Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``பேய் படத்துல நல்ல மெசேஜ்தான். ஆனாலும்...?’’ - நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்

Chennai: 

தங்கையின் கல்யாணத்தை நடத்த, தனக்குச் சொந்தமான திரையரங்கத்தை விற்க முடிவெடுத்துப் புறப்படும் அண்ணன். அங்கு சென்ற பின், தூக்கத்தில் தனக்கு வரும் கனவைப் பிரதிபலிக்கும் கொலைச் சம்பவங்கள். திரையரங்கத்துக்கும், நடக்கும் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம், யார் செய்கிறார்கள் என்பது போன்ற முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்த `நாகேஷ் திரையரங்கம்'. 

நாகேஷ் திரையரங்கம்

பெண் கிடைக்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் வீட்டுத் தரகர் நாகேஷுக்கு (ஆரி), அரமணா காயத்ரி சுபஶ்ரீ ஹிமாஜாவை (ஆஷ்னா ஸவேரி) முடிவு செய்கிறார்கள். 'கட்டுனா ஐ.டி-யில் வேலை பார்ப்பவனைத்தான் கட்டுவேன்' என ஒற்றைக்காலில் நிற்கும் ஹிமாஜாவுக்கு, 'நானும் நல்ல வேலைக்குப் போய் உன்னவிட நல்ல பொண்ணைக் கட்டுவேன்' என சபதம் எடுக்கிறார், ஆரி. ஆனால், ஆரியின் வேலைக்கு ஆஷ்னாவே உலை வைக்கிறார். ஆஷ்னா பார்க்கும் அந்தக் 'காமெடி'யான வேலைக்கு, ஆரி கொடுக்கும் ஸ்மார்ட் ஐடியாக்களைப் பார்த்து, காதல் கொள்கிறார் ஆஷ்னா. இதற்கிடையில் தங்கையின் காதல் விஷயம் ஆரிக்குத் தெரியவர, 'வீட்டுக்கு வந்து முறைப்படி பேச' சொல்கிறார். பேச்சு குறைபாடு உள்ள தங்கையின் திருமணத்திற்கு, '150 பவுன் நகை வேண்டும்' என்கிறார்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள். நிரந்தரமான வேலை இல்லாத ஆரிக்கு ஆறுதல் சொல்லவும், மகளின் திருமணத்தை நடத்தவும் 'ஊரில் நமக்கு ஒரு தியேட்டர் இருக்கிறது' என்ற உண்மையைச் சொல்லி, அதை விற்கும் பொறுப்பை மகன் ஆரியிடம் கொடுக்கிறார். நண்பன் காளி வெங்கட்டோடு ஊருக்குக் கிளம்புகிறார், ஆரி. தியேட்டரை விற்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடக்க, ஆரிக்கு வரும் 'கொலை' கனவுகள், நிஜத்திலும் நடக்கிறது. கனவில் வரும் கொலைகளுக்கும், அந்தத் திரையரங்கத்திற்கும் என்ன தொடர்பு, கொலைகளுக்கான பின்னணி யார்... என்பதை திகில் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார், இயக்குநர் இசாக்.

ஒரே ஷாட்டில் 'அகடம்' எனும் 2 மணி நேரத் திரைப்படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தவர் இசாக். இதுவரை சொல்லப்படாத ஒரு முக்கியமான மருத்துவ மோசடியைக் கையில் எடுத்ததற்காகவே, இயக்குநர் இசாக்கிற்கு வாழ்த்துக்கள். 

நாகேஷ் திரையங்கம்

பேசும் வசனங்களும், பாடி லாங்குவேஜும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கவில்லை என்றாலும், பேயைக் கண்டதும் வரும் பய ரியாக்‌ஷன்களிலும், சண்டைக் காட்சிகளிலும் தனது சிறப்பான உழைப்பைக் கொடுத்திருக்கிறார், ஆரி. அளவான காட்சிகளில் வரும் ஆஷ்னா ஸவேரி, ஓகே. பேயாக நடித்திருக்கும் மசூம் ஷங்கர் கவனிக்கவைக்கிறார். ஆரியின் தங்கையாக வரும் அதுல்யா ரவிக்கு பெரிய ஸ்கோப் இல்லை. 

திகில், திரைக்கதை... இதுதவிர, படத்தின் மிகப்பெரிய பலம், காளி வெங்கட். 'எப்போதான்யா பேய் வரும்' என ஆரம்பத்தில் சோம்பல் முறிக்கவைக்கும் திரைக்கதையில், எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏற்றுகிறார் காளி.  'நான் ஆணியடிக்காம இருக்குற வரைக்கும் எவனையும் ஆணியடிக்க விடமாட்டேன்டா' போன்ற ரைமிங், டைமிங் வசனங்கள், தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யங்களுக்குப் பதறுவதில் நடிப்பும் வசனங்களும் சிரிப்பு, சிறப்பு.

காரணமே இல்லாமல் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களுக்குப் பின்னால் இருந்த எக்ப்ளனேஷன் அபாராம். சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நினைவில் வைத்து, கவனமாக மெனக்கெட்டிருக்கிறார் இசாக். ஊர்ப் பக்கங்களில் இருக்கும் பாழடைந்த தியேட்டர்களைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியதில், கலை இயக்குநர் உழைப்பு தெரிகிறது. வழக்கமான க்ளிஷே காட்சிகளைத் தவிர்த்திருந்தால், கதைக்குள் வராமல் இழுத்துப்பிடிக்கும் முதல் பாதியை இன்னும் குறைத்திருந்தால், படத்தின் ரேஸிங் இன்னும் பரபரவென இருந்திருக்கும். குறிப்பாக, பிற்பாதி படம் முழுக்க தியேட்டருக்குள் நடக்கிறது. தியேட்டர் அட்மாஸ்பியருக்குத் தேவையான திகிலையும், த்ரில்லரையும் இன்னும் கூட்டியிருக்கலாம். 

நாகேஷ் திரையரங்கம்

பாடல்களில் கவனம் ஈர்க்காத ஶ்ரீகாந்த் தேவா,  பின்னணி இசையில் நன்றாகவே பயம் காட்டுகிறார். ஆனால், கொஞ்சம் புதுப்புது சவுண்ட்ஸ் பிடிங்க பாஸ்! 'ரத்தம்'தான் படத்தின் முக்கிய ஆன்மா... என்ற விஷயத்தையும், அது தொடர்பான சிம்பாலிக் விஷயங்களும் சூப்பர். ஆனால், அதையும் ஆரம்பத்திலேயே கதைக்குள் கொண்டுவந்திருக்கலாம். 

பெண் பார்க்க வரும் மாப்பிளை வீட்டார் வரதட்சணையாகக் கேட்பது, 150 பவுன் நகை. அது ஏன், அதுல்யா வாய் பேச முடியாத, பேச்சுக்குறைபாடு உடையவராக இருப்பதாலா? க்ளைமாக்ஸில் வரும் சோஷியல் மெசேஜ் ஈர்க்கிறது என்றாலும், வரதட்சணைக் கொடுமையை 'சரியென' கதையில் தாங்கிப்பிடிப்பது, 'இதுக்குத்தான் இவ்ளோ ரிஸ்க்கா' என்ற கேள்வியை எழுப்புகிறது. கமர்ஷியல் விஷயங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, முழுக்கவே அந்த சோஷியல் மெசேஜ் மற்றும் திகில், த்ரில்லை மட்டுமே கையில் எடுத்திருந்தால், 'நாகேஷ்' திரையரங்கத்திற்கு 'ஹவுஸ்ஃபுல்' போர்டு மாட்டியிருக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்