வரலாறு, அரசியல், பிரமாண்டம் ... இவற்றுக்கிடையே `அது தேவையா?' - `பத்மாவத்' விமர்சனம் #Padmaavat

பல்வேறு எதிர்ப்புகள் தடை முயற்சிகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது ‘பத்மாவத்’ திரைப்படம். 'பத்மாவத்' எனும் காவிய நூலைத் தழுவி படம் எடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. படத்தின் பொறுப்புத் துறப்பு வரிகள், ‘படம் எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் பண்பாட்டையும் மனிதர்களையும் பெயர்களையும் குறிப்பிடவில்லை’ என்கிறது. அதுவே, படத்தைக் கூடுதல் கவனத்தோடு பார்க்கச் செய்கிறது.

 பத்மாவத்

படத்தின் விமர்சனத்துக்குள் போவதற்கு முன், படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியைப் பாராட்டியே ஆகவேண்டியிருக்கிறது. தான் ஒரு ரசனைமிகு கலைஞன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம்போல அத்தனை அழகு. கலை இயக்கமும், இசையும் கைகொடுக்க, கண்கொள்ளாக் காட்சிகளாக ஒவ்வொரு காட்சியையும் இழைத்து இழைத்துப் படைத்திருக்கிறார் சஞ்சய்.

பத்மாவதி ஒரு சிங்கள இளவரசி. மனைவியின் கோபத்தின் பொருட்டு முத்துக்களுக்காக சிங்களம் செல்லும் ராஜஸ்தானின் சித்தூர் பிரதேச அரசன் ரத்தன் சிங், காட்டில் பத்மாவதியைச் சந்திக்கிறான். இருவருக்குள்ளும் காதல் உருவாக, பத்மாவதியை இரண்டாவது மனைவியாக மணந்து உடன் அழைத்துச் செல்கிறான். ஒரு சம்பவத்தில் அரண்மனை ராஜகுரு சித்தூரிலிருந்து நாடுகடத்தப்பட, பத்மாவதி ‘காரண’மாகிறாள். அரசனைக் கொன்று தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டு ஆண்டுவரும் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியினைச் சந்திக்கிறான் ராஜகுரு. பத்மாவதியையும் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தையும் பழிவாங்கும் நோக்கத்தோடு கில்ஜியிடம், ‘பத்மாவதியின் அழகைக் குறித்தும், அவள் உடனிருந்தால் இன்னும் பல ராஜ்ஜியங்களை நீ அடைய முடியும்’ எனவும் பொய் ஆருடம் சொல்கிறான் ராஜகுரு. அதை நம்பி பத்மாவதியைத் தேடி சித்தூருக்குப் படையெடுத்து வருகிறான் அலாவுதின் கில்ஜி. கில்ஜி சித்தூர் அரசனை வென்றானா? பத்மாவதியை அடைந்தானா? ராஜகுருவின் சதிச்செயல் வெற்றிபெற்றதா? என்பதைக் கலையழகும் பிரமாண்டமுமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

பத்மாவதியாக அழகின் கம்பீரம் காட்டுகிறார் தீபிகா படுகோனே. ராஜ உடைகளும் நடையும், கில்ஜி காதல் வெறிகொண்டதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. அலாவுதின் கில்ஜியாக மிரட்டும் ரன்வீர் சிங், படம் முழுவதும் வியாபித்துக் கலக்குகிறார். அதிகார மமதையையும், தீராப் பெண்ணாசையையும் சிறிய உடலசைவில்கூடக் காட்டியிருக்கும் அவரது நடிப்புக்கு விருதுகள் நிச்சயம். அதுவும் ‘கரை புரண்டோடுதே கனா’ என்ற பாடலில் ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள்... வாவ்! நிதானமான ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர், தேசம் ஒருபுறம், மனைவி பத்மாவதி மீதான பாசம் மறுபுறம் என்று உணர்ச்சிகளைக் கண்களிலேயே வரைகிறார். கில்ஜியின் மனைவி மெஹ்ருன்னிசாவாக வரும் அதிதி ராவ் உணர்வற்ற நிலைத்த பார்வையால், கண்ணீரால், மௌனத்தால் தனியே கதை சொல்கிறார்.

திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பம் எனக் கச்சிதமாக படத்தின் அடிப்படைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஓர் அரச கதைக்கான பின்னணி இசையைக் கொடுத்து படத்தின் ஆதார பலமாக நிற்கிறார், இசையமைப்பாளர் சஞ்சித் பல்ஹாரா. இயக்கம், இசை என இரண்டிலும் இந்த முறையும் அசத்தியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

Padmavat

பாலைவனம், நீண்ட கோட்டை மதிற்சுவர்கள், பெரிய அரண்மனைகள், சிங்களக் காடு, ராஜ படுக்கை அறை, போர்ப்படை அணிவகுப்பு, போர்க்களம்... எனக் கலையிலும் ஒளிப்பதிவிலும் கவனமாக அழகாக உழைத்திருக்கிறார்கள். அவ்வளவு டீட்டெய்லிங். திரையின் ஓர் ஓரத்தில் தெரியும் ஓவியத்தில்கூட நுட்பமான கலைத்தன்மை. ஒளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி, ஒவ்வொரு ஃபிரேமிலும் அத்தனை துல்லியம். ஒலிக்கலவை (Sound Mixing) படத்தில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. அரண்மனையில் அத்தனை பெண்கள் நடக்க, அவர்களின் நடை ஆகட்டும், ஷாஹித்தும் - ரன்வீரும் மோதிக்கொள்ளும் காட்சி ஆகட்டும் ஒலியின் துல்லியம் அபாரம். ஆடை வடிவமைப்பு, ஒப்பனை படத்திற்குக் கூடுதல் பலம். போர்க்களப் புழுதிக்குள் கில்ஜி நுழைவது, எதிரியின் தலைகுத்தப்பட்ட ஈட்டியோடு புழுதிக்குள்ளிருந்து வெளியே வருவது என இரண்டே ஷாட்டில் ஒரு போரைக் காட்டிய விதத்தில் எடிட்டர் மிளிர்கிறார். 3டி-க்கான விஷயங்கள் படத்தில் மிகக்குறைவே!

படத்தில், போருக்குப் புறப்படும் ரத்தன் சிங்குக்குத் தன் கையால் தலைப்பாகை அணிவித்து, ஊசிநூலால் அதைத் தைத்துக்கொண்டிருப்பாள் பத்மாவதி. கிட்டத்தட்ட அதே பாசத்தோடு உழைத்திருக்கிறார்கள், காஸ்ட்யூம் டிசைனர்கள். சிங்களம், மேவாட், டெல்லி என்று அனைத்து வகை உடையலரங்காரமும் தனித்துத் தெரிகிறது. தீபிகாவின் உடைகள், மற்ற அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல இருக்கிறது. 

கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, ‘சுல்தான் ஆவதற்கு நோக்கமும், கழுத்தும் வலிமையாக இருக்கவேண்டும்’ என்று கில்ஜி சொல்கிற இடம், தனது அடிமையான மாலிக்கிடம் கையை நீட்டி, ‘என் உள்ளங்கைகளைப் பார் மாலிக்... இதில் காதலுக்கான ரேகை இல்லையா’ என்று கேட்கிற இடம் எனப் பல முக்கியக் காட்சிகளில் கச்சிதமான வசனம். 

படத்தில், 'அழகு என்பது என்ன' என்ற கேள்விக்கு, 'அது பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்தது' என்ற வசனம் வரும். அதேபோல், இந்தப் படம் என்னமாதிரியான அரசியலைப் பேசுகிறது என்பதும் பார்வையாளர்களைப் பொறுத்ததே. இது ஒரு வரலாற்றுப் புனைவு. ரசிகர் மனநிலையில் ஒரு சினிமாவாகப் பார்த்தால், 'பத்மாவத்' பிரமிக்க வைக்கும் படைப்பு. அதேவேளை, படத்தில் பேசப்பட்டிருப்பதை நிகழ்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், 'இது இப்போது தேவைதானா' என்பதோடு, பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. வரலாற்றுப் புனைவுதான் என்றாலும், சில யதார்த்த மீறல்களும் நெருடுகின்றன. இங்கேதான், 'பத்மாவத்' விவாதத்திற்குரிய படமாக மாறுகிறது. விரிவாகப் பேசவேண்டிய விசயங்களும் நிறையவே இருக்கின்றன.

திரையில் மட்டுமே பார்த்து ரசிப்பதற்கான பிரமாண்ட, கவித்துவமான, நுட்பமான காட்சிகளைக்கொண்ட விதத்தில் ‘பத்மாவத்’ தவிர்க்க முடியாத காட்சி அனுபவம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!