Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

" சில 'வீரன்'களுக்கு மெசேஜ் சொல்றான் இந்த வீரன்!" - படைவீரன் விமர்சனம்

Chennai: 

சாதியா, மனிதமா... ஒரு மனிதனுக்கு எது அவசியம் என்பதை உணர்த்த முயற்சி செய்திருக்கிறான், இந்த `படைவீரன்'.

வெட்டியாகத் திரியும் ஹீரோ விஜய் யேசுதாஸ், சாதாரணமான ஒரு காரணத்திற்காக போலீஸ் வேலைக்குச் சேர்கிறார். சில பல போராட்டங்களுக்குப் பிறகு போலீஸாக ஊருக்குத் திரும்பும் ஹீரோவுக்கு முதல் அசைன்மென்ட்டே, ஊரில் நடக்கும் சாதிக் கலவரத்தைத் தடுப்பதுதான். ஊர் மீதும், சொந்த பந்தங்கள் மீதும் ஈர்ப்போடு இருக்கும் ஹீரோ என்ன செய்தார், கலவரத்தின் முடிவு என்ன ஆனது... என்பதுதான், 'படைவீரன்' சொல்லும் பாடம். 

படைவீரன் விமர்சனம்

விஜய் யேசுதாஸுக்கு ஹீரோவாக இது முதல்படம். டைட்டில் ரோல் என்பதை உணர்ந்து, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். வெட்டி இளைஞனாக கெத்தாகச் சுற்றுவது, காதலில் உருகுவது, பிறகு கம்பீரமான போலீஸாக மிரட்டுவது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். நல்வரவு! முன்னாள் ராணுவ வீரராக பாரதிராஜா கம்பீரம். வழக்கம்போல் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். அதிலும் `சரக்கைப் போட்டு வந்து வெச்சுக்குறேன், இருங்கடா' என சைகையிலேயே சொல்லும் இடம் செம. 'அருவி' படத்தில் நிகழ்ச்சி இயக்குநராக நடித்த கவிதா பாரதி சாதாரணமாக பார்த்தாலே, பார்வையில் அத்தனை வில்லத்தனம். தமிழ் சினிமாவுக்கு புது வில்லன் நடிகர் கிடைச்சுட்டாருடோய். நாயகியாக வரும் அம்ரிதா, இரண்டாவது நாயகனாக வரும் அகில் இருவருக்கும் சிறிய கதாபாத்திரம்தான். குறையின்றி நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் நண்பர்களாக வரும் மூவரும், கிராமத்துக்குக் கதைக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். மூவருமே வில்லனாக மாறும் இடம், வெறித்தனம்.

ஒளிப்பதிவாளர் ராஜவேல் மோகனின் தெளிவான ஒளிப்பதிவு, படத்தின் ரிச்னஸ்ஸைக் கூட்டுகிறது. கதைக்குச் சம்பந்தம் இல்லாத காட்சிகளைத் தூக்கிவிடலாம் என படத்தொகுப்பாளர் நினைத்திருந்தால், முதற்பாதியில் முக்கால்வாசி காட்சிகள் கட்டிங்கில் போயிருக்கும். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டும் ஓகே ரகம்தான்.  

படைவீரன் விமர்சனம்

இரண்டு மணிநேரப் படத்தில், கிட்டதட்ட ஒண்ணேகால் மணி நேரத்திற்கு பிறகுதான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது. அதுதான் படைவீரனின் படா சைஸ் மைனஸ். வெட்டு, குத்து, காதல், கலவரம்... கதைக்களத்திற்கான பகுதிகள் அதிகம் என்றாலும், அதை நேர்த்தியாகச் சொல்வதில் இயக்குநர் தனா ரொம்பவே தவறியிருக்கிறார். இடைவேளை முடிந்து, இரண்டாம் பாதியில் முடியும் வரை ரசிகன் எதை கதையாக உருவகித்துக் கொள்வது என்ற குழப்பம் தீர்வதே இல்லை. சாதிப் பிரச்னையா, நாயகனின் காதல் பிரச்னையா... எதை நோக்கி திரைக்கதை நகர்கிறது என்ற குழப்பம் கடைசி வரை இருக்கிறது. அதுவும் இடைவேளைக்கு முன் கன்னாபின்னாவென்று எல்லாப் பக்கமும் சுற்றும் ராட்சத ரங்கராட்டினம்போல கதை ஒவ்வொரு பக்கமும் சுற்றிச்சுழன்றடித்து தலைவலியையே தருகிறது இயக்குநர் தனா.கடைசி முக்கால் மணி நேரம் திரைக்கதையில் அத்தனை விறுவிறுப்பு. அதே அளவு விறுவிறுப்பை முதற்பாதியில் சேர்த்து, திரைக்கதையையும் காட்சிக்கு காட்சி கதை நகர்வதுபோன்று `க்ரிஸ்ப்'பாக அமைத்திருந்தால் அற்புதமான படைப்பாக வந்திருப்பான் `படைவீரன்'.

சாதிக்கு எதிராகப் பல வசனங்கள் இருந்தாலும்,  படத்தின் முக்கியமான இடத்தில், "உன் அடையாளத்தை நீ பேசு. ஆனா இன்னொருத்தனை மட்டம் தட்டாதே" என பாரதிராஜா சொல்வது ஏதோ ஒருவகையில் அவர் 'சாதியை விட்டுக்கொடுக்காதே' என்கிற அர்த்தத்தையே கொடுக்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் தேனி வட்டார வழக்கிலேயே பேசி நடித்திருப்பது படத்தின் யதார்த்த தன்மைக்குக் கொஞ்சம் வலு சேர்க்கிறது. இதையெல்லாம் மீறி, 'சாதிப் பெருமை பேசாதீர்கள்; சாதி வெறியோடு அலையாதீர்கள்' எனப் படம் பேசியிருக்கும் கரு, மிக முக்கியமானது. 

படைவீரன் விமர்சனம்

ஒரேநாளில் வெளியான 'மதுரவீரன்', 'படைவீரன்' இரு படங்களுமே சாதியை விட்டு வெளியே வாருங்கள்... எனும் கருத்தை முன்வைத்திருப்பது, தமிழ்சினிமா விரும்பும் ஆரோக்கியமான போக்கு. இன்னும்சில 'வீரன்'களுக்கும் இது புரிந்தால், ஆரோக்கியமான போக்கு அப்படியே நீடிக்கும். சாதிக்கு எதிராக மல்லுக்கட்டுவதால் இந்தப் 'படைவீரன்' நிச்சயம் தேவை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்