Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்!' - 'பேட்மேன்' படம் எப்படி? #PadMan

Chennai: 

மாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும். அந்நாள்களில் அவர்கள் மற்ற நாள்களைப்போல சகஜமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்' என்ற நோக்கில், மலிவு விலை நாப்கின்களையும் அதைத் தயாரிக்க உதவும் இயந்திரத்தையும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டுபிடித்து 'பத்மஶ்ரீ' விருது வாங்கியவர், கோவையைச்  சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவருடைய  இன்ஸ்பிரேஷன் கதைதான், இந்த 'பேட்மேன்'. 

'பேட்மேன்'

தான் வசிக்கும் கிராமத்துக் கோயில்களில் உள்ள அனுமான் சிலையின் வாயில் முழு தேங்காயைப் போட்டால், அது உடைக்கப்பட்டு, அனுமாரின் கைகளிலிருந்து சில்லுகளாக வெளிவரும். இது லக்ஷ்மிகாந்த் சவுஹானின் (அக்‌ஷய் குமார்) கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இயந்திர அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவன். தனது கிராமத்தில் வசிக்கும் அனைவரிடமும் அன்பாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் வெகுளியாகவும் சித்திரிக்கப்படுகிறான். தனது மனைவிக்கு வெங்காயம் வெட்டும் குரங்கு பொம்மை செய்து தருவது, அவளுக்கென சைக்கிளில் வலிக்காத வண்ணம் சீட் தயாரித்தல்... எனத் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.

லக்ஷ்மிகாந்த் சவுஹானுக்குத் திருமணமாகி சிலநாள்களில், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டும் தன் மனைவி காயத்ரி (ராதிகா ஆப்தே) தனியே ஒதுக்கிவைக்கப்படுவதன் பின்னணிக் காரணத்தை அறிகிறான். மாதவிடாய் தீட்டாகக் கருதப்பட்டு வீட்டின் ஓரமாய் ஒதுக்கிவைத்திருக்கும் தன் மனைவியை, அவள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, அவளை வீட்டுக்குள் வந்து சகஜமாக இருக்கும்படி அழைக்கிறான். அவளோ, பெரியவர்களின் வார்த்தையை மீறி, தான் வளர்ந்த சூழலிலிருந்து மாறுபட்டு, கட்டுப்பாடுகளை உடைத்துப் புதிய பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். அத்துடன் காயத்ரி அந்நாள்களில் உபயோகிக்கும் தீட்டுத்துணியைப் பார்த்து, "நான் இந்தமாதிரியான அழுக்குத் துணியை எனது சைக்கிள் துடைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன்' என்று கூறி வருத்தப்படுகிறான். மேலும், அவளுக்குச் சுத்தமான சானிட்டரி நாப்கின்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், அதன் விலையோ அதிகம். அதனால், ஒருமாத பால் செலவுக்கு வீட்டில் தட்டுப்பாடு நிலவுமே என்கிற அச்சமும்கூட காயத்ரிக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, தானே நாப்கின்களைத் தயாரிக்க முற்படுகிறான். அவற்றை உபயோகித்துப் பார்க்குமாறு மனைவியிடம் கேட்கிறான். அம்முயற்சி தோல்வியுற்று, மறுநாளும் அவள் தீட்டுத்துணியையே உபயோகிக்கிறாள். இப்படி லக்‌ஷ்மியின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவ, மனைவியும் ஒருகட்டத்தில் நாப்கின்களைப் பரிசோதிக்கத் தயங்குகிறாள். ஒருகட்டத்தில், தன்னைத் தானே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கிறான் லக்ஷ்மிகாந்த் சவுஹான். அப்போது அவனது பேண்டில் ரத்தக் கறையைப் பார்த்த கிராமத்தினர், ஊர் பஞ்சாயத்தில் அவனை அவதூறாகப் பேசுகின்றனர். மனைவி காயத்ரி, சவுஹானை விட்டுப் பிரிந்து செல்கிறாள். அதன்பிறகு நாப்கின் தயாரிக்கும் கனவு வெற்றியடைகிறதா, பிரிந்த மனைவியின் நிலை என்ன ஆனது... என்பதை லக்ஷ்மிகாந்த் சவுஹான் சந்தித்த அவமானங்கள் வழியே சொல்கிறார், 'பேட்மேன்'. 

எல்லோருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட ஒரு கதைக்கு கற்பனை உருவம் தருவதும், சுவாரஸ்யமான திரைக்கதை எழுதுவதும் சற்று கடினமான விஷயங்கள்தாம். அதை இலகுவாக அமைத்த விதம் இயக்குநர் பால்கியின் தொனியை மேலும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவருகிறது. என்னதான் படத்தில் எக்கச்சக்க பாஸிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், அத்தனையும் முந்தியடித்துக் கொண்டு தன் நடிப்பைப் பற்றி மட்டும் பேசவைக்கிறார், அக்‌ஷய் குமார். மனைவியிடம் குறும்பும், குழந்தைத் தனமுமாய் இருக்கும் இயல்பையும், இறுதியில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் தைரியமாக அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசும் காட்சியையும் தனது சிரிப்பிலேயே வெளிப்படுத்தியிருக்கும் விதம் படத்துக்குக் கூடுதல் பலம்.  

Padman

பெண்களின் மாதவிடாய்ப் பருவத்தை ஆண்கள் பேசுவதற்குத் தயக்கப்படுவதைவிட, முதலில் பெண்கள் தைரியமாகப் பேசவேண்டும் என்பதை மிக ஓப்பனாய்க் கூறியிருப்பது, பெரிய விழிப்பு உணர்விற்கான சிறு ஆரம்பம். பெண்கள் தன்னலம் பேணி வலிமையுடனும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை எனக் கூறியிருப்பது சமகாலத்துக்குத் தேவையாக அமைந்துள்ளது. 

இசையமைப்பாளர் அமித் திரிவேதி, காட்சிகளின், கதாபாத்திரங்களின் எமோஷன்களை இசையில் சரிவர ஆடியன்ஸிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதற்கு ஹேட்ஸ் ஆஃப். இது இயக்குநர் பால்கி முழுக்க முழுக்க இசைஞானி இளையாராஜா இல்லாமல் வேலை செய்திருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் கண்களைக்கூட பார்த்துப் பேசாத கிராமத்துப் பெண்ணாக ராதிகா ஆப்தே, தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டே இருக்கும் சோனம் கபூர் என இருவரும் நடிப்பில் தங்களை நிலை நிறுத்தினாலும், அவர்களது கதாபாத்திரம் ஆழமாக இல்லாதது திரையில் சில நெருடல்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண் - பெண் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களிடையே காதல் காட்சிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது போன்ற ஸ்ட்டீரியோ டைப் சீன்களுக்கும் குட்-பை சொல்லியிருக்கலாம். மேலும், கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்பதற்கான டீட்டெயிலிங்கையும் சேர்த்திருக்கலாம். 

'பேட்மேன்'

தமிழகத்தின் ரியல் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் கதைக்கு முலாம் பூசப்பட்டிருப்பது, 'பிராண்ட் செய்துதான் நாப்கின்களை விற்கவேண்டும். அப்போதுதான் மக்கள் அதிகம் வாங்குவார்கள்' என்ற வசனத்திலிருந்தே தெரிய வந்திருக்கிறது. இதே கதையைத் தழுவி 2017-ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'ஃபுல்லு' தவறிய பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் விஷயங்களை உட்புகுத்தி வெளிவந்துள்ளது 'பேட் மேன்'. பெண்களும் கூச்சப்பட்ட, அச்சப்பட்ட மாதவிடாய் மற்றும் சானிட்டரி நாப்கின் விஷயங்களைப் பற்றி ஒரு ஆண் பேசியதும், அதற்கென ஒரு தீர்வைக் கொடுத்து ஆண்களுக்குப் பெருமையைச் சேர்த்த இந்த 'சூப்பர்மேன்', படத்திற்கு டிக்கெட் வாங்கும் அதே தொணியில் நாளை நாப்கின்களும் வாங்குவது எந்தத் தவறும் இல்லை என்கிறான், இந்த 'பேட்மேன்'.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement