாண்டத்தில் `பாகுபலி' என வேற மாதிரி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் பாஸ். ஆனால், அதை எல்லாம் லெஃப்ட் காலில் எட்டி உதைத்துவிட்டு `லௌக்யம்' படத்தை ரீமேக்கி இருக்கிறீர்கள். அது உங்களின் விருப்பம் அல்லது வசதி. ஆனால், பல முறை சக்கையாகப் பிழிந்து தூக்கிப் போட்ட கதையுள்ள ஒரு படத்தை ரீமேக் செய்தால், அதை எப்படிப் புதிதாகக் கொடுப்பது என்பதையும் யோசித்திருக்க வேண்டும்தானே. கொஞ்சம் புதுசா யோசிங்க இயக்குநர்களே!

சந்தானம், உங்கள் திறமைமீது, ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை மதிக்கும்படியான படங்களை வழங்குங்கள் ப்ளீஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்