Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நீ விக்கிபாய், நான் தர்மாபாய், நாலேஜ் இஸ் பவரு, ஹானஸ்ட் இஸ் கேரக்டரு... முடியல பாஸ்!" 'இன்ட்டெலிஜென்ட்' படம் எப்படி? #Inttelligent

தனக்கு மிகவும் நெருக்கமானவரைக் கொன்றது யாரென்று தேடிப் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கும் கதாநாயகனின் பயணம்தான் தெலுங்குப் படமான  'இன்ட்டெலிஜென்ட்'      

நந்தா கிஷோர் (நாசர்)  சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திவரும் தொழிலதிபர். கூடவே, சமூக சேவைகளையும், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். நந்தாவின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருபவர், சாய் தரம் தேஜ். தன் முதலாளியின் மகள் என்று தெரியாமல் ஹீரோயினை (லாவண்யா த்ரிபாதி)  காதலிக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் நாசரின் பிசினஸ் எதிரி விக்கி பாய் எல்லோரையும் மிரட்டி வருகிறான். ஒரு கட்டத்தில் நாசரைத் தற்கொலை செய்ய வைக்கிறான் விக்கி பாய். அவனைப் பழிவாங்க, அதர்மத்தை எதிர்க்க, 'தர்மா பாய்' அவதாரம் எடுக்கிறான் தேஜா. இந்த அவதாரம் மூலம் தவறான வழியில் பணம் சம்பாதித்தவர்களிடம் பிடுங்கி, இல்லாதவரிடம் சேர்க்கும் டிஜிட்டல் இந்தியாவின் 'ராபின்வுட்' ஆகிறான் தர்மா பாய். விக்கி பாய் இவனிடம் சிக்கினானா, இல்லையா என்பதை இரண்டு மணி நேரம் இழுத்துப் பிடித்துச் சொல்லும் படம்தான், 'இன்ட்டெலிஜென்ட்'.

இன்ட்டெலிஜென்ட்

கொலை செய்வதற்கு முன், கொலை செய்வதற்குப் பின் என இரண்டு சிகரெட்களுக்காகப் பெட்டிக் கடைக்காரனைத் துப்பாக்கியால் மிரட்டும் வில்லனின் கையாள், தன் மகளின் சந்தோஷத்துக்காகக் கைதிகளை டார்ச்சர் செய்யும் இன்ஸ்பெக்டர். தொந்தியும் தொப்பையுமாய் ஹீரோவிற்கும் வில்லனுக்கும் தூதுபோகும் அடியாட்கள். வாயில் வயலின் வாசிப்பதுபோல் இழுத்து இழுத்துப் பேசி இரிடேட் செய்யும் மந்திரி கேரக்டர்... என நம்மைத் தெளியவைத்து தெளியவைத்து அடிக்கிறார், படத்தின் இயக்குநர். ஆக்‌ஷன் படத்தில் அதரப்பழசான வில்லன்கள், ஹீரோ அடித்தவுடன்  வில்லனின் அடியாட்கள் சக்திமான் மாதிரி சுற்றி விழுவது,  'நீ விக்கி பாய்; நான் தர்மா பாய்', ' நாலேஜ் இஸ் மை பவரு; ஹானஸ்ட்டி இஸ் மை கேரக்டரு' போன்ற வசனங்களையெல்லாம் கேமரா முன்னாடி பார்த்துப் பேசும்போது, நமக்கு சிரிப்புதான் வருகிறது. 

'காக்கா, நரி, வடை' கதையைவிட ஒரு நார்மலான கதையில் ரொம்ப நம்பிக்கையாக இருப்பது ஹீரோ சாய் தரம் தேஜ். சண்டைக் காட்சிகள், நடனம் என தனது டிபார்ட்மென்ட் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். லாவண்யா த்ரிபாதிக்குப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதைத் தவிர பெரிய ஸ்கோப் இல்லை. காமெடியன்களாக வரும் சப்தகிரி, பொசனி க்ரிஷ்ண முரளி, பிரம்மானந்தம் காமெடியைத் தவிர செய்ய எதுவும் இல்லைதான். ஆனால், அதையும் சரியாகச் செய்யவில்லை. இயக்குநர் வி.வி.வினாயக், சிரஞ்சீவியை வைத்து 'கைதி நம்பர் 150' என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தவர், இந்த நம்பிக்கையில் தியேட்டருக்குச் சென்றால், நம்மை சோதனையின் உச்சகட்டத்திற்குக் கொண்டு சேர்த்து விடுகிறார்.  

இன்ட்டெலிஜென்ட்

ஒட்டுமொத்தமாக இன்ட்ரஸ்ட்டை குறைத்துவிடும் திரைக்கதையில் தமனின் பாடல்களும், குறிப்பாக சிரஞ்சீவியின் 'சமக் சமக்' பாடலின் ரீமிக்ஸ், பின்னணி இசை ஆங்காங்கே நம்மைத் தண்ணி தெளித்து எழுப்புகிறது. தொடர்ந்து ஃப்ளாப் படங்களில் தனது உழைப்பை வீணடிக்கும் சாய் தரம் தேஜ், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது. மொத்தப் படத்தில் நமக்கான ஒரே விஷயம் படம் இரண்டுமணி நேரம் பத்து நிமிடங்களில் முடிவதுதான்.

மெகா கமர்ஷியல் விஷயங்களைக் கொண்டுள்ள இப்படத்தில் சிறிதளவுகூட திரைக்கதை சுவாரஸ்யம் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இப்படத்திற்குப் போனால் நம்மைப் பல கவலைகளுடன் திருப்பி அனுப்புகிறது 'இன்ட்டெலிஜென்ட்'. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்