வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (30/01/2018)

கடைசி தொடர்பு:19:02 (30/01/2018)

"முதல் படத்தில் சொல்லி அடித்தாரா மோகன் லால் மகன்?" - 'ஆதி' படம் எப்படி?

ஆதி

கனவுகளோடு நகரத்துக்குச் செல்லும் இளைஞன், அவன் சந்திக்கும் பிரச்னைகள், அதிலிருந்து தப்பித்தானா என்ற காலம் காலமாக உள்ள டெம்ப்ளேட் மாநகரக் கதையில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்‌ஷன் சேர்த்தால்... அதுதான். 'ஆதி'. 

தன் இசையமைப்பாளர் கனவை நிஜமாக்க பெங்களூர் செல்லும் ஆதியின் வாழ்க்கையில், அங்கு நடக்கும் ஒரு விபரீத விபத்தால் இவர் வாழ்க்கையையே தலைகீழாக மாறிவிடுகிறது. அதிலிருந்து தப்பித்தாரா, இல்லையா என்ற ஒன்லைனுடன் ஆதித்யாவாகக் களமிறங்கியிருக்கிறார் மோகன்லான் மகன் ப்ரணவ். 

எப்படியாவது இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதே ஆதியின் (பிரணவ் மோகன்லால்) கனவு. அப்பா மோகன் வர்மா (சித்திக்) அதற்கு சிவப்புக் கொடி காட்டினாலும், தனது அம்மா ரோஸி (லீனா) தயவால் தன் கனவை நிஜமாக்க இரண்டு வருடம் கால அவகாசம் கேட்டு முயற்சி செய்துகொண்டிருப்பார். இன்னொரு பக்கம் தன்னிடம் இருக்கும் பார்க்கர் (Parkour) திறமையையும் மெருகேற்றிக்கொண்டிருப்பார், ஆதி. ஆனால், இவரது குறிக்கோள் கேள்விக்குறியாய் சென்றுகொண்டிருக்க, இவரது நண்பர் நதிர் (கிருஷ்ணா சங்கர்) உதவியால் பெங்களூரில் பிரபலங்கள் அதிகம் வந்துபோகும் ஒரு கிளப்பில் பாட வாய்ப்பு வருகிறது. 

ஆதி

அங்கு யதேச்சையாக தன் பள்ளித்தோழி சஞ்சனாவை (அதிதி ரவி) சந்திக்கிறார் ஆதி. பல வருடங்கள் கழித்துப் பார்ப்பதால் மீண்டும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தன் பெர்ஃபார்மன்ஸை ஆரம்பிக்கத் தயாராகிறார் ஆதி. இவரின் மியூசிக் திறமையைப் பார்த்து ஆடியன்ஸ் ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டாடுகின்றனர். ஆடியன்ஸோடு சேர்த்து சஞ்சனாவும், ஆதியுடன் சேர்த்து ஆடிக்கொண்டிருப்பார். இது, சஞ்சனாவின் முதலாளி நாராயண ரெட்டியின் (ஜெகபதி பாபு) சொந்தக்காரரான ஜெயகிருஷ்ணனுக்கும் (சிஜு வில்ஸன்), முதலாளியின் மகன் அர்ஜுன் ரெட்டிக்கும் பிடிக்காமல் போகிறது. அதனால், ஆதியுடன் சண்டையில் ஈடுபடுகிறார்கள். 

மொட்டை மாடியில் நடக்கும் சண்டையில் ஜெயகிருஷ்ணன் ஆதியைத் தாக்குவதற்கு பதில் அர்ஜூனை தாக்கிவிட, மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து உயரிழக்கிறார் அர்ஜூன் ரெட்டி. ஜெயகிருஷ்ணன் சொத்தை அபகரிக்கவும், தான் தப்பிப்பதற்கும் அங்கு நடந்ததை ஒட்டுமொத்தமாக மாற்றிக்கூறி, ஆதியை வலையில் சிக்கவைக்கிறார். தன் மகனின் இழப்புக்குப் பழிவாங்கவும் அதேபோல் கொலை செய்யவும், ஆதியை பெங்களூர் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறார் நாராயண ரெட்டி. இந்தப் பிரச்னையிலிருந்து ஆதி விடுபட்டு, தன் குடும்பத்துடன் சேர்கிறாரா... என்பதே 'ஆதி' படத்தின் மீதிக்கதை. 

மோகன்லாலின் மகன் பிரணவ்வுக்கு இது முதல் படம். அதற்கு முன் ஜீத்து ஜோஸஃப் இயக்கிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார். தன் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரணவ். அதைவிட முக்கியம் இவரின் ஸ்டன்ட் காட்சிகள். எல்லாமே 'வாவ்' ரகம். 'ஆங் பாக்' படத்தின் டோனி ஜா அளவிற்கு ஸ்டன்ட் செய்த இவரின் முயற்சியே, மலையாள சினிமா இவரை வார்ம் வெல்கம் செய்திருக்கிறது. ப்ரணவின் குரல் அப்படியே லால் ஏட்டன்தான். ரசிகர்களிடமும் அப்லாஸ்களை அள்ளுகிறது. படத்தில் ரொமான்ஸ், கதாநாயகி போன்ற விஷயங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல், கதைக்கு மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தை ஒரு பரபரப்பு நிலையிலேயே வைத்திருக்கிறது அணில் ஜோஸஃபின் மியூசிக். படத்தின் மெயின் வில்லன் ஜெகபதி பாபுதான் என்றாலும், ஒட்டுமொத்த வில்லத்தனத்தனத்தையும் சிஜு வில்ஸனே வெளிப்படுத்துகிறார். படத்தில் இடம்பெற்ற ஜெயா (அனுஶ்ரீ), மணி அண்ணன் (மேகநாதன்), சித்தார்த் (சிஜோய் வர்கீஸ்), சரத் (ஷாராஃபுதீன்) என மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்குக் கொடுத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார்கள். மோகன் லால் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.   

 

இந்தக் காலத்தில் இவ்வளவு நவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தும், 'என் மேல எந்தத் தப்பும் இல்ல, நான் நாராயண ரெட்டியை நேராதான் பார்த்து உண்மையைச் சொல்வேன்' என்று ஹீரோ அடம்பிடிப்பது, படத்தை ஜவ்வாய்ய்ய்... இழுத்துவிட்டது. 'த்ரிஷ்யம்', 'மெமரீஸ்' போன்ற எபிக் த்ரில்லர் படங்களை இயக்கியவர், ஜீத்து ஜோஸஃப். ஆனால், இவரின் முந்தைய படங்களில் இருந்த சுவாரஸ்யம் இந்தப் படத்தில் மொத்தமும் மிஸ்ஸிங். சீட் நுணி த்ரில்லர் என எதிர்பார்த்து சென்றவர்களுக்கு, சீட்டில் ஹாய்யா சாய்ந்து தூங்கும் அளவுக்கு மெதுவாக நகர்கிறது. படத்தின் எடிட்டர் அயோப் கான் படத்தின் நீ.....ளத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். இரண்டரை மணி நேரப் படத்தை, ஐந்து மணி நேரம் பார்த்த எஃபெக்டைக் கொடுக்கிறது. பொதுவாக ஜீத்து ஜோஸஃபின் படங்கள் ஜாலியாக நகரும், பின் நடக்கும் ஒரு பிரச்னை பூகம்பம்போல் வெடிக்கும், அங்கிருந்துதான் கதையும் தொடங்கும். ஆனால், இந்தப் படத்தில் நடக்கும் பிரச்னை, பிஜிலி வெடியாகக்கூட வெடிக்காமல் அங்கேயே தொடர்பை இழந்துவிட்டது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால், படம் அது தரும் பறக்கிற சண்டைக் காட்சிகளுக்காக ஒரு டைம் பாஸ் அனுபவம் தரும். ஆனால், திரையினுள் நம்மை இழுப்பதே, த்ரிஷ்யம் இயக்குநர், மோகன்லாலின் மகன் போன்ற பெயர்கள் தானே. அந்த வகையில், படம் நம்மை ஏமாற்றிவிட்டது என்பதே உண்மை. 

படம் மொத்தத்தையும் தாங்கிப்பிடித்தது ஜோஸஃபின் இசை, பிரணவின் ஸ்டன்ட் காட்சிகள். அதற்காக வேண்டுமென்றால், ஆதியை விசிட் செய்யலாம். 
 


டிரெண்டிங் @ விகடன்