Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

நல்லநாளுக்கு காத்திருக்காம இந்தப் படத்தைப் பார்த்துடுங்க..! - ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ விமர்சனம்

எமனுக்கு செய்த சத்தியத்தை ’எமன்’ விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா என்பதே ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ’ படத்தின் ஒன்லைன்.

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

குழந்தைகள், பெண்களுக்கு எதுவும் ஆகாமல், யாரையும் அடிக்காமல், அரசியல் பண்ணாமல் நேர் வழியில் திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக அவரது அம்மாவால் குறிபார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ‘எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையில் அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் கார்த்திக்கும் நிஹாரிக்காவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அந்த சமயத்தில் நிஹாரிக்காவை விஜய்சேதுபதி எமசிங்கபுரத்துககு கடத்திச்சென்று விடுகிறார். அவரை மீட்க கௌதம் கார்த்திக்கும் அவரின் நண்பன் டேனியலும் எமசிங்கபுரம் செல்கிறார்கள். விஜய்சேதுபதி நிஹாரிக்காவைக் கடத்திச் செல்வதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணம்,கௌதம் கார்த்திக் மீட்கச் செல்லும்போது நடைபெறும் காமெடி கலகலப்புச் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

குலுங்கக் குலுக்கச் சிரிக்கவைப்பது, அதற்கு முன்னால் லாஜிக்கைக் கழற்றி மூலையில் கடாசுவது என்ற முடிவுடன் படமெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார்.  

எமசிங்கபுரம் என்ற ஒரு பேண்டஸி கலந்த கிராமம், அவர்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள் என எல்லாமே கலகல லகலக விஷயங்கள் . விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என இரண்டு கதாநாயகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளார். லாஜிக் இல்லாத கதை என்பதால் காமெடியில் புகுந்து விளையாடியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் சூரியன், பூமி, கோள்கள், கண்டங்கள் என சையின்ஸ் ஃபிக்‌ஷல் பில்டப் கொடுத்து ஆந்திரா கிராமத்தை காட்டியது, படத்தின் இறுதியில் படக்குழுவை வைத்தே பார்ட் - 2 விஷயத்தை சொன்னது டைரக்டர் டச்.  வாழ்த்துகள் ஆறுமுககுமார்!

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

'சூதுகவ்வும்' சாயலில் ரூல்ஸ் போட்டுத் திருடும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. சிலபல கெட்டப்களில் வந்து துவம்சம் செய்திருக்கிறார். சில இடங்களில் இவர் வசனமே பேசாமல் முக பாவனைகளிலேயே சிரிக்க வைக்கிறார். பல படங்கள் பண்ணி, தனக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தாலும், இந்தப் படத்தை தனது முதல் படம் போல் இறங்கி நடித்திருக்கிறார். வெரைட்டி கெட்டப்பில் வருவது, சிச்சுவேஷனுக்கு எதிராகப் பேசும் நண்பனை டீல் செய்வது, நிஹாரிக்காவை கண்களாலேயே காதலிப்பது... என்று நிதானமாக நின்று விளையாடுகிறார் வி.சேது. உடன் நடிப்பவர்களை நடிக்கவிட்டு அவர்களும் ஸ்கோர் செய்யட்டுமே என்று அழகு பார்ப்பது சேதுபதியின் இன்னொரு பலம். கௌதம் கார்த்திக் தொடங்கி காமெடி டேனியல் வரை அனைவருக்கும் தளம் அமைத்துத் தரும் இந்தப் போக்கு அனைத்து பெரிய நடிகர்களும் பின்பற்ற வேண்டியது. வழக்கமான உடல்மொழி, டயலாக் டெலிவெரி என என நடிப்பில் வழக்கமான விஜய் சேதுபதியாகவே தெரிகிறார்.  படம் முழுக்க அவரோடு பயணிக்கும் ரமேஷ் திலக்கும், ராஜ்குமாரும் பக்கா காம்போ.

சாக்லேட் பாய் இமேஜில் கண்ணாடி போட்டுக்கொண்டு  காமெடியில் லைக் தட்டுகிறார் கெளதம் கார்த்திக். காலேஜில் ஜாலியாக லவ் பண்ணுவது, நண்பனுடன் சேர்ந்து கல்லூரி விழாவில் ஆங்கிலப்பாடல் பாடுவது, சீரியஸ் விஷயங்களில் டேக் இட் ஈஸி மோட் என 'மெளனராகம்' கார்த்திக்கின் வெர்ஷன் 2.0வாக கலக்கியிருக்கிறார். `ரங்கூன்’, `இவன் தந்திரன்’ பட வரிசையில் கெளதமிற்கு சொல்லிக்கொள்ளும் படியான படம் இது. கெளதம் கார்த்திக் அவருடைய கேரெக்டரை மிகவும் இயல்பாக செய்திருக்கிறார். ஒரு காலேஜ் பையனுக்கே உரிய படபடப்பு, அலட்சியமின்மை என அவர் கேரெக்டர் கச்சிதம்.

படம் முழுக்கவே கெளதமோடு பயணிக்கும் கதாபாத்திரம் டேனியல் ஆனி போப். இவரைப் படத்தின் மூன்றாவது நாயகன் என்றே சொல்லலாம். இவர் அடிக்கும் பன்ச், ரியாக்‌ஷன்ஸ், பாடி லாங்குவேஜ் என அனைத்திற்குமே ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ். இந்த மாதிரியான ரோல்களாகவே செலக்ட் செய்து நடித்தால் தமிழ் சினிமாவின் டாப் காமெடியன்கள் லிஸ்டில் டேனியலுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் `ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக’ கலக்கியவர், இந்தப் படத்தில் ’சூப்பர் மூஞ்சி குமாராக’ ப்ரொமேஷன் ஆகியிருக்கிறார்.

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

விஜய் சேதுபதி, கெளதம், டேனியல், ரமேஷ் திலக், ராஜ்குமார் என பல நடிகர்கள் கவனம் ஈர்க்க,  ஹீரோயினாக வரும் நிஹாரிகா மற்றும் காயத்ரியும் தன் பங்கிற்கு கவனம் ஈர்க்கிறார்கள். காயத்ரி கதாபாத்திரமும் அவர் நடிப்பும் சிறப்பு. நிஹாரிக்காவிடம் விஜய் சேதுபதி பேசும்போது விஜய் சேதுபதியை காதலோடு ரசித்துப்பார்க்கும் காய்த்ரியின் எக்ஸ்பிரஷன்ஸ் அவ்வளவு அழகு. இறுதிக்காட்சிவரை விஜய் சேதுபதிக்கு போடும் ஸ்கெட்ச் சொதப்பினாலும், 'பாவா'வுக்கு கெத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறார்.

ஆங்கில பாடல் பாடி தக்காளியால் அடிவாங்கும் காலேஜ் கல்சுரல்ஸ் காமெடி, ‘என்னடா ஜட்டியில பொம்மை’ என தெறிக்க விடும் போலீஸ் ஸ்டேஷன் காமெடி, ‘எமசிங்கபுர’த்தில் பஸ்ஸில் நடக்கும் கண்டக்டர் - போலீஸ் காமெடி என படத்தில் வெடித்து சிரிக்க பல காமெடி ப்ளாக்குகள் இருக்கின்றன. 

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையே நையாண்டியை அள்ளித் தெளித்திருக்கிறது. ஶ்ரீ சரவணனின் கேமரா, ஆர்பாட்டம் இல்லாமல் படம் பிடித்திருக்கிறது. உறுத்தாத ஒளிப்பதிவு. ஆர்ட் டைரக்டர் ஏ.கே.முத்துவின் கலைநயம், எமலிங்கபுரத்தை வெரைட்டியாகக் காட்டியிருக்கிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் தொடங்கி நாட்டாமை நாற்காலி வரை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியுள்ளார். செம ப்ரோ.

படத்தின் முதல் மைனஸாக தெரிவது ‘நீளம்’. எடிட்டர் கோவிந்தராஜ் கன்ட்ரோல் எக்ஸை (Ctrl X) அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். என்னதான் படத்தில் காமெடி ப்ளஸ் என்றாலும் அந்த காமெடி ப்ளாக்குகளில் எதை கட் செய்தாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு திரைக்கதை இருப்பது உறுத்தல். விஜய் சேதுபதி , கௌதம் கார்த்திக் என பக்காவான காஸ்டிங் , அவர்களுக்குப் பொறுத்துமான காமெடி கதாபாத்திரம் என முடிவு செய்த இயக்குநர் வசனம், திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.  ‘கண்டிப்பாக இதுக்கு சிரிப்பார்கள்’ என்ற அதீத நம்பிக்கையில் இயக்குநர் கொஞ்சம் தேங்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஃபேண்டஸி படம் என்று ஓப்பனாக சொல்லாததால் லாஜிக் மீறல்களைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம் (ஆனால் இயக்குநர் கவலைப்படவில்லை).  '2000 ரூபாய் நோட்டு எல்லாம் வேண்டாம்... எப்ப வேணாலும் செல்லாதுனு சொல்லிடுவாங்க' போன்ற வசனங்களை அதிகப்படுத்தி டபுள்மீனிங் டமாக்கா வசனங்களைக் குறைத்திருக்கலாம்.

’மதுரவீரன்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement