Published:Updated:

"வீடு, பொம்மை, கதவு... வழக்கமான பேய்படம்தான். ஆனா..?!" - 'பலூன்' விமர்சனம்

Vikatan
"வீடு, பொம்மை, கதவு... வழக்கமான பேய்படம்தான். ஆனா..?!" - 'பலூன்' விமர்சனம்
"வீடு, பொம்மை, கதவு... வழக்கமான பேய்படம்தான். ஆனா..?!" - 'பலூன்' விமர்சனம்

ஹாரர் படம் எடுப்பதற்காகக் கதை தேடி வெளியூர் செல்லும் இயக்குநர் ஒருவர், அங்கு உண்மையிலே பேய்களைச் சந்திக்கிறார். அதன் பின் என்ன ஆனது, பேய்களுக்கும் இயக்குநருக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற ஒன்லைனை ஊதிப் பெரிதாக்கினால், அதுதான்  `பலூன்' .

இயக்குநர் ஜீவானந்தம் எனும் கதாபாத்திரத்தில் ஜெய். பெயரிலேயே `கத்தி' பட ரெஃபரென்ஸ். போதாக்குறைக்கு விஜய் மாதிரியே கம்பி ஒன்றையும் தோளில் தூக்கித்திரிகிறார். சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நடிப்பில் நல்ல மார்க் வாங்குபவர், எமோஷனல் காட்சிகளில் ஜஸ்ட் பாஸ் ஆகவே சிரமப்படுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் லுக், செம மாஸ். நாயகி அஞ்சலி, அளவாகவே நடித்திருக்கிறார். வழக்கமான அஞ்சலி மிஸ்ஸிங். படத்தில் பேய் மிரட்டியதைவிட, யோகிபாபுதான் காமெடியில் ஸ்கோர் செய்து மிரட்டியிருக்கிறார். எந்த வசனமும் காட்சியும் யோகிபாபுவின் கவுன்டர் இல்லாமல் முடிவதில்லை. கிடைத்த கேப்பில் கவுன்டர் கிடா வெட்டி அசத்தியிருக்கிறார், யோகிபாபு. முதற்பாதியின் சுவாரஸ்யத்திற்கு முக்கால்வாசிப் பொறுப்பு, இவர்தான். ஜெய்யின் நண்பராக வரும் கார்த்திக் யோகி, முன்கதையில் ஜெய்க்கு ஜோடியாக வரும் ஜனனி ஐயர், `பப்பு'வாக வரும் சிறுவன் என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். வில்லைனைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நிறைய காமெடி, நிறைய பயம் எனப் படத்தின் முதற்பாதி நிறைவைத் தருகிறது. ஒரு காட்சியில் குபீரென சிரிக்கவைத்தால், அடுத்த காட்சியில் பயமுறுத்தி அலறவைக்கிறார்கள். முதற்பாதியில் `ராக்கெட் பலூன்' போன்று பரபரவென நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் காற்று இறங்கும் பலூனாய் புஸ்ஸாகிறது. காரணம், ஜெய்யின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் எந்த உயிரோட்டமும் இல்லாததால், அவை நம்மீது தாக்கம் செலுத்தாமலே கடந்துவிடுகின்றன. அதேபோல், அழுத்தம், யதார்த்தம் இரண்டுமேயில்லாத படத்தின் வசனங்கள், பலூன் மீது குத்தபட்ட குண்டூசி. வசனங்களிலும் வட்டாரமொழியிலும் நிறைய கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குநரே. பாழடைந்த வீடு, பயமுறுத்தும் கனவு, தலையைத் திருப்பும் பொம்மை, தானாக மூடும் கதவு என ஆண்டு ஆண்டு காலமாக பேய்படங்களில் வரும் அதே மேட்டர்தான். ஆனாலும், முதற்பாதி முழுக்க சுவாரஸ்யமாகவே நகர்கிறது, பாராட்டுகள்!. மற்ற சினிமாக்களின் ரெஃபரென்ஸ்களைத் தவிர்த்திருக்கலாம். அவை பார்வையாளர்களை படத்திலிருந்து அந்நியமாக்கியதைத் தவிர, வேறொன்றும் செய்யவில்லை பாஸ். அந்தக் கடைசி ஐந்து நிமிட ட்விஸ்டும் தேவைதானா... எனக் கேட்கத் தோன்றுகிறது.

இந்த `பலூனி'ன் ஹீலியம் வாயு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். முதல்பாதி முழுவதும் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார். பேயைவிட யுவனின் இசையைக் கேட்கும்போதுதான் பயந்து வருகிறது. சவுண்ட் டிசைனிங்கும் தாறுமாறு. ஆர்.சரவணின் ஒளிப்பதிவு படத்திற்கு செம கச்சிதம். திகில் காட்சிகளின்போது கேமரா அசைவுகள் அள்ளு தெறிக்கவைக்கிறது; லைட்டிங்கும் அட்டகாசம். பயமுறுத்தும் காட்சிகள் மெள்ள மெள்ள நகர்ந்து, நம் பயத்தை மேலும் நீட்டிக்கவைப்பதுதான் இப்படத்தின் மிகப்பெரும் பலம். அப்படியான திரைக்கதையைச் சாமர்த்தியமாக வெட்டி, ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். கலை இயக்கம், ஒப்பனை எனப் படத்தின் டெக்னிக்கல் டீம் ரொம்ப ஸ்ட்ராங்; ரொம்ப ஷார்ப். குறிப்பாக, ஆடை வடிவமைப்பு கவனிக்கவைக்கிறது. உதாரணமாக, யோகிபாபு அணிந்துவரும் கலாட்டாவான கலர்ஃபுல் டி-ஷர்ட்கள், ஃபளாஷ்பேக்கில் ஜெய் அணிந்து வரும் உடைகள் ஆகச் சிறப்பு. 

முதற்பாதி முழுக்க ஹாரர்-காமெடியாகப் பயணிக்கும் படம், இரண்டாம்பாதியில் மசாலா-ஹாரர் படமாக மாறும் இடத்தில் சறுக்குகிறது. எல்லா பலூனும் எப்படியும் உடைந்துவிடும். அதைப் போலவேதான் படமும். ஆனாலும், பலூன் கையிலிருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை, இந்த `பலூன்' நிச்சயம் தரும். 

Vikatan