Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்ல படம் மக்களே... ஆனா, கபாலியை கலாய்ச்சது ஏன்? - 'மதுரவீரன்' விமர்சனம்

Chennai: 

சாதியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் மண்வாசனை சினிமாக்களுக்கு மத்தியில், 'இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப்போறீங்க?' என எழுந்திருக்கும் சமாதானக் குரல்தான், 'மதுரவீரன்'.

சுத்துப்பட்டு கிராமங்கள் முழுவதும் மதிக்கும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளே வேண்டாம் எனவும்,  உழைப்பவனே முதலாளி எனவும் கருத்துரை பரப்பும் கருப்புச் சட்டை போட்ட கம்யூனிஸ்ட்காரர். சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்கமுடியும் என நம்புகிறார். அவரின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை மேலும் வளர, சமுத்திரக்கனி உள்படப் பலரும் பலியாகிறார்கள். இருபது ஆண்டுகளுக்குப்பின் ஊருக்கு வரும் அவரின் மகன் சண்முகபாண்டியன், அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றவும், அவரைக் கொன்றவர்களை அடையாளம் காணவும் துடிக்கிறார். அவரின் நோக்கம் நிறைவேறியதா... என்பதுதான், மீதிக்கதை.

மதுரவீரன்

ஆறரை அடி உயர அய்யனார் சிலைபோலக் கம்பீரமாக இருக்கிறார், சண்முகபாண்டியன். சண்டைக்காட்சிகளில் எதிராளிகளைத் துவம்சம் செய்யும்போது அந்தக் கம்பீரம் இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், மற்ற நேரங்களில்... இன்னும் பல மைல் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், கதையின் கனம் இந்தக் குறைகளைப் போக்குவதால், சண்முகபாண்டியனுக்கு இந்தப் படம் ஒரு கெளரவ அடையாளம்! 

ஹீரோயினாக புதுமுகம் மீனாட்சி. பெயருக்குத் தகுந்தமாதிரி ஒரிஜினல் அழகோடு இருக்கிறார். கதையில் பெரிதாக வேலை இல்லாவிட்டாலும், கிடைக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் பிரமாதமான எக்ஸ்பிரஷன்களால் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவின் கிராமத்து முகமாக இவர் ஒரு ரவுண்டு வரக்கூடும். கம்பீர மகனுக்கு ஏற்ற கெத்துக்கார அப்பாவாக சமுத்திரக்கனி. 'வெட்டிப் போட்டாலும் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சுட்டீங்களோ?' என ஒரேவரியில் வேல.ராமமூர்த்தியை மிரட்டும் இடம் க்ளாஸ். ஆனால், எல்லாப் படங்களிலும் 'விவசாயின்னா...', ஜாதின்னா...' எனப் பிரசாரம் செய்யும் தொனியிலேயே வசனம் பேசுவதை மாற்றினால் நன்றாக இருக்கும் கனி.

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதை என முடிவு செய்துவிட்டால், உடனே வேல.ராமமூர்த்தியிடம் கால்ஷீட் வாங்கிவிடுவார்கள் போல. மனிதரும் அதற்கேற்றார்போல ஒவ்வொரு ப்ரேமிலும் உருட்டி மிரட்டுகிறார். இவருக்கு இணையாக வேட்டியை மடித்துக்கொண்டு நிற்கும் கேரக்டர் 'மைம்' கோபிக்கு. நடிப்பிலும் அப்படித்தான் நிற்கிறார். மாரிமுத்து, தேனப்பன் எனப் பெரிய தலைக்கட்டாக படத்தில் நடித்தவர்கள் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

மதுரவீரன் விமர்சனம்

சீரியஸ் திரைக்கதையில் கிச்சுகிச்சு மூட்டும் வேலையை ஏற்றிருக்கிறார்கள், பால சரவணனும் 'பனானா' பவுன்ராஜும். அதிலும் ஆண்ட பரம்பரை என இதுநாள் வரையில் பெருமையாகச் சொல்லப்பட்ட வசனங்களை எல்லாம் 'பனானா' பவுன்ராஜின் கேரக்டர் வழியே சிரிப்பாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். கிராமத்து மணம் வீசும் பாடல்களும் பின்னணி இசையும் ஓ.கே ரகம்.

கேரக்டர்களை இயக்குவதோடு, கேமரா இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் பி.ஜி முத்தையா. 'பூ', 'அவள் பெயர் தமிழரசி' என இதற்கு முன்னால் களத்துமேட்டில் கேமரா ஆட்டம் ஆடியவருக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்? ஒவ்வொரு சீனிலும் கிராமத்து வாழ்க்கையை தத்ரூபமாக கண்முன் கொண்டுவருகிறார். முக்கியமாக, சண்முகபாண்டியன் லேசாக சறுக்கும் இடங்களில் எல்லாம் அந்தக்குறை தெரியாத அளவிற்கு கேமராமேன் பி.ஜி.முத்தையா மெனக்கட்டிருக்கிறார்.

மதுரவீரன் விமர்சனம்

'மாட்டைத் தொட்டா மனுஷனை வெட்டுறான். இன்னும் எத்தனை நாளைக்குனு பார்ப்போமே' என 'மைம்' கோபி விடைப்பதாகட்டும், 'இப்ப மாட்டைப் பிடிக்கவிடுறேன். அடுத்து அவங்களைக் கோயிலுக்குள்ளேயும் கூட்டிக்கிட்டு வருவேன்' எனக் கருப்புச் சட்டை சமுத்திரக்கனி முறைப்பதாகட்டும்... பேச வந்த அரசியலை வசனங்கள் மூலம் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். க்ளைமாக்ஸில் பச்சைக்கயிறை ஹீரோ கழற்றி எறிவது, ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி மேலே ஏறி வர, மேலே இருப்பவர் கைகொடுப்பது எனப் படம் துணிந்து பேசிய விஷயங்களும் அதிகம். பெரியாரிய, மார்க்சிய ரெபரென்ஸ்களையும் அதிகம் பயன்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவை எல்லாமே மேலோட்டமான காட்சிகளாகவே கடந்து செல்கின்றன.  

படத்தில் துறுத்தல்கள் இல்லாமல் இல்லை. படத்தில் சென்னைப் பையனாக வரும் கேரக்டர் எதற்கு? தேவையே இல்லாமல் 'கபாலி' படத்தை அவ்வளவு கலாய்க்கவேண்டிய அவசியம் என்ன? அது ரஜினி மீதான விமர்சனமா இல்லை 'கபாலி' மீதான காழ்ப்பா என்பதற்கான பதிலையெல்லாம் இயக்குநர்தான் சொல்லவேண்டும். ஆனாலும், காலங்காலமாக இரு எதிர் துருவங்களில் நிற்பதாக காட்டப்படும் இரு சமுதாயங்களை விறுவிறு திரைக்கதையின் மூலம் ஒருபுள்ளியில் சமமாக நிற்கவைக்க முயற்சித்ததற்காக மதுரவீரனை மனதாரப் பாராட்டலாம்!. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்