Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

நல்ல ஒன்லைனர் மட்டும் போதுமா... வெரி ஸாரி வி.இஸட்.துரை..! - ’ஏமாலி’ விமர்சனம்

Chennai: 

ஒரு கொலை செய்யத் திட்டம் போடும்போது, உண்மையாகவே அந்த  கொலையை செய்தால் என்னென்ன மாதிரியான விசாரணைகள் நடக்கும் என்பதை முன் கூட்டியே கற்பனையாக செய்து பார்த்துவிட்டு, அதிலுள்ள குறைகளைக் களைந்தபிறகு கொலை செய்யலாம் என்கிற படு புத்திசாலித்தனமே இந்த 'ஏமாலி'. இப்படியொரு சுவாரஸ்யமான  ஒன்லைனரை எடுத்துக்கொண்ட இயக்குநர், அதே சுவாரஸ்யம் குறையாத அளவு படத்தை தந்திருக்கிறாரா, இல்லையா? பார்ப்போம்...

ஏமாலி விமர்சனம்

ஹீரோ மாலி (சாம் ஜோன்ஸ் ) , ரீத்து(Ri2)வை (அதுல்யா ரவி) 2 வருடம், ஆறு மாசம், 2 வாரம், 3 நாள், 18 மணி நேரம் , 20 நிமிசம், 32 செகண்ட் உருகி உருகி காதல் செய்கிறார்.மாலியின் உடன்பிறவா அண்ணனாக அரவிந்த் ( சமுத்திரக்கனி ).  லிவ்விங் டுகெதர் ரிலேஷின்ஷிப்பில் இருக்கிறார். மாலியும் ரீத்துவும் ஏதோ மனக்கசப்பில் பிரிய, ரீத்துவை கொலை செய்ய பிளான் செய்கிறார் மாலி. அதற்கு சமுத்திரகனியும் உதவி செய்கிறார். மாலி கொலை செய்தாரா, இல்லையா, சமுத்திரக்கனி ஏன் உதவுகிறார் போன்ற கேள்விகளுக்கு படத்தில் மூச்சு திணற, திணற பதில் சொல்லியிருக்கிறார்கள்.

வசனம் ஜெயமோகனாம். டைட்டில் கார்டு சொல்கிறது. செயற்கைத்தனத்தின் உச்சமாக இருக்கிறது வசனங்கள். அத்தனை இரட்டை அர்த்த வசனங்களையும், எழுதியது ஜெயமோகன் தானா என தெரியவில்லை. "அவ என்னை ஜட்டிய கழட்டி வீசற மாதிரி வீசிட்டா மச்சி " என பேசினால், " கழட்டி மட்டும் தான் போட்டுருக்கா, வீசல, வேணும்னா திரும்பி போட்டுக்குவாங்க " என்பதையெல்லாம் ஆறுதல் என்ற பெயரில் சாம் ஜோன்ஸுக்கு சொல்கிறார் பாலசரவணன். கொடுமை. 

நீங்கள் ஏதோவொரு காஃபி ஷாப்பில், கேக் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எதிரே அமர்ந்திருக்கும் நபர், உங்கள் வாயில் கேக் ஒட்டியிருக்கிறது என்பதை, தனது வாய்க்குள் விரல் வைத்தெல்லாம் காட்டினால் அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? அவர் தான் கதையின் நாயகன். அதையும் சரியாக புரிந்துகொண்டு துடைத்துவிட்டு நன்றி சொல்லப்போகும் இடத்தில் லிப் கிஸ் அடித்தால் அந்தப் பெண்ணின் பதில் என்னவாக இருக்கும்? ஆனால், காதல் வருகிறது. அவர் தான் படத்தின் நாயகி.

நாயகிகளாக அதுல்யா ரவி மற்றும் ரோஷிணி நடித்துள்ளனர். காதல், கடுப்பு என எல்லாவிதமான உணர்வுகளையும் தன் நடிப்பால் கொடுத்து பாஸ் மார்க் வாங்குகிறார் அதுல்யா.

ஏமாலி விமர்சனம்

வழக்கமான கிராமத்து லுக்கில் இருந்து டோட்டலாக வேற லுக்கிற்கு மாறியிருக்கிறார் சமுத்திரக்கனி. டி-ஷர்ட், ஸ்பெக்ஸ், ஸ்பைக் ஹேர் ஸ்டைல் என சிட்டி ஆளாக அவரைப் பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது. சமுத்திரக்கனி, ரோஷிணியின் லிவ்லிங் டு கெதர் வாழ்க்கையை காட்சிப்படுத்திய விதம் அழகு. இவர்களுக்கு இடையேயான அந்த அத்தியாயங்களை மட்டும் தனிப்படமாக எடுத்திருந்தாலே ஒரு நல்ல சினிமா கிடைத்திருக்கும் என்று தோன்ற வைக்கிறது படத்தின் மீதி அத்தியாயங்கள்.

படத்தில் பெண் என்கிற ஒரு கதாபாத்திரம் வந்தாலே, அதில் க்ளீவேஜ் காட்சி இருக்க வேண்டும். படத்தில் வரும் பெண்கள் எல்லாம் இதில் ஏதாவதுஒரு வகைதான். ஒருபால் ஈர்ப்பாளர் (அதுவும் காமெடி), திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்பவர், இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் டீல் செய்பவர். இவ்வளவு வன்மமாக பெண்களை இதற்கு முன்னர் காட்டிய படம் எதுவெனத் தெரியவில்லை. இது போக, ஒருவர் வந்து திரைப்படங்களில் மதுபானம், புகையிலைக்கு எதிராக வாசகம் வருவது போல்,  பெண்களோடு இருப்பது ஆண்களுக்கு கேடு விளைவிக்கும் என எழுத வேண்டும் என்றும் சொல்கிறார். 

சமபால் ஈர்ப்பாளர்களின்  உணர்வுகளை இப்போதுதான் சில காலமாக திரையில் காட்டப்படும் காட்சிகளை வைத்து பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். ஆனால், அதையும் நகைச்சுவை என்னும் பெயரில் கொச்சைப்படுத்தி, கீழ்மைப்படுத்தியிருப்பது குரூரத்தின் உச்சம். 

ஏமாலி விமர்சனம்

ஒளிப்பதிவு ரித்திஷ் கண்ணா, பிரகாஷ். ஏன் என்றே தெரியாத அளவுக்கு ஹீரோவின் கறைபடிந்த பற்கள், ஹீரோயினின் உடல் பாகங்கள் என நினைத்துப்பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் குளோசப் காட்சி வைத்திருக்கிறார்கள். ஷெர்லாக் தொலைக்காட்சி தொடர் , தேவா, ராஜா என இசை கீபோர்டிலும் Control + C செய்து வைத்திருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் சாம் டி.ராஜ்.

ஹீரோ, ஹீரோயினின் ப்ரொபோஸல் முதல் காதல் ஓகே ஆனதுவரையிலான அத்தியாயத்தை டைட்டில் கார்டில் படங்களுடன் சொன்ன விதம் அருமை. க்ரியேட்டிவிட்டி அந்த டைட்டிலோடு முடிந்துவிட்டதுதான் கொடுமை. கற்பனை போர்ஷனில் , ரீத்துவின் அம்மா சிகரெட் பிடிப்பது, ரீத்து (Ri2) என செய்தித்தாள்களில் செய்தி வெளியாவது போன்ற அம்சங்கள் ஆஹா சொல்ல வைக்கின்றன. 

முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ஆறு மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கிய வி.இஸட்.துரையிடமிருந்து இப்படி ஒரு படம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் ’ஏமாளி’க்கு ஏன் ‘ஏமாலி’ என பெயர் வைத்துள்ளார் என்பதற்கு இயக்குநர் கொடுத்த விளக்கம் ‘அதி அற்புதம்’.

எதை வேண்டுமானாலும் படமாக எடுங்கள். ஆனால், இறுதியில் ஞானோதயம் வந்துவிட்டது போல், எண்ட் கார்டுக்கு முன், கருத்தெல்லாம் போடுவது அபத்தமாக இருக்கிறது. திரையின் ஓரத்தில் புகை, மது உடலுக்கு கேடு என சொல்லிவிட்டு, படம் முழுக்க அதையே செய்துகொண்டு இருப்பது  அபத்தம். அதைவிட அபத்தம் நீங்கள் சமூகத்துக்கு சொல்ல வரும் கருத்து. அந்த சோ கால்டு தேவையே இல்லை.

‘மதுரவீரன்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

‘படைவீரன்’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement