``ஹேய்... குழந்தைகளுக்காகவே ஒரு பேய்படம்..!’’ - 'சங்குசக்கரம்' விமர்சனம்

பெண்கள், குடும்பங்கள், ரசிகர்கள்... இப்படித் தனித்தனி ஆடியன்ஸ் குழுவை குறிவைத்து தமிழ் சினிமாவில் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், குழந்தைகளுக்கான படங்கள் மட்டும் இராம.நாராயணன் காலத்திற்குப் பின் வரவேயில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் குழந்தைகளுக்கான படமாக வெளியாகியிருக்கும் 'சங்குசக்கரம்' எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறதா?

சென்னையில் விளையாடுவதற்கான சரியான இடமில்லாமல் அலைகிறது குழந்தைகள் கும்பல் ஒன்று. அந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஒரு வயதானவர், 'பக்கத்துல ஒரு பெரிய பங்களா இருக்கு. அங்கே போய் விளையாடுங்க' என அவர்களை அனுப்பி வைக்கிறார். அது அந்த ஏரியாவையே கதிகலக்கும் பேய் பங்களா. இந்தப் பேய் பின்னணி அறியாத குழந்தைகள் மொத்தமாக அங்கு படையெடுக்கிறார்கள். மறுபக்கம் 500 கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தமான சிறுவனை அந்தப் பேய் பங்களாவில் வைத்து கொல்லத் திட்டமிடுகிறார்கள் அவனின் கார்டியன்கள் இருவர். இதுதவிர, அந்தப் பங்களாவை இடித்துவிட்டு ஃப்ளாட் போட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் திட்டத்துடன் அந்தப் பேய்களை விரட்ட பேயோட்டிகளை அனுப்பிவைக்கிறார் ரியல் எஸ்டேட் தாதா ஒருவர். இப்படி இந்த மொத்தக் கூட்டமும் பங்களாவுக்குள் சிக்கி, பிறகு அங்கிருந்து தப்பிக்க ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் கதை.

சங்குசக்கரம்

ஓர் இருளடர்ந்த பங்களா, அதனுள் மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள், தப்பினார்களா, இல்லையா என்று காலங்காலமாக தட்டி எடுக்கப்பட்ட கமர்ஷியல் வடைதான். ஆனால், குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் வித்தியாச டேஸ்ட் கிடைக்கிறது. குழந்தைகள் உலகில் இயல்பாக நடக்கும் விஷயங்களைப் பதிவு செய்ததில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், சில காட்சிகளில் அவர்கள் பேசும் வசனங்கள் வயதுக்கு மீறியவையாக துருத்தித் தெரிகின்றன. ஆங்கிலத்தை ஸ்லோமோஷனில் பேசி சிரிக்கவைக்கும் கொலைகார அங்கிள், அவர் கூடவே வரும் ஜோக்கர் கையாள், குழந்தைகளைக் கொண்டாடும் குட்டிப்பேய் என ஆங்காங்கே வாண்டுகள் ரசிக்கும் போர்ஷன்கள் இருக்கின்றன.

படத்தின் மெயின் ரோலில் நடித்திருக்கும்  ஸ்டன்ட் டைரக்டர் திலீப் சுப்பராயன் தனக்கு இயல்பாக நடிக்க வரும் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஆனால் இவரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரிக்க வைத்தாலும், போகப்போக சலிப்பை ஏற்படுத்துகிறது. எந்தவித திருப்பங்களும் இல்லாத திரைக்கதையில் அவர் மட்டும் என்னதான் செய்துவிடுவார் பாவம். ஷபிரின் பின்னணி இசை வழக்கமான பேய்பட பாணியில் இல்லாமல் வித்தியாச உணர்வைத் தருகிறது. முக்கியமாக க்ளைமாக்ஸில் வரும் ஃப்யூஷனுக்கு குழந்தைகள் சீட்டிலிருந்து எகிறிக் குதிக்கிறார்கள். பேய்களுக்கென ஒரு ஃப்ளாஷ்பேக் வைக்காமல் குழந்தைகளை மையப்படுத்தியே கதை நகர்த்தியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

SanguSakkaram Review

படத்தின் மிகப்பெரிய மைனஸ் வசனங்கள். குழந்தைகள் படம்தான். அதற்காக மனப்பாடம் செய்யும் ரைம்ஸ் போலவா எல்லா கேரக்டர்களும் வசனம் பேச வேண்டும்? 'நான் பிரிஸ்க்கா இருக்குறதே ரிஸ்க் எடுக்கத்தான்', 'ஒருதடவை பண்ணாதான் யோசனை, அடுத்த தடவை அது குழப்பம்', 'இங்கே சாக பயப்படலை, வாழுறதுக்குத்தான் பயப்படுறேன்' எனப் படம் நெடுக பன்ச் பேசி நம்மைச் சோதிக்கிறார்கள். குழந்தைகளுக்கான படத்தில் ஏன் பாஸ் பலாத்கார காட்சிகளும் அது பற்றிய வசனங்களும்?

படத்தில் போகிறபோக்கில் நிறைய கருத்துகளும் சொல்லப்படுகின்றன. குழந்தைகளுக்குப் புரியும் வகையில் இருப்பதால் அவற்றை அவர்களும் ரசிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். எக்கச்சக்கமாக இருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகள், தொய்வடைந்த திரைக்கதை போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் 'மை டியர் குட்டிச்சாத்தான்' அளவிற்கு இந்தப் படம் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனாலும், ரத்தம் கொட்டும் வன்முறைக் காட்சிகள், இரட்டை அர்த்த காமெடிகள் ஆகியவற்றிலிருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு இந்தச் சங்கு சக்கரத்துக்கு ஒருமுறை சென்றுவரலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!